Friday, July 13, 2012

விடைகள் கிடைக்காத வினாக்கள் -தினமணி




First Published : 10 Jul 2012 01:33:40 AM IST



வானமும், பூமியும் இயற்கை தந்த மாபெரும் நன்கொடைகள்; கடலும், மலைகளும், காடுகளும், நதிகளும் நமக்குக் கிடைத்த வரங்கள்; இவையனைத்தும் மனித குலத்துக்குப் பொதுவானவை. மனித இனம் தங்கள் நலத்துக்காகவே போற்றிப் பாதுகாக்க வேண்டியவை.


உலகில் மூன்றில் இரண்டு பங்காக விரிந்து, பரந்து கிடக்கும் கடல் நமக்குக் கிடைத்தற்கரிய கருவூலமாகும். முத்து, பவளம் முதலிய நவமணிகளுடன் எண்ணற்ற மீன் வளங்களையும் வேண்டுமட்டும் வழங்கிக் கொண்டேயிருக்கிறது. இதனை நம்பி வாழும் மீனவர்கள் கோடானு கோடி பேர்.
 "மீன் பிடித்தல்' என்னும் தொழில் உலகம் எங்கும் செழித்து - கொழித்து வளர்ந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் இத்தொழில் இப்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.


இதற்குக் காரணம் இலங்கைக் கடற்படை மட்டுமல்ல, மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும்தான்.


இந்தியாவின் தென்கோடிவரை பரவிக் கிடக்கும் தமிழ்நாட்டின் கடற்கரையோரமாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்களே மீனவர்கள். அவர்களது வாழ்வும், சாவும் அங்கேதான்.


அவர்களை அந்தப் பகுதிகளிலிருந்து விரட்டிவிடப் பார்ப்பது என்ன நியாயம்? அவர்களுடைய வாழ்வாதாரம் சிதைக்கப்படுவது இலங்கைக் கடற்படையால் மட்டுமல்ல, இந்தியக் கடற்படையாலும்தான்.


எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி அவமானப்படுத்தும்போது இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது? வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அல்லது அதுவும் சேர்ந்து தமிழக மீனவர்களை எச்சரிக்கிறது; வழக்கும் பதிவு செய்கிறது
.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜூன் 28 அன்றும் கடிதம் எழுதியுள்ளார்.


கடந்த ஜூன் 25 அன்று இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 704 இயந்திர மீன்பிடிப் படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றன. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். மீனவர்களின் வலைகளையும் கயிறுகளையும் அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களை விரட்டியும் அடித்துள்ளனர். இதனால் மீனவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும், சமூக விரோதிகளாலும் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.


கடந்த 12 மாதங்களில் அப்பாவி மீனவர்கள் தாக்கப்படுவது பலமுறை மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு போகப்பட்டுள்ளது.


எந்தவிதமான அரசியல் மற்றும் பூகோள எல்லைகள் வரையறை இன்றி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வந்துள்ளனர்.


இந்த உரிமை இப்போது பறிக்கப்பட நினைப்பது எந்தவிதச் சர்வதேசச் சட்டத்துக்கும் விரோதமாகும். எனவே, இது தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என மீனவர்கள் கோருகின்றனர்
.
தமிழ்நாட்டு மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடற்பரப்புக்கு வருவதாகவும், சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரத்தில் நடைபெற்ற தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவை மாநாட்டில் ஜூன் 20 அன்று இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.


 இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், "இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்' என்று அடையாளப்படுத்தியுள்ளார். பிரச்னைக்குரிய பகுதியை நீரிணை என்றும் சுட்டியுள்ளார்.


இப்படிச் செய்கிறவர்கள் மீது, சர்வதேசக் கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் வகையிலும் பேசியுள்ளார். அதாவது இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதாகக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவரது இந்தப் பேச்சு உணர்த்துகிறது.


இந்திய மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், மீன்பாடுகளைக் கொள்ளையடித்தும், மீன் வலைகளை அறுத்தும் இழப்பை ஏற்படுத்தி வந்த இலங்கைக் கடற்படையினர் அண்மைக்காலமாக மீனவர்களைச் சுடுவதோடு காயப்படுத்தியும் கடலில் தள்ளியும் அத்துமீறி செயல்படுகின்றனர்.


இனி மீனவர்களைக் கைது செய்தால் 20 ஆண்டுகள் வரை அவர்களைச் சிறையில் தள்ள, இப்போதே சர்வதேச மாநாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.


இந்தியா தனது உரிமைகளை விட்டுக்கொடுத்து இலங்கையுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால், இலங்கையைப் பொருத்தவரை இந்தியாவைத் தனது தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் உறவை வலுப்படுத்திக் கொள்ளவே துடிக்கிறது.


 "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்று கூறுவார்கள். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவியும், படைப்பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருப்பது, இந்திய மீனவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்காகத்தானா?


இந்தியப் பிரதமரும், இலங்கை அதிபரும் அண்மையில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டின்போது சந்தித்துப் பேசியுள்ளனர். போதாக்குறைக்கு இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் கடந்த ஜூன் 29 அன்று இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சிறுபான்மையினருடன் அரசியல் ரீதியாக நல்லிணக்கம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


 ""மீனவர்கள் பிரச்னை தொடர்பாக 2008-ம் ஆண்டு அக்டோபரில் இருதரப்பும் ஒப்புக்கொண்ட உடன்பாட்டை தாற்காலிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; விரைவில் நிரந்தரத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.


இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகளை எட்டியுள்ளனர். இது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்...'' என்று சிவசங்கர மேனன் கூறியுள்ளார்.


இந்தச் சந்திப்பு நடந்த பிறகும் நிலைமையில் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமை, சம நீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது என்றும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகுடியேற்றம், மறுவாழ்வு ஆகிய பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்


 இந்திய மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாதவர்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்திட நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது.


இத்தாலி கப்பலினால் மோதுண்டு இரண்டு கேரள மீனவர்கள் இறந்தபோது, கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியும், கேரள அரசியல்வாதிகளும் முழங்கிய முழக்கங்கள் கொஞ்சநஞ்சமா?


 தமிழ்நாட்டு மீனவர்கள் தினந்தோறும் செத்துச் செத்துப் பிழைக்கிறார்களே, இதுபற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் எடுத்த நடவடிக்கை ஏதேனும் உண்டா?


 நமக்குச் சொந்தமான கச்சத்தீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்பு தர முடியாமல், மத்திய அரசு விழிக்கிறது. வல்லரசு கனவு காணும் இந்தியா, தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் பழிக்காதா?


 கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாக 75 கோடி அமெரிக்க டாலர்களும் (சுமார் ரூ. 4,125 கோடி), நிதி உதவியாக 35 கோடி அமெரிக்க டாலர்களும் (ரூ. 1,925 கோடி) தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு விலைதான் இந்திய மீனவர்களின் உயிரும், உடைமையுமா? தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.


 ""மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
 மாண்பினை இழப்பாரோ?
 கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
 கைகொட்டிச் சிரியாரோ?''
 -என்று சுதந்திரத்தின் பெருமையைப் பேசினார் பாரதியார்.


விடுதலை பெற்ற நாட்டிலும் மீனவ மக்கள் சுதந்திரமாகத் தங்கள் தொழிலைச் செய்ய முடியவில்லை என்பது வேதனையானது. இந்திய நாட்டின் கோரிக்கையை இலங்கை அரசு மதிக்கவில்லையா? 
இந்திய அரசாங்கமே தமிழக மீனவர்களைத் தங்கள் குடிமக்களாக ஏற்கவில்லையா?
 வினாக்கள் தொடர்கின்றன; விடைகள்தாம் கிடைக்கவில்லை.
கருத்துகள்
 வரம் கொடுத்தவன் தலையில் கை வைப்பது என்பதன் அர்த்தம் புரிகிறது.ஆனால் கொடுக்கிறவன் கேனயன் மாதிரி தெரியலையே!அவன் தெரிந்தே கெடுக்கிற செயலும் வெளிப்படை!..நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்,அது வாலை ஆட்டிகிட்டு எங்கே போகும்...நான் அண்ட வீட்டுக்காரனைச் சொல்லலை! 
By பி.ஸ்தனிஸ்லாஸ் 
7/10/2012 6:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

0 comments:

Post a Comment

Kindly post a comment.