Friday, July 13, 2012

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்-தினமணி




First Published : 09 Jul 2012 02:37:50 AM IST

இந்தியாவிலேயே மதுவிலக்கை அமல் செய்வதில் முன்னோடியாக இருந்த தமிழ்நாடு இன்று மது விற்பனையிலும் நுகர்விலும் முதலிடத்தைப் பிடிக்கப் பார்ப்பது மிகவும் வருந்தத்தக்கது.
நம்முடைய அரசு மக்கள் நல அரசாகவே எப்போதும் செயல்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் அறிவுறுத்துகிறது. அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகள் பகுதி அரசின் ஒழுக்கம் சார்ந்த கடப்பாடுகளை வலியுறுத்துகிறது.
பொது உடல் நலத்தை மேம்படுத்த மக்களின் ஊட்டச்சத்து அளவையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது அரசியல் சட்டத்தின் 47-வது பிரிவு. மயக்கமூட்டும் மது விற்பனையைத் தடை செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க இது விழைகிறது.
 குஜராத் மாநிலத்தைத் தவிர வேறேங்கும் இப்போது மதுவிலக்கு நடைமுறையில் இல்லை.
தமிழகத்தில் மதுவிலக்கு: மூதறிஞர் இராஜாஜி 1937-ல் சென்னை மாநிலத்தின் பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றதும், இந்தியாவிலேயே முதன் முதலாக சேலத்தில் மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார். மது வருவாய் இழப்பை ஈடுகட்ட விற்பனை வரியை நாட்டிலேயே முதன் முதலாக நடைமுறைப்படுத்தினார்.
கருணாநிதி திறந்து வைத்தார்: 1971 பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு. கருணாநிதி நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக மதுவிலக்கைத் தளர்த்தி தமிழ்நாட்டில் கள், சாராயக் கடைகளைத் திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் ஆட்சியில் டாஸ்மாக்:எம்ஜிஆர் ஆட்சியில் 1983-ல் தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கியது. செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் 2003 அக்டோபரில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937) திருத்தப்பட்டு மாநிலத்தில் சாராயக் கடைகள் நடத்தும் ஏக போக உரிமை டாஸ்மாக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாஸ்மாக் வருவாய் வளர்ச்சி:எம்.ஜி.ஆர். டாஸ்மாக் தொடங்கியபோது 1983-இல் வந்த வரி வருவாய் 183 கோடி ரூபாய். இன்று வரிவருவாய் 18 ஆயிரம் கோடி ரூபாய். அரசின் நாளைய இலக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
மதுவினால் ஏற்படும் தீமைகள்: மது அருந்துவதால் உடல் நலம் கெடுகிறது. மன நலம் சிதைகிறது. குடும்ப நலம் சீரழிகிறது. வறுமை வளர்கிறது. பண்பாடு அழிகிறது. கிரிமினல் குற்றங்களின் எண்ணிக்கை கூடுகிறது. வேலை நேரம் குறைகிறது. நாட்டின் வளர்ச்சி தடைப்படுகிறது. வாங்கும் சக்தி பறிபோகிறது.
வாழ்க்கையே சுமையாகிறது. சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. மூளைச் சிதைவு, இதய நோய், நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், நினைவாற்றல் குறைதல், கல்லீரல் கெடுதல் என்று அடுக்கடுக்கான நோய்களின் முற்றுகையில் ஆரோக்கியம் பறிபோகிறது.
இத்தனை தீமைகளுக்கு வழிவகுத்துவிட்டு மறுபக்கம் உயிர் காப்பீடுத்திட்டம், மருத்துவ வசதி விரிவாக்கம் என்று அறிவிக்கிறது தமிழக அரசு.
 
டாஸ்மாக் வருவாய் குஜராத்தில் இல்லையே: மதுவருவாய் இல்லாத குஜராத் அரசு, இந்தியாவிலேயே அதிக மதுவருவாய் ஈட்டும் தமிழக அரசு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். 2008-11 நிதியாண்டுகளில் குஜராத் அரசின் மதுவருவாய் (மருத்துவ ரீதியாக உற்பத்தியாகும் மதுவின் மீது விதிக்கப்படும் வரி மூலம்) ஆண்டு சராசரி 54.90 கோடி ரூபாய்.
அதே நிதியாண்டுகளில் தமிழக அரசின் ஆண்டு சராசரி மதுவருவாய் 12,415 கோடி ரூபாய். அப்படியென்றால், குஜராத் அரசைவிட தமிழக அரசுக்கு சுமார் 12,400 கோடி ரூபாய் கூடுதலான வருவாய். 2012 நிலவரப்படி 18 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்.
ஆனால்,குஜராத் மாநில மொத்த உற்பத்தியில் அரசின் வரி வருவாய் 7.6 சதவிகிதம். தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் அரசின் சாராய வருவாய் தவிர்த்து வரிவருவாய் 6.15 சதவிகிதம் மட்டுமே.
கலால் வரி: தமிழக அரசின் கலால் வரி (சாராய உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி) வருவாய் 2004-05இல் 2,549 கோடி ரூபாய். இது மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 13.17%. இதுவே 2011-12 இல் 10,191.20 கோடியாக உயர்ந்ததனால், மாநில சொந்த வரி வருவாயில் 17.04% ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் மாநிலச் சொந்த வரி வருவாய்ப் பெருக்கத்திற்கு மிக முக்கிய காரணம் சாராயத்தின் மீதான கலால் வரி என்று தெளிவாகிறது. இதில் சாராய விற்பனை வரி சேர்க்கப்படவில்லை.
 விற்பனை வரி வருவாயில் சுணக்க நிலை: 2004-05 நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் விற்பனை வரியின் பங்கு 67.14% ஆக இருந்தது. 2010-11 இல் இது 58.19% ஆக குறைந்துவிட்டது. இந்த விற்பனை வரியில் சாராய விற்பனை வரியும் அடக்கம். சாராய விற்பனை வரியை நீக்கிவிட்டால் மற்ற விற்பனை வரியின் பங்கு வெகுவாகக் குறைந்துள்ளதை அறியலாம்.
விற்பனை வரியை ஒழுங்காகத் திட்டமிட்டு வசூலிப்பதன் மூலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதனால் ஏற்படும் இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடியும்.
முத்திரைத்தாள் கட்டண வரியைப் பெருக்க வேண்டும்: 2004-05 இல் தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் 8.29% ஆக இருந்த முத்திரைத்தாள் கட்டண வரி, 2011-12 இல் 10.86% ஆக உயர்ந்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இலவச திட்டங்களைக் கைவிட வேண்டும்: இலவச திட்டங்கள் மூலம் ஓர் அரசு மக்களின் ஏழ்மையை அகற்ற முயல்வது, ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் சேகரிப்பதற்கு ஒப்பானது.
2011-12 இல் தமிழக அரசின் டாஸ்மாக் வருவாய் 18 ஆயிரம் கோடி. கலால் வரி, விற்பனை வரி மூலம் மட்டுமே அரசுக்கு இந்த வருவாய் எனில் சாராயச் சரக்குகளின் மொத்த விற்பனை சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் மூன்று வகைகளில் விலை நிர்ணயம் செய்து அரிசியை அனுப்புகிறது. வேலைக்கான உணவு திட்டத்தின் கீழ் ஒரு கிலோ 3 ரூபாய். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூபாய் 5.65. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூபாய் 8.30 ஆகும்.
தமிழக அரசின் இலவச அரிசி மத்திய அரசு, நிர்ணயித்த அதிகபட்ச விலையான ரூ.8.30க்கு வழங்கப்படுவதாகவே வைத்துக் கொண்டாலும் ஒரு குடும்பத்திற்கு மாதம் 20 கிலோ வீதம் 5 ஆண்டுகள் வழங்கினாலும் ரூ.9,960 மட்டுமே ஆகும்.
 5 ஆண்டுகளுக்கு
 இலவச அரிசி ரூ.9,960.00
 தொலைக்காட்சி
 பெட்டி ரூ.2,700.00
 மிக்ஸி ரூ.800.00
 கிரைண்டர் ரூ.1,500.00
 மின்விசிறி ரூ.500.00
 ஒவ்வொரு ஐந்தாண்டும் வழங்கப்பட்டாலும் மொத்தம் ரூ.15,460.00
 
குடிக்கு அடிமையாகிவிட்ட ஓர் ஏழைத் தமிழர் ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி பாட்டிலைப் பயன்படுத்தினால் 5 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளில் 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மதிப்பு சுமார் 16 ஆயிரம் ரூபாய்.
மதுவிலக்குக் கொள்கை: தமிழக அரசுக்கு வரையறுக்கப்பட்ட தெளிவான மதுவிலக்குக் கொள்கை தேவை.
 அ. கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஒவ்வொரு மாதமும் மதுபுட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே வரவேண்டும்.
 ஆ. மது அருந்துவோருக்குக் குறிப்பிட்ட அளவு மதுவை நிர்ணயித்து இசைவாணைச் சீட்டு வழங்க வேண்டும்.
 இ. அறைக்குள் குடிப்பவர், குடித்த நிலையில் பொது இடங்களில் தென்பட்டால் அபராதம், சிறைவாசத்திற்கு ஆளாக வேண்டும்.
 ஈ. பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நாள் வரை, மதுக்கடைகள் மூலம் வரும் வருவாய், மதுவின் தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கானத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் இனிவரும் தேர்தல்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க முன்வரவேண்டும்.
பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், தொழிற்கூடங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் அவற்றை மூடுவதற்கு அமைதி வழியில் அறப்போரில் ஈடுபட வேண்டும்.
 ""எங்களுக்கு மதுக்கடைகளும் வேண்டாம், இலவசங்களும் வேண்டாம்"" என்று அரசுக்கு அனைவரும் உரத்த குரலில் உணர்த்த வேண்டும்.

 தமிழருவி மணியன்,
 நிறுவனத் தலைவர்,
 காந்திய மக்கள் இயக்கம்.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.