Friday, July 13, 2012

முழுக்க பெண்களே உள்ள செக்யூரிட்டி அமைப்பு! -தினமணி


கதிர்


First Published : 08 Jul 2012 12:00:00 AM IST


நூற்றுக்கு நூறு ஆண்களே உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் "ரவீந்திரா சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நடத்தி வருகிறார் ஜி.ஸ்ரீ வித்யா. 3000 க்கும் மேற்பட்ட ஆண்கள் வேலை செய்யும் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவருக்கு, 2011 ஆம் ஆண்டுக்கான "சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது' கிடைத்து இருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து...

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அம்மா, அப்பா இருவரும் வானொலியில் கர்நாடக இசைப் பாடகர்கள். பெண் என்றால் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது; வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். எனக்கோ காவல்துறையில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. நான் நல்ல உயரம் என்பதால் கூடைப் பந்து விளையாடுவேன்.


எம்பிஏ படித்த நான், "டயல்டோன் ஹாட் லைன் சர்வீஸஸ்' என்ற சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். யாராவது போன் செய்தால், வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கவோ, ப்ளம்பிங் வேலை செய்யவோ ஆட்களை அனுப்புவோம். இந்த நிறுவனத்தை நடத்தியவர் டாக்டர் ரவீந்திர பத்மநாபன். பின்பு அவர் 1992 இல் "டி குரூப் செக்யூரிட்டி சர்வீஸஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்று அவர் சொன்னார்.

எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் ரவீந்திர பத்மநாபன் மறைந்துவிட்டார். அதன் பிறகு அதை எடுத்து நடத்த அவருடைய குடும்பத்தில் ஆட்கள் இல்லை. நான் துணிச்சலாக எடுத்து நடத்தினேன்
.
முதலில் சில அபார்ட்மென்களுக்கும், சிறிய சிறிய நிறுவனங்களுக்கும் செக்யூரிட்டிக்காக பணியாளர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். நான் பொறுப்பேற்றதும் பெரிய நிறுவனங்களை அணுகினேன். 1995 இல் எல் அண்ட் டி நிறுவனத்தினர் 90 பாதுகாவலர்கள் உடனே வேண்டும் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் எங்களிடம் அவ்வளவு பேர் இல்லை. நான் உண்மையைச் சொன்னேன். என் நேர்மையான பதில் அவர்களுக்குப் பிடித்துப் போனது. எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அதைப் போன்ற நிறைய பெரிய நிறுவனங்கள் எங்களுக்குக் கிடைத்தன.

எந்த ஒரு வேலை செய்தாலும் அதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். செக்யூரிட்டி வேலை என்றால் என்ன? அதில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் எவை? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள நானே, எல் அண்ட் டி நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆபிஸில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டேன்
.
அதுபோல இரவு நேரங்களில் எங்களுடைய செக்யூரிட்டி பணியாளர்கள் நன்கு வேலை செய்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்ள யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவு நேரங்களில் துணிச்சலுடன் தனியாக இன்ஸ்பெக்ஷன் செல்வேன். இதனால், எங்களுடைய செக்யூரிட்டி சேவை தரமானதாக இருக்கிறது
.
2003 இல் "ரவீந்திரா சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இதை ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினேன். சென்னை, கோவை, பெங்களூரு, ஓசூர், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.

எங்களுடைய நிறுவனத்தில் 3 வருடங்களுக்கு மேல் வேலை செய்கிற பணியாளர்களின் ஒரு குழந்தைக்குக் கல்விக் கட்டணத்தை நாங்களே செலுத்தி விடுகிறோம். அதுபோல மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கும் கல்வி கற்க உதவுகிறோம்.

முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய பெண்கள் செக்யூரிட்டி படையை ஏற்படுத்த ஆசை. பெண்களுக்கு பகல் நேர வேலை மட்டுமே தர வேண்டும் என்ற விதி உள்ளதால், இரவு நேர வேலைகளுக்கு அவர்கள் வரத் தேவையில்லை. சிறிய வணிக நிறுவனங்களில் குறைந்த கூலியில் வேலை செய்யும் பெண்கள், இந்தச் செக்யூரிட்டி வேலையில் அதைவிட அதிக சம்பளம் அவர்களுக்குக் கிடைக்கும்'' என்கிறார்.
கருத்துகள்

 குட் நல்ல முன்னேற்றம் , அப்பிடியே திருச்சியிலும் தொடன்குணா எங்களுக்கும் உதவியா இருக்கும் வாழ்த்துக்கள் வினு 
By vinu 
7/12/2012 3:10:00 PM

0 comments:

Post a Comment

Kindly post a comment.