Thursday, July 26, 2012

வள்ளலாரிடம் படித்த உருவகக் கதை :-



திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் ( 1823- 1874 ) 19 ஆம் 

நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர். யாரிடமும் கல்வி கற்காமல், 

பள்ளிக்குச் செல்லாமல் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபோதே புராணப் 

பிரசங்கம் செய்யத் தொடங்கியவர்.

பெரிய புராணத்தின் முதற் பாடலின்  ”உலகெலாம் “  என்று

துவங்கும் பாடலில் , உலகு என்ற துவக்கச் சொல்லுக்குப் பொருளாகக்

கூறியவற்றை 1981- ஆம் ஆண்டு வெளியிட்ட, அருட்பா உரைநடைப் 

பகுதி  என்னும் நூலில், மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்னும் 

தலைப்புடன்  85 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

சென்னை, முத்தியாலுப் பேட்டை, லிங்கிச் செட்டித் தெருவில் இருந்த

சோமுச் செட்டியார் வீட்டில், தமது தமையனாருக்குப் பதிலாகப் 

பேசும்பொழுது வயது ஒன்பதுதான் என்பது  பெரு

வியப்பினைத் தருகிறதல்லவா?.


33 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த  வள்ளலார்  பின்னர் வடலூருக்குச்

சென்று விடுகின்றார். சென்னையில் இருந்த அவரது நண்பர் முத்துசாமி

என்பவருக்குத் திருமணம் நிச்சயமாகின்றது. அவர் தனது திருமணத்திற்கு

வள்ளலார் வரவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் வள்ளலார்

அதுசமயம் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நிலையில்

உடல் நலத்தோடு இல்லை.

எனவே, 412 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவினை எழுதி, 

நண்பர் கொந்தமூர் சீனிவாச வரதாச்சாரியார் மூலமாக, நேரில், தருமாறு

அனுப்புகின்றார். இதனை, “இராமலிங்கம் எழுதி விடுத்த ”மயலரு சோபன 

வாசகம் “ என்று கூறுகின்றார். இப்பாடலை ஊரன் அடிகள் பதிப்பில் பக்.1099-

1010 பக். காணலாம்.

அது  ஒரு உருவகக் கதையாக உருவெடுத்துள்ளது.

“ என் பெயர் ஏழை. எனது முதல் மனைவி ’ஆணவம்’ 

அவளது மகன் ’அஞ்ஞானம்’ 

இரண்டாவது மனவி ’மாயை’

இவள் பெற்ற பிள்ளைகள் நால்வர்,

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பது அவர்களது பெயர்கள்.

மூன்றாவது மனைவி ’ காமியம்’

அவளுக்கு மூன்று பிள்ளைகள்.

அவர்கள் பெயர்கள், சத்துவம், இராசசம், தாமசம்.

இந்த மூன்று மனைவிகளோடும், எட்டுப் பிள்ளைகளோடும்,

ஏழையாகிய நான், ஒன்பது ஓட்டைகள் உள்ள,

ஒரு வாடகை வீட்டில் வாழ்கின்றேன்

இந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவர்.

வாதம், பித்தம், கபம் என்ற பெயர் கொண்ட,

அவர்களுக்கு நான் தினம்தோறும் 

மூன்றுமுறை  வாடகை கொடுக்க வேண்டும்.

சற்றே தவறினால் அவர்கள் துன்புறுத்துவர்.

எனவே, என்னால் திருமணத்திற்கு வர இயலாது...

இவற்றை அலசி ஆராய்ந்து விளக்கம் தர 

 வல்லமை மிகு மின்நண்பர்கள்  உளர்.

 உதவி:- டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் எழுதி, 2003-ல் கலைஞன் பதிப்பகம்

வெளியிட்ட, இராமலிங்க அடிகள் நூல்/ 

அதற்கு  எழுதப்பட்ட அணிந்துரையிலிருந்து

 எடுத்தாளப்பட்டது. 

எழுதியவர்

Er.C.S. Kuppuraj, B.E. chennai-25. 

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 



0 comments:

Post a Comment

Kindly post a comment.