Friday, July 13, 2012

சீனாவின் இணையதளப் போர் வியூகம்- தினமணி




First Published : 06 Jul 2012 02:29:37 AM IST


அமெரிக்க வெகு ஜன ஊடகமான புளூம்பெர்க், பிசினஸ் வீக் ஆகிய இணையதளங்களை தங்கள் நாட்டில் பார்க்க முடியாதபடி சீனா சமீபத்தில் தடை செய்துள்ளது. அந்நாட்டின் துணை அதிபரான ஸி ஜிங்பிங்கின் உறவினர்கள் குவித்துள்ள சொத்துகள் குறித்த செய்தி அந்த இணையதளங்களில் வெளியிடப்பட்டதே இந்த அதிரடித் தடைக்கான காரணம். சீனாவின் அடுத்த அதிபராக முன்னிறுத்தப்பட்டுள்ள ஸி ஜிங்பிங்கின் பெயர் எவ்விதத்திலும் கெட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம்.


 வெளிநாட்டு இணையதளங்களைத் தடை செய்வது என்பது சீனாவில் புதிய விஷயமல்ல. தங்களுக்கு எதிராகவோ, தங்கள் கொள்கைகளுக்கு விரோதமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டாலும், தங்களை சிறிது முறைத்துக் கொண்டாலும், தாங்கள் கூறும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துவரவில்லை என்றாலும் உடனடித் தடைதான்.


 யூ டியூப், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டுவிட்டர், டிராப் பாக்ஸ், ஃபோர்ஸ் ஸ்கோயர் உள்ளிட்ட பல இணையதளங்கள் ஏற்கெனவே அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.


 இவ்வளவு இருந்தும் சீனாவில் தங்கள் இணையதளத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் ஆர்வம் குறைவதே இல்லை. சீனாவின் மிகப்பெரிய இணையதள சந்தையே இதற்கு முக்கியக் காரணம். இதனைக் கருத்தில் கொண்டே சீனாவை நோக்கி தொடர்ந்து தங்கள் இணையப் படையெடுப்பை மேற்கத்திய நாடுகள் நடத்துகின்றன.


 இதற்கு ஓர் உதாரணமாக, அமெரிக்காவில் பிரபலமான "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தனது சீன மொழி இணையதளத்தை சமீபத்தில் தொடங்கியது. ஆனால், அந்த இணையதளத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இணைத்து வெளியிடப்பட்ட சமூக இணையதளத் தொடர்புகள் சில மணி நேரத்திலேயே தடை செய்யப்பட்டன. இதனால்தான் மேற்கத்திய நாடுகளால் "கிரேட் பயர் வால்' என்று இணைய மொழியில் சற்று வெறுப்புடனேயே சீனா அழைக்கப்படுகிறது.


 மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம். அதுவும் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். எனவே, அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் சீன கம்யூனிஸ ஆட்சியைப் பற்றி தவறான தகவல் சென்று விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு மிகவும் கவனமாக உள்ளது.


 அதே நேரத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் போன்ற இணையதளங்கள் எந்த அளவுக்கு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சீனா அறிந்து கொள்ளாமல் இல்லை. அந்த இணையதளங்கள் தரும் "இன்பங்களை' தங்கள் நாட்டு மக்களுக்கு தங்கள் பாணியில் சீனா அளித்து வருகிறது.


 யூ டியூபுக்கு இணையாக யூகூ, டுவிட்டர், ஃபேஸ்புக்குக்கு பதிலாக சினா வெய்போ, கூகுள் தேடுபொறிக்கு நிகராக பாய்டு ஆகிய இணையதளங்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக சீனாவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சீனா வெய்போவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் 30 கோடிக்கு மேல். இது "ஒரிஜினல்' டுவிட்டரை மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட மிக அதிகம். இப்படி இணையத்தில் தனக்கென ஒரு பாணி அமைத்து செயல்பட்டு வருகிறது சீனா.


 அதே நேரத்தில் பாய்டு இணையதளத்தில் சீன கம்யூனிஸக் கொள்கைகளுக்கு எதிரான தகவல்களையும், அரசுக்கு எதிரான செய்திகளையும் தேடிப் பெற முடியாது. உதாரணமாக சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான முக்கியப் போராட்டமான தியானென்மென் சதுக்கப் போராட்டம், அப்போது நிகழ்ந்த படுகொலைகள் குறித்த விவரத்தை கூகுளில் தேடிப் பெற முடியும். ஆனால், சீனாவின் பாய்டு தேடுபொறி அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாகவே காட்டிக் கொள்ளாது. சீன ஆட்சிக்கு எதிரான பல வரலாற்று உண்மைகளையும், நிகழ்கால நிஜங்களையும் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு காட்டுவதேயில்லை.


 சீனாவை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ளது உலகின் மிகப்பெரிய கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சி. தனது உறுதியான கட்டமைப்பு, கடுமையான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து சீனாவை ஆட்சி செய்து வருகிறது.


 டி.வி.யில் மக்கள் என்ன பார்க்க வேண்டும், குழந்தைகள் பள்ளியில் என்ன படிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்து வருகிறது என்ற நிலையில் இணையத்தில் எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்வது பெரிய விஷயமில்லைதான்.


 இவையெல்லாம் ஒருபுறமிருக்க தங்கள் இணைய சரக்குகளை சர்வதேசச் சந்தைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களை சீனா முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது.


 பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மேற்கத்திய வல்லரசுகளுக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சீனா ஏற்கெனவே நிரூபித்து விட்டது. அடுத்து இணையப் போருக்கும் தயாராகி விட்டது.


 இதில் வெற்றிபெற மேற்கத்திய நாடுகளிடம் சீனா முதலில் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்டிருக்கும். எனவே சீனாவின் இணையப் போர் உத்தியை விரைவில் பார்க்கலாம்.
கருத்துகள்

 நம் நாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் எமெர்ஜென்சி காலத்தில் முயன்ற போது மக்கள் விரும்பவில்லை. இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை. 
By Tamilian 
7/7/2012 12:22:00 PM
 சீனாவில் லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை. நமது நாட்டில் மேள, தாளத்தோடு வரவேற்பு எப்படி நாம் முன்னுக்கு வருவோம். இங்கு அதிகாரத்தில் இருபவனும் கள்ளன், எதிர் கட்சியா இருபவனும் கள்ளன் நாடு எங்க நன்றாகும்? 
By பிள்ளை - கத்தார் 
7/6/2012 9:26:00 PM
 புதிய விஷயங்களை அறிந்து கொண்டோம் பயனுள்ள கட்டுரை..! இத்தகைய கட்டுப்ப்டுகளால் தான் இன்று சீனா வல்லரசாக உயர்ந்து நிற்கிறது போலும். 
By வசந்த் 
7/6/2012 3:31:00 PM

0 comments:

Post a Comment

Kindly post a comment.