Thursday, July 26, 2012

தேசியக் கவுன்சிலர் பொறுப்பில் அமெரிக்க இந்தியர்: ராணி ராமசாமி !

நன்றி ;தினமணி

First Published : 26 Jul 2012 12:42:07 AM IST


வாஷிங்டன், ஜூலை 25: அமெரிக்க வாழ் இந்தியப் பெண்மணிக்கு, பெருமை மிக்க தேசியக் கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தை அதிபர் ஒபாமா வழங்கியுள்ளார்.


 இது போன்ற பொறுப்புகளுக்கு 6-க்கும் மேற்பட்டவர்களை நியமித்து, பட்டியலை வெளியிட்டுள்ள அதிபர் ஒபாமா, "அமெரிக்காவின் முக்கிய நிர்வாகப் பிரச்னைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இவர்களுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட விரும்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க வாழ் இந்தியப் பெண்மணி ராணி ராமசாமி, தேசியக் கவுன்சில் கலைப்பிரிவு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகமாலா நாட்டிய நிறுவனத்தின் நிர்வாகியான ராணி ராமசாமி, 1978ம் ஆண்டு முதல் பரத நாட்டியம் பயிற்றுவித்து வருகிறார். "வாக்கர் ஆர்ட்ஸ் சென்டர்', "அமெரிக்கன் கம்போசர்ஸ் ஃபோரம்', "மினியாபொலிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்ஸ்' உள்ளிட்ட அமைப்புகளால் பாராட்டப்பட்டவர்.


அமெரிக்க நாட்டியத் திருவிழா, மும்பை தேசிய நிகழ்த்துக்கலை மைய நிகழ்வுகளின் போது, நிகழ்த்துக் கலைக்கான கென்னடி மையம், ராணி ராமசாமியின் நாட்டியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது.


இவர், 14 மெக்நைட் நிற விருதுகள், ஒரு புஷ் அறக்கட்டளை நாட்டிய விருது, சர்வதேசக் கலை மையத்தின் நிதி, 2011-ம் ஆண்டுக்கான மெக் நைட் சிறந்த கலைஞருக்கான விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். ராணி ராமசாமி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை நுண்கலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நிர்வாகி : ராகமாலா நாட்டிய நிறுவனம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.