Thursday, July 19, 2012

புலவரால்தான் புரவலர் அறியப்படுகிறார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்



First Published : 
19 Jul 2012 02:53:51 AM ISTசெய்திகளை அனுப்ப: webdinamani@gmail.com
Last Updated : 19 Jul 2012 09:24:59 AM IST
திருக்கோவிலூர், ஜூலை 18: புலவர்களால் புரவலர்கள் அறியப்படுவதுதான் உலக இயற்கை என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.

 திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கபிலர் விழாவில் கபிலர் விருது மற்றும் கபிலவாணர் பட்டம் பெற்ற முனைவர் தெ.ஞானசுந்தரத்தைப் பாராட்டி அவர் மேலும் பேசியது:

 நட்புக்கு இலக்கணமாகப் பிசிராந்தையாரையும், கோப்பெருஞ்சோழனையும் கூறுவார்கள். அதற்கு எள்ளளவும் குறையாத இலக்கிய நட்பு வள்ளல் பாரியும், புலவர் கபிலரும் கொண்டிருந்த நட்பு.

 உலகில் வேறு எங்கும் இல்லாத பெருமை, சிறப்பு இந்தியாவுக்கு உண்டு. அதிலும் குறிப்பாகத் தமிழகத்துக்கு மட்டுமே உண்டு. வெளிநாடுகளில் புலவர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் விழா எடுத்து சிறப்பிக்கிறார்களா என்று கேட்டால் நாம் அறிந்தவரை இல்லை. ஏதாவது பல்கலைக்கழக அரங்கங்களில் மில்டன், ஷேக்ஸ்பியர் போன்ற கவிஞர்கள் பற்றிய கருத்தரங்குகள் நடைபெறுகின்றனவே தவிர, படைப்பாளிகளுக்கு மக்களால் விழா எடுக்கப்படுகின்ற சிறப்பு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்துக்கு மட்டுமே உரித்ததாகும்
.
 வட நாட்டில் ஒரு சில விழாக்கள் எடுக்கப்படுகின்றன. அவை கூட காளிதாசன், தான்சேன் போன்றவர்களின் பெயரில் நடத்தப்படும் இசை விழாக்கள்தானே தவிர, இலக்கிய விழாவாக நடத்தப்படுவதில்லை.

 வள்ளுவனுக்கும் கபிலனுக்கும், இளங்கோவடிகளுக்கும், கம்பனுக்கும் விழா எடுத்து சிறப்பிக்கின்ற பாங்கு தமிழகத்துக்கு மட்டுமே சொந்தமான சிறப்பு.

 எத்தனை எத்தனையோ சங்கப் புலவர்கள் இருக்கத்தானே செய்தார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகளாவிய சிந்தனையை வெளிப்படுத்திய கணியன் பூங்குன்றனார் போன்ற பல சங்கப் புலவர்கள் இருந்தாலும், கபிலருக்கு நாம் விழா எடுத்துக் கபிலவாணர் விருது வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், பரம்புமலை வேந்தன் பாரியுடனான அவரது நட்பு அவருக்கு சரித்திரத்திலும் இடம்பெற்றுக் கொடுத்திருப்பதால்தான்
.
 எனக்கு முன்னால் பேசிய நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன், புரவலனாக இருந்தவன் பாரி. அவனிடம் பரிசில் பெற்ற புலவராக இருந்தவர் கபிலர். ஆனால், பாரி ஆண்ட மண்ணிலே கபிலருக்கு விழா எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். புலவனால் புரவலன் அறியப்படுகிறான் என்பதுதான் அதற்குக் காரணம்.

 கபிலரால் பாரி அறியப்படுகிறார். கம்பனால் சடையப்ப வள்ளல் அறியப்படுகிறார். போஜராஜன் கூட காளிதாசனால்தான் அறியப்படுகிறான். ஆகவே, புலவர்களால் புரவலர்கள் அறியப்படுவது என்பதுதான் உலக இயற்கை.கபிலருக்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டால் 235 பாடல்கள் எழுதியிருக்கும் புலவர் கபிலர் மட்டுமே என்பதுதான்
.
 இதற்கு முக்கியமான காரணம், சங்கத் தமிழ் இலக்கியங்களைத் தேடி அலைந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் ஏனைய புலவர்களைவிட கபிலர் எழுதிய பாடல்கள் அதிகம் கிடைத்திருப்பதுதான்.

 அந்த காலத்தில் அச்சு இயந்திரம் கிடையாது. ஓலைச்சுவடிகளின் பிரதிகள் எடுக்கப்பட்டு படித்தார்கள். அதிகமான பேர் விரும்பிப் படித்த பாடல்கள்தான் அதிகமான சுவடிப் பிரதிகள் எடுக்கப்பட்டிருக்கும். கபிலரது பாடல்கள் பிரபலமாக இருந்ததால் அதிகம் பிரதிகள் எடுக்கப்பட்டிருந்ததால், செல்லரிக்கப்படாமல் சிதைந்த ஓலைச் சுவடிகளில் அவரது பாடல்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

 குறைவாகப் பிரதிகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த ஓலைச் சுவடிகள் அழிந்திருக்கும். சங்க காலத்தின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது சாகாவரம் பெற்ற கபிலரின் பாடல்கள் என்றார் அவர்.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.