Thursday, July 19, 2012

நட்புக்கு இலக்கணம் படைத்தவர் கபிலர்: நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன்



irst Published : 
19 Jul 2012 02:58:26 AM IST

திருக்கோவிலூர், ஜூலை 18: திருக்கோவிலூரில் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


 இதில், முனைவர் தெ.ஞானசுந்தரத்துக்கு கபிலர் விருது மற்றும் கபிலவாணர் பட்டத்தை வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியது:


 ""எல்லோரும் பாரி, பாரி என பாராட்டுகிறார்களே, இந்த உலகத்தில் பாரியைத் தவிர வேறு யாரும் இல்லையா, மாரி என்றும் ஒன்று உண்டு எனப் பாடினார் கபிலர். மறைமுகமாகப் பாரிக்கு மாரியை உவமைக் கூறிப் போற்றிய புலவர் பெருந்தகை கபிலர்.


 வள்ளல் பாரி ஒரு மன்னன். கபிலரோ தன்னை ஒரு அந்தணன் எனச் சொல்கிறார். இந்த இருவருக்கும் எப்படிப்பட்ட நட்பு ஏற்பட்டது பாருங்கள்


 செல்வத்தில் ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன். ஒருவன் அதிகாரத்திலே உயர்ந்தவன், ஒருவன் ஆளப்பட்டவன். இரண்டு பேரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள்.


 ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி ஒரு அற்புதமான நட்பு இந்த உலகத்திலேயே, ஏன் தமிழகத்திலேயே நிலைத்து நின்றிருக்கிறது என்பதை இன்றைக்கும் நாம் போற்றிப் பாராட்டுகிறோம். நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் கபிலர்.


 இன்றைக்கு ஜாதிப் பூசலை ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும்போது நாம் கபிலரை நினைத்துக் கொள்ள வேண்டும். காரணம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆள்பவன், ஆளப்படுபவன், இந்த ஜாதிக்காரன், அந்த ஜாதிக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் இருவருக்கும் இடையில் எப்படி ஒரு அற்புதமான நட்பு வளர்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நட்பு புலவனுக்கும் புரவலனுக்கும் இடையேயான நட்பாக இருக்கவில்லை. உளப்பூர்வமான நட்பாக இருந்ததால்தான் பாரி மகள்களுக்கு புலவர் கபிலர் என்கிற அந்தணாளன் துணை நிற்கிறான். பாரி மன்னன் இல்லாத உலகைத் துறக்கத் துணிகிறான். வாரிக் கொடுத்த வள்ளல் பாரி. பரிசில் பெற்ற புலவர் கபிலர். ஆனால் பாருங்கள், வள்ளல் பாரி ஆண்ட பூமியில் பரிசில் பெற்ற புலவர் கபிலருக்கு விழா எடுத்து, அவரது பெயரால் கபிலவாணர் விருது வழங்கி மகிழ்கிறோம்.


 எப்படி பாரிக்கும், கபிலருக்கும் ஒரு நட்பு இருந்ததோ, அதே போல் காளிதாசனுக்கும் போஜனுக்கும் ஒரு நட்பு இருந்தது. இப்படிப்பட்ட உயரிய நட்புக்கு இலக்கணமாக இருந்திருக்கிறது இந்த நாடு.
 பாரியையும், மாரியையும் ஒப்பிட்டுக் கவிதை பாடினார் புலவர் கபிலர். நட்பும்கூட ஒருவகையில் மாரி போன்றததுதான். யாரையும், எதையும் எதிர்பார்த்து மழை பெய்வது கிடையாது'' என்றார் அவர்.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.