Thursday, July 19, 2012

மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற நடவடிக்கை: அமைச்சர்




First Published : 19 Jul 2012 12:57:06 AM IST

புது தில்லி, ஜூலை 18: மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 அசோசேம் சார்பில் தில்லியில் நடைபெற்ற "அனைவருக்கும் சமூக நீதி' தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது:


 மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என அனைத்து மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னமும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இருப்பதாக 2011-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கவலை அளிக்கிறது.


 குறிப்பாக, 13 லட்சம் கழிப்பறைகள் நவீனமாக்கப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இத்தகைய கழிப்பறைகளின் பெரும்பகுதி கழிவை மனிதர்களே அகற்றுவதாகவும், மீதம் உள்ளவற்றை விலங்குகள் அகற்றவதாகவும் கூறப்பட்டுள்ளது.


 எனவே, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இருக்கிறதா என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். அவ்வாறு இருந்தால், அத்தகைய நிலையை மாற்றி நவீன கழிப்பறைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 இதுதவிர, நாடு முழுவதும் 24.66 கோடி குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 12 கோடி குடும்பத்தினர் அதாவது 48.8 சதவீதம் பேர் இன்னமும் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக அந்த புள்ளிவிவரம் கூறுகிறது. குறிப்பாக, கழிப்பிட வசதி இல்லாததால் கிராமங்களில் உள்ள பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


 ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் நடத்தும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 20 சதவீத தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்ய புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


 இதன்படி, ரூ.7,000 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த கொள்கையை தனியார் நிறுவனங்களும் பின்பற்றினால் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும், இதற்கு தொழில் வர்த்தக கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.