Thursday, July 26, 2012

மண்ணே மருந்து - கே.என். இராமச்சந்திரன்

ராமசந்திரன்First Published : 26 Jul 2012 12:49:48 AM IST


புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த சேரிக் குழந்தைகளைப் பார்த்த ஒரு தாய் ""இப்படி மண்ணிலேயும் குப்பையிலும் விளையாடுகிற பிள்ளைகளெல்லாம் எவ்வளவு ஆரோக்கியமாயிருக்கு! என் பிள்ளைகளைத் தூசு தும்புகூட அண்டாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறேன், இருந்தாலும் ஆயிரம் வியாதிகள் படுத்துது!'' என்று அங்கலாய்த்தாள்.
கிராமத்திலிருந்து வந்திருந்த பாட்டி ""நீ பொத்திப் பொத்தி வளர்க்கிறதுதான் தப்பு!'' பிள்ளைகள் மண்ணைத் தின்னால்தான் வியாதி வெக்கையெல்லாம் வராது!'' என்றாள். இங்கு அனுபவம் ஓர் அறிவியல் உண்மையை வெளிப்படுத்தியது.  (நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் திருக்கோவிலில் கிடைக்கும்  புற்றுமண் பல  நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்ப்டுகின்றது. )


அண்மையில் அமெரிக்காவில் உள்ள சிசு நல மருத்துவர்கள் இதே கருத்தை நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபரின் மனைவியான மிஷல் ஒபாமா வெள்ளை மாளிகையில் பூச்சி மருந்துகளோ, வேதி உரங்களோ பயன்படுத்தப்படாத காய்கறித் தோட்டத்தை அமைத்துள்ளார். அவ்வாறு இயற்கைமுறை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பொருள்களை உண்பதனால் மண்ணிலுள்ள நலம் தரும் நுண்ணுயிரிகள் உடலுக்குள் குடியேறும்; அவை பல நோய்களைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் சொன்னதை அவர் ஏற்றுக் கடைப்பிடித்ததன் மூலம் அமெரிக்காவில் இயற்கைமுறை விவசாயத்துக்கு ஓர் உந்துதலை உண்டாக்கியிருக்கிறார்.

 உணவு மூலம் உடலுக்குள் புகுகின்ற நுண்ணுயிரிகள் எல்லாமே தீயவையல்ல. உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவிசெய்து ஒத்துழைக்கும் நண்பர்களும் அவற்றிலுண்டு. இன்றளவும் நமது கிராமங்களில் வயிற்று உபாதைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்குப் புற்று மண்ணை தாய்ப்பாலில் குழைத்து நாக்கில் தடவுவார்கள். அது உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நுண்ணுயிரிகளை அறிமுகப்படுத்தி அவற்றுடன் ஒத்துப்போகவும், தேவைப்பட்டால் அவற்றை எதிர்த்துப் போரிட்டு அழிக்கவும் பயிற்சி தருவதாக அமையும் என விஞ்ஞானம் விளக்கும்.

கடந்த சில பத்தாண்டுகளில் முன்னேறிய நாடுகளில் ஒவ்வாமைகள், நோயெதிர்ப்பு அமைப்பின் பிழைகளால் சொந்த உடல் ùஸல்களே தாக்கப்படும் "ஆட்டோ - இம்யூன்' கோளாறுகள் போன்றவை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. அதற்கு நமது உடல் அன்னிய நுண்ணுயிரிகளுடன் ஊடாட்டம் செய்வதற்கான வாய்ப்புகளைத் தடை செய்தது ஓரளவுக்குக் காரணம் என மருத்துவ ஆய்வர்கள் கூறுகிறார்கள்.

தொழிற்புரட்சியும் நவநாகரிகப் பழக்கவழக்கங்களும் வேரூன்றியதற்கு முன்பான காலங்களில் உணவின் மூலமும் குடிநீரின் மூலமும் தங்கு தடையின்றி நம் உடலுக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த நல்ல மற்றும் தீய நுண்ணுயிரிகள் நோயெதிர்ப்பு அமைப்புடன் சமரச சகவாழ்வு வாழ்ந்து வந்தன. காக்க வேண்டியவற்றைக் காத்து, அழிக்க வேண்டியவற்றை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு சமநிலையைப் பராமரித்தது. அதன் காரணமாக அன்னியப் பொருள்கள் உட்புகும்போது உடலில் அதீதமான ஒவ்வாமை எதிர்வினைகள் தோன்றாது தடுக்கப்பட்டன.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் மண்ணில் உள்ள சில வகை நுண்ணுயிரிகளை உடலுக்குள் புகுத்தி ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவற்றுடன் ஊடாட்டம் செய்யப்பயிற்சி அளித்து உடலில் அதீதமான எதிர்வினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

 இதன் மூலம் முதல் வகை நீரிழிவு, குடல் அழற்சிகள், "மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ்' (ùஸல் தடிப்பு) போன்ற ஒவ்வாமை காரணமாக வரும் நோய்களைத் தடுக்க முடியும்
.
முன்னேறிய நாடுகள் உடல் தூய்மைக்கு முன்னுரிமை தந்து கைகளைக் கழுவ வைப்பதை ஓர் இயக்கமாகவே நடத்துகின்றன. நீரைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் கிருமி நீக்கியில் ஊறிய காகிதக் கைக்குட்டைகளும், உள்ளங்கையில் தடவிக் கொள்கிற கிருமி நீக்கிச் சொட்டுகளும் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன. கிருமி நாசினி சோப்புகளைத் தேய்த்துத் தினமும் இரண்டு மூன்று முறை குளிக்கிறோம். உடைகளைத் தினமும் கிருமி நாசினி அடங்கிய சவர்க்காரங்களைக் கொண்டு சலவைசெய்து உடுத்துகிறோம். வாய் நாற்றத்தையும், வியர்வை நாற்றத்தையும் தெளிப்பான்கள் மூலம் போக்குகிறோம்.

வீடுகளில் மண் தரைகளுக்குப் பதிலாகப் பீங்கான் வகை ஓடுகள் பாவப்படுகின்றன. குடிநீர் பல கட்டங்களாகச் சுத்திகரிக்கப்பட்டுப் பருகப்படுகிறது. உணவுகளில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கக் குளிர்சாதனப்பெட்டிகள் பயன்படுகின்றன. தரைகள் கிருமி நாசினித் திரவங்களால் கழுவப்படுகின்றன.
 வீடுகளின் கால்நடைத் தொழுவங்கள் நகருக்கு வெளியில் நாடு கடத்தப்பட்டுவிட்டன. இந்த மாதிரியான சுத்த சுகாதார நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றாலும் அவற்றின் காரணமாகப் பல புதிய நோய்களும் தோன்றியுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவையெல்லாம் மனிதச் செயல்களால் மட்டுமே தோன்றியவை.

கிருமி அச்சமுள்ள மக்கள் நவீனமான அங்காடிகளில் அதீதமாகச் சுத்திகரிக்கப்பட்ட காய்கறிகளையும் உணவுப் பொருள்களையும் நிம்மதியாக வாங்கி உண்ணலாம். ஆனால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைச் சோம்பேறியாக்கி விடுகிற ஆபத்து ஏற்படுவதை அவர்கள் உணர மாட்டார்கள்
.
கிருமிகளே அற்ற உணவுகள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அன்னியமானவை. உண்மையில் நோய் எதிர்ப்பு அமைப்பு ஓர் அற்புதம். அது பல்வேறு உணர் கூறுகளின் தொகுப்பு. மூக்கும் நாக்கும் மணத்தையும் சுவையையும் ஏற்பி ùஸல்கள் மூலம் சோதித்து உண்ணத் தக்கதையும் உண்ணத் தகாததையும் பிரித்தறிவதைப் போலவே நோய் எதிர்ப்பு அமைப்பும் நல்லவை, தீயவை என உடலுக்குள் புகும் நுண்ணுயிரிகளைப் பிரித்தறிந்து அடையாளம் காணும் ஏற்பிகளைக் கொண்டிருக்கிறது. நல்லவற்றை வரவேற்றுக் குடியுரிமை வழங்குகிறது.

தீயவற்றை எதிர்த்து அழிக்கச் சிப்பாய் ùஸல்களை உருவாக்குகிறது. ஒருமுறை புகுந்த கிருமிகள் மறுமுறை புகுந்தால் அவற்றை நினைவுபடுத்திக்கொண்டு முன்னர் அவற்றை அழிப்பதற்காக உருவாக்கி வைத்திருந்த சிப்பாய் ùஸல்களை மீண்டும் களத்துக்கு அனுப்புகிறது.

ஒவ்வொரு வகைக் கிருமிக்கும் தனித்தனி வகையான சிப்பாய் ùஸல்களை உருவாக்குவதுடன் எதிர்காலத் தேவைகளுக்காக அவற்றை "ரிசர்வ்' படைகளைப்போல ஆயத்த நிலையில் பராமரிக்கிறது.
 மணல்வாரி அம்மை போன்ற நோய்கள் ஒரு நபருக்கு வாழ்நாளில் ஒருமுறை வந்துவிட்ட பின் மீண்டும் வராததற்கு இதுதான் காரணம். தடுப்பூசிகளின் அடிப்படைத் தத்துவம் இதுதான். புதுவகைக் கிருமிகளின் தாக்குதலை எதிர்கொள்ளப் புதிய தற்காப்பு உத்திகளைத் தகவமைத்துக் கொள்ளும் திறனும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உண்டு.

மனித இனம் தோன்றியது முதலே உடல் பலவகையான நுண்ணுயிரிகளையும் குடல் வாழ் ஒட்டுண்ணிகளையும் தன்னுள் அனுமதித்து அவற்றுடன் சக வாழ்வு வாழப் பழகியிருக்கிறது. சிறுகுடலிலும் பெருங்குடலிலும் வாழும் பல கோடி உயிரினங்கள் உணவை ஜீரணம்செய்து ஊட்டச்சத்துகளை உட்கவரவும், கழிவுகளைச் சிதைத்து வெளியேற்றவும் பேருதவி செய்கின்றன. அவற்றுடன் பழகிப் பழகி உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பும் தன் தற்காப்புத் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

 உடலில் ஒவ்வாமைகளும் அழற்சிகளும் பத்திரமான அளவை மீறாமல் அது கட்டுப்படுத்துகிறது. சதா சர்வகாலமும் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிற ராணுவப் படையைப்போல அது எதிரிக் கிருமிகளைக் கண்டதும் உடனடியாகத் தாக்கி அழிக்க ஆயத்தமாக உள்ளது.

நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது தீய கிருமிகளுடன் நன்மை செய்யும் கிருமிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றன. அளவுக்கு மீறிச் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொண்டால் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நுண்ணுயிரிகளுடன் பரிச்சயம் ஏற்படாமல் போகும்.

உணவுப்பாதையில் தீய மற்றும் நல்ல நுண்ணுயிரிகளுக்கு இடையிலான சமநிலை குலைந்து போகிறது. பெரும்பாலான குடல் நோய்களுக்கும் ஜீரணக் கோளாறுகளுக்கும் வாயு உபத்திரவங்களுக்கும் இதுவே காரணம். போர்ப் பயிற்சி அனுபவமில்லாத ராணுவத்தைப்போல நோய் எதிர்ப்பு அமைப்பும் தன் தற்காப்புத் திறனை இழந்துவிடும்.

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் வெளி இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் செய்வதைப்போலவே உடலுக்குள் இருக்கும் இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. வெளிப்புறச் சுற்றுச்சூழல் சமநிலை கெடுவதால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாலும் கணிசமான பொருளாதார இழப்புகள் ஏற்படும்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 50 மில்லியன் மக்கள் "ஆட்டோ - இம்யூன்' வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக நூறு பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

மருத்துவத் துறை நோயுண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும் உத்திகளை ஆராய்வதைப் போலவே அவை தொடர்ந்து பரிணமிக்கும் போக்கையும் ஆராய்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. காடுகளில் சிங்கமும் புலியும் அழுகி நாற்றமெடுத்த மாமிசத்தைத் தின்றாலும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தப்பிக்கின்றன.

அதேசமயம் உயிரியல் பூங்காக்களில் சுத்தமான உணவை உண்ணும் சிங்கத்துக்கும் புலிக்கும் ஜீரணக் கோளாறுகள் உண்டாகின்றன. இது மருத்துவத் துறையின் தீவிரமான ஆய்வுக்குரியது.

 கடந்த சில பத்தாண்டுகளில் முன்னேறிய நாடுகளில்
 ஒவ்வாமைகள், நோயெதிர்ப்பு அமைப்பின் பிழைகளால்
 சொந்த உடல் ùஸல்களே தாக்கப்படும் "ஆட்டோ - இம்யூன்'
 கோளாறுகள் போன்றவை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.