Tuesday, July 17, 2012

குன்னூரிலிருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரும் அவசரமாக வெளியேற்றம்!


தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் வெலிங்டன் இந்திய இராணுவ முகாமுக்கு பயிற்சிக்கு வந்த இரு இலங்கை இராணுவ அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாம் உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து, ரஷ்யா, கொரியா, ஆலந்து, டென்மார்க், போலந்து,  வங்காளதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து ராணுவ அதிகாரிகள் வந்தனர்.

இவர்களில் இலங்கையை சேர்ந்த விமானப்படை அதிகாரி ஜெகர் ஜனந்க தியாஸ்,  கப்பற்படை அதிகாரி எஸ்.ரணசிங்கா ஆகிய 2 அதிகாரிகளும் அடங்குவர்.

இந்நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி  அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை இராணுவ  வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிப்பதின் மூலம் தமிழர்களின் உணர்வுகள்  அவமதிக்கப்படுவதாகவும், சிதைக்கப்படுவதாகவும்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  கருதுகின்றனர் என்றும், எனவே பயிற்சி பெற வந்துள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளை  திருப்பி அனுப்பவேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

இதே போல் திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோரும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு  குன்னூரில் அளிக்கப்படும் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்திலும் குதித்தனர்.ரயில் மறியல்,ராணுவ முகாமை முற்றுகையிட முயற்சி  உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது  செய்தனர்.

இந்நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியதால் அவர்களும், அவர்களுடன் பயிற்சி பெற வந்திருந்த ராணுவ  அதிகாரிகள் உள்பட 25 பேரும் குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் முகாமில் இருந்து கிளம்பியதாகவும்,  பின்னர் கோவைக்கு வந்த அவர்கள் விமானம் மூலம் இன்று காலை ஹைதராபாத்  புறப்பட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.