Friday, July 6, 2012

குறைவான பயன்பாட்டிலிருக்கும் மொழியிலான விக்கிப்பீடியாக்களை விட தமிழ் விக்கிப்பீடியா மிகவும் பின் தங்கியிருக்கிறதே…?

    நன்றிக்குரியோர் 


                                           http://www.katturai.com/?p=4022

தை தக்கா தை, காக்கா குஞ்சு, உப்பு மூட்டை, ஓ… சிய்யான், கரகர வண்டி, கால் தூக்கிற கணக்கப்பிள்ளை, குமார் குமார் லைட்டடி, தந்தி போவுது தபால் போவுது, நான் வளர்த்த நாய்க்குட்டி, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தம்பலம், குச்சு குச்சு ரங்கம்மா – இவையெல்லாம் என்னவென்று தெரியுமா?

இவையெல்லாம் கடந்த நூற்றாண்டில் விளையாடிய பழமையான சில விளையாட்டுகளின் பெயர்கள்.
இருள்நாறி, கண்ணி, கைதை, குருக்கத்தி, நரந்தம், தணக்கம், மயிலை, மாரோடம் என்பதாவது என்னவென்று தெரியுமா? இவையெல்லாம் சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில மலர்களின் பெயர்கள்.
திருவாத்தான், சொலவடை, தொன்மா, வானகெஞ்ஜி என்பதாவது தெரியுமா?
திருவாத்தான் என்பது தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தன்.
“சொலவடை” என்பது கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள்.
தொன்மா  என்பது ஆங்கிலத்தில் டயனோசர் என அழைக்கப்படும் விலங்கு.
“வானகெஞ்ஜி” என்பது விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெலுங்கு பேசும் கிராம மக்கள், மழை இன்றி பஞ்சம் ஏற்படின் தங்கள் கிராமங்களில் மழை பொழிய வேண்டி எடுக்கும் விழா.
இப்படி பண்டைய விளையாட்டுக்கள், சங்ககால மலர்கள், சில வித்தியாசமான சொற்களுக்கான விளக்கங்கள் தற்போதுள்ள “வொய் திஸ் கொலவெறி டி” பாடல் குறித்த கட்டுரைகள் கூட தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் இவை மட்டுமல்ல தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல்,  கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் என்கிற ஒன்பது வகையான முக்கியப் பகுப்புகளில் 46 ஆயிரம் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழ் விக்கிப்பீடியா குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து, கணினியியல் துறைக்கான சிறந்த நூலாசிரியர் விருதினைப் பெற்ற தமிழ் விக்கிப்பீடியா நூலாசிரியர் தேனி எம். சுப்பிரமணி, நமது கட்டுரை.காம் இணைய இதழிற்காக அளித்த பேட்டி :
விக்கிப்பீடியா என்றால் என்ன?
உலகில் உள்ள எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபீடியா என்கிற கலைக்களஞ்சியம்தான். அகரமுதலி எனப்படும் டிக்சனரியில் சொற்களுக்கான பொருள் தெரிந்தாலும், அதற்கான முழு விளக்கம் என்சைக்ளோபீடியாவில்தான் கிடைக்கும். இந்த என்சைக்ளோபீடியாவைப் போன்று முழு விளக்கத்தையும் இணைய வழியில் கொடுக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான் விக்கிப்பீடியா. அமெரிக்காவைச்சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் அடங்கிய குழுவினர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். ஹவாய் மொழியில் விக்கி என்றால் விரைவு என்று பொருள். அறிவு சார்ந்த தகவல்களைப் பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் தரக் கூடியதாக உள்ளதால் விக்கிப்பீடியா என்கிற பெயரைத் தேர்வு செய்ததாகக் குறிப்பிடும் இவர்கள் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதியில் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர்.
2003 ஆம் ஆண்டில் விக்கிமீடியா பவுண்டேசன் என்கிற வணிக நோக்கமற்ற அமைப்பாகப் பதிவு செய்யப் பெற்று, அதன் மூலம் விக்கிப்பீடியா நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த விக்கிப்பீடியாவில் பல தகவல்களின் தொகுப்புகள் கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன. உலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எவரும் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் பார்வையிடலாம். விக்கிப்பீடியாவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல் உலகில் இருக்கும் யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளைத் தொடங்கலாம். அங்குள்ள கட்டுரைகளில் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம். கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல் சரியானதல்ல என்று கருதும் நிலையில் அதை மாற்றம் செய்யலாம். இப்படி விக்கிப்பீடியாவில் இணையம் பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் பங்களிப்புகளைச் செய்ய முடியும்.
பிற மொழி விக்கிப்பீடியாக்கள் குறித்து…?
விக்கிப்பீடியா அமைப்பு ஆங்கில மொழிக்கு அடுத்து 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்ச் மொழியிலும், மே மாதம் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியாக்களை உருவாக்கியது. பின்னர் விக்கிப்பீடியா தளத்தில் பிற மொழிகளில் ஆர்வமுடையவர்கள் அம்மொழிகளில் விக்கிப்பீடியாக்களை உருவாக்கிக் கொள்ளும் வசதிகளைச் செய்து கொடுத்தது. இவ்வசதிகளைப் பயன்படுத்தி உலகில் இணையம் பயன்படுத்தி வந்த பலரும் தங்கள் மொழிகளில் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். விக்கிப்பீடியா, தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் 285 மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம், குஜராத்தி, வங்காளம், உருது, கன்னடம், மேற்கத்திய பஞ்சாபி, பீகாரி, ஒரியா, காஷ்மீரி, சிந்தி, அசாமிஷ், சமஸ்கிருதம், பஞ்சாபி போன்ற மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் விக்கிப்பீடியா குறித்து….?
தமிழ் மொழிக்கான விக்கிப்பீடியாவை (இணைய முகவரி: http://ta.wikipedia.org/) வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடக் கலைப் பொறியாளராக இருந்து வரும் இலங்கைத் தமிழரான இ. மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழிக்கான விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) உருவாக்கினார். விக்கிப்பீடியாவிற்கும் அதன் இணைத் திட்டங்களுக்கும் தேவையான மீடியா விக்கி என்கிற மென்பொருளின் எல்லாப் பக்கங்களுக்கும் உரிய இடைமுகத்துக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் இவர்தான் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் பிறகு இவர் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை உருவாக்கி உலகத் தமிழர்கள் பலரின் கவனத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கம் கொண்டு வந்தார். இன்று தமிழ் மொழியிலான விக்கிப்பீடியா 47,099 கட்டுரைகளுடன் உலகின் அனைத்து மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் 59 வது இடத்திலும், இந்திய மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பு எப்படி தொடங்கியது?
எனக்குத் தேவையான ஒரு தகவலைத் தேடிய போது, அந்தத் தகவல் குறித்து முழுமையான கட்டுரையாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைத்தது. அதன் பிறகு அடிக்கடி தமிழ் விக்கிப்பீடியாவில் பயணித்துக் கொண்டிருந்தேன். சில கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள் இருந்தன. அவற்றில் திருத்தம் செய்தேன். அதன் பிறகு சில குறுங்கட்டுரைகளைத் தொடங்கினேன். எனக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் பயனராக இணைந்து பங்களிக்க வேண்டும் என்கிற விவரம் முதலில் தெரியாமல் சில பங்களிப்பு செய்தாலும், பின்னர், 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயனராக இணைந்து என் பங்களிப்புகளைத் தொடர்ந்தேன். இன்றுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் 788 கட்டுரைகளைத் தொடங்கியிருப்பதுடன், 14371 தொகுப்புகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் 10 ஆம் நிலையில் இருக்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தங்களுக்குக் கிடைத்த பயன் என்ன?
தமிழ் விக்கிப்பீடியா மட்டுமில்லை, விக்கிப்பீடியா திட்டங்கள் அனைத்துமே வணிக நோக்கமின்றி செயல்படுத்துவதால், இதில் பங்களிப்பவர்களுக்கு என்று தனியாகப் பயன் எதுவுமில்லை. இத்திட்டங்களில் பங்களிப்பு செய்பவர்கள் அனைவருமே எவ்வித எதிர்பர்ப்புகளுமின்றித் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள் தான். விக்கிப்பீடியாவின் பல்வேறு திட்டங்களில் செயல்படும் பயனர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், தானியங்கிகள் என அனைத்து நிலையிலும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் எவ்விதப் பயனையும் அடையாமல் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தமிழ் விக்கிப்பீடியா என்னைப் பொறுத்தவரை எனக்கு சில சிறப்புகளைக் கிடைக்கச் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த மாநாட்டுடன் இணைந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் எனது “தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் கட்டுரை தேர்வாகி இருந்தது. அம்மாநாட்டில் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இம்மாநாட்டில் வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் விக்கிப்பீடியா சார்பில் கலந்து கொண்டு விக்கிப்பீடியா குறித்த பலரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கான வாய்ப்பையும் அளித்தது.
தமிழ் விக்கிப்பீடியா குறித்து நூல் எழுத வேண்டுமென்கிற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகள் செய்து வந்த எனக்கு கட்டுரைகளைத் தொடங்கத் தெரிந்திருந்தாலும், கட்டுரைகளில் உள் தலைப்புகள் உருவாக்குவது எப்படி? கட்டுரைகளில் வரும் சில தகவல்களை எண்களிட்டு வரிசைப்படுத்துவது எப்படி? கட்டுரைகளில் தேவையான இடங்களில் அட்டவணையைக் கொண்டு வருவது எப்படி? கட்டுரைக்குத் தேவையான படிமங்களை (படங்கள்) பதிவேற்றம் செய்வது எப்படி? அந்தப் படிமங்களை கட்டுரையில் இணைப்பது எப்படி? என்பது போன்ற பல சந்தேகங்கள் வந்தன. தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பு இடம் பெற்றிருக்கும் கட்டுரையில் அவை எப்படி செய்யப்பட்டிருக்கின்றன? என்று பார்த்து அது போல் செய்து பார்த்தேன். சில சரியாக அமைந்தன. சில தவறுகளாகிப் போயின. இந்தத் தவறுகளைப் பயனர் நிர்வாகியாக இருப்பவர்கள் உடனுக்குடன் சரி செய்து விட்டனர். அவர்கள் செய்த திருத்தத்தைக் கண்டு, அடுத்து அந்தத் தவறுகள் வராதபடி சரியாகச் செய்தேன்.
இந்நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்யும் வகையில் ஒரு நூலை எழுதினால் என்ன? என்கிற எண்ணம் ஏற்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்பவர்களுக்கு உதவும் ஒரு கையேட்டைப் போல் தமிழ் விக்கிப்பீடியா நூலை எழுதினேன். இந்நூலுக்கு அணிந்துரை எழுதித் தரும்படி ஆஸ்திரேலியாவிலிருந்த கனக சிறீதரன் என்பவருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். அவர் தமிழ் விக்கிப்பீடியாவை முதன் முதலில் உருவாக்கிய வளைகுடா நாட்டில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றும் இ. மயூரநாதன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியை அளித்து அவருடன் தொடர்பு கொள்ளும்படி சொன்னார். அவருடன் தொடர்பு கொண்டேன். அவர் நான் அனுப்பியிருந்த நூலுக்கான அணிந்துரை எழுதித் தந்தார். அத்துடன், நூலுக்கான தட்டச்சுப் பிரதியில் தேவையான சில திருத்தங்களையும் செய்து கொடுத்தார்.
தமிழ் விக்கிப்பீடியா நூல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அச்சிடப்பட்டு எனக்குக் கிடைத்ததற்குப் பின்பு நூல் வெளியீட்டை எங்கு வைத்துக் கொள்ளலாம்? என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சென்னையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளதாகவும், அந்த விழாவில் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீட்டையும் ஒரு நிகழ்வாக வைக்க விரும்புகிறோம் என்று தமிழ் விக்கிப்பீடியா நண்பர்கள் மணியன், பரிதிமதி ஆகியோர் தெரிவித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழாவில் எனது நூலை கிழக்குப் பதிப்பக நிறுவனத் தலைவர் பத்ரி சேஷாத்ரி வெளியிட, முதல் பிரதியைப் பத்திரிகையாளர் சுகதேவ் (இளையபெருமாள்), இரண்டாம் பிரதியைக் கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்படக் கலந்துரையாடல் (Video Conference – காணொளிக் காட்சி)  மூலம் இந்நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்த விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் ஆங்கில மொழியில் விக்கிப்பீடியா குறித்து சில நூல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிலம் தவிர்த்து முதன் முதலாகத் தமிழ் மொழியில் விக்கிப்பீடியா குறித்து நூல் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்த நூல் தமிழ்நாடு அரசால் கணினியியல் துறையின் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்கள். எனது முதல் நூலே தமிழ்நாடு அரசால் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்தி எனக்கு மட்டுமில்லை, என் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சிச் செய்தியாய் அமைந்தது. உண்மையைச் சொன்னால், இந்தச் செய்தி தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகள் செய்து வரும் அனைவருக்குமே மகிழ்ச்சியான செய்தியாக அமைந்து விட்டது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து சிறந்த நூலுக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்ற போது உண்மையில் எனது மகிழ்ச்சி பன்மடங்காகி விட்டது. தமிழக முதல்வரிடமிருந்து நான் பரிசு பெறும் காட்சியை உலகம் முழுவதுமுள்ள தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் பலரும் (ஜெயா பிளஸ்) தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் எனக்குத் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த மகிழ்ச்சி என்னுடன் என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்குமான மகிழ்ச்சியாக அமைந்தது. விக்கிப்பீடியாவை ஒரு கூட்டுறவுடனான படைப்பு என்பார்கள். மகிழ்ச்சியிலும் அந்தக் கூட்டுறவுகளின் சிறப்பை என்னால் உணர முடிந்தது.
குறைவான பயன்பாட்டிலிருக்கும் மொழியிலான விக்கிப்பீடியாக்களை விட தமிழ் விக்கிப்பீடியா மிகவும் பின் தங்கியிருக்கிறதே…?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பயன்பாட்டு மொழியாகத் தமிழ் இருக்கின்றனர். இருப்பினும் தமிழர்கள் பலர் இணையத்தில் தமிழை விட ஆங்கில மொழிக்கு முக்கியத்துவமளிப்பதால் தமிழ் விக்கிப்பீடியாவில் அவர்கள் பங்களிக்க விரும்புவதில்லை. தமிழை முன்னிலைப்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் தட்டச்சு செய்வதும், கணினி மற்றும் இணையம் பயன்படுத்தும் திறனும் சற்று குறைவாக இருப்பதால் அவர்களால் பங்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களில் சிலர் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்க முன் வருகிறார்கள். அவர்களும் தங்கள் கட்டுரைகளை அப்படியே தங்கள் நடையுடன் இலக்கிய நயத்துடன் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமாக இருப்பதால் விக்கிப்பீடியாவிற்கென பொதுவான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தமிழ்ப் பேராசிரியர்களுக்கு தவறுதலாகப் படுகிறது. மேலும் அவர்கள் கட்டுரை அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் தொடங்கிய கட்டுரைகளை மேம்படுத்துவதற்காகக் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படுவதையும், அதில் மாற்றம் செய்யப்படுவதையும் தமிழ்ப் பேராசிரியர்கள் விரும்புவதில்லை. இதனாலும் பங்களிப்புகள் குறைகின்றன. இப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகள் குறைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்புகளுக்குத் தமிழ்த் தட்டச்சு குறைபாடாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தற்போது, தமிழில் தமிழ் 99, எழுத்துப் பெயர்ப்பு முறை, தமிழ் தட்டச்சு முறை போன்றவைகளைப் பயன்படுத்தி எளிமையாகத் தட்டச்சு செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வமுடைய மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்காகத் தனிப் பயிற்சிப் பட்டறைகளை இலவசமாக நடத்த தமிழ் விக்கிப்பீடியா தயாராக உள்ளது. இந்த இலவசப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் தொடர்பு கொள்ளலாம்.
விக்கிப்பீடியா, விக்கிலீக்ஸ் இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
விக்கிப்பீடியா என்பது விக்கி மீடியா பவுண்டேசன் எனும் வணிக நோக்கமற்ற அமைப்பினால் நடத்தப் பெறுவது. விக்கி மீடியா பவுண்டேசன் மூலம் விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள், விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல்- விக்கி மற்றும் பிற விக்கித் திட்டங்கள் சில செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு வேறு திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. விக்கி மீடியா பவுண்டேசன் அமைப்பிலான செயல்பாட்டிற்கும், விக்கிலீக்ஸ் செயல்பாட்டிற்கும் எவ்விதமான தொடர்புகளுமில்லை.
விக்சனரி எனும் திட்டத்திலான தமிழ் விக்சனரி சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், பலுக்கல் முதலியவற்றைக் கொண்டு கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் திட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழ் விக்சனரி 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான சொற்களுடன் (ஆங்கிலம் – தமிழ்) உலக மொழிகளுக்கான விக்சனரி பட்டியலில் உள்ள 180 மொழிகளில் 10 ஆம் இடத்தில் இருந்து வருகிறது. சீனா – தமிழ், தெலுங்கு – தமிழ், உருது – தமிழ் போன்ற சொற்களும் இந்த விக்சனரியில் தொகுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவைப் போலவே இதிலும் அனைவரும் பங்களிக்கலாம்.
விக்கி நூல்கள் எனும் திட்டத்தில் கட்டற்ற, திறந்த உள்ளடக்கம் கொண்ட பாடநூல்கள் மற்றும் உரை நூல்களை உருவாக்கிப் பயன் பெறச் செய்து வருகிறது. இத்திட்டத்தில் குறைவான பங்களிப்புகள் உள்ளதால் குறைவான நூல்களே இதில் உள்ளன. இதிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
விக்கி மேற்கோள்கள் எனும் திட்டத்தில் நபர்கள், தொழில்கள், இலக்கிய ஆக்கங்கள், பழமொழிகள், ஆங்கிலப் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனும் உள் பகுப்புகளில் பல மேற்கோள்கள் தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன. இது போல் விக்கி மூலம் எனும் திட்டத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாக்கங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், பிறரால் எழுதப்பட்டு காப்புரிமை விலக்கு பெற்ற புத்தகங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன.
விக்கி இனங்கள் எனும் திட்டத்தின் கீழ் உலகில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் என்று அனைத்து வகையான உயிரினங்கள் குறித்த தகவல்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் திட்டத்தில் ஒன்றிரண்டு தகவல்களே உள்ளன.
விக்கி செய்திகள் எனும் திட்டத்தின் மூலம் சட்டமும் ஒழுங்கும், பண்பாடு, பேரிடர் மற்றும் விபத்து, பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவம், அரசியல், வரலாறு, அறிவியல், ஆன்மிகம், விளையாட்டு போன்ற பகுப்புகளின் கீழாகவும், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா, உலகம் எனும் பகுப்புகளின் கீழாகவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் பெயரிலான பகுப்புகளிலும் முக்கியமான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.
இது போல் விக்கி பொது, விக்கிப் பல்கலைக்கழகம், மேல் விக்கி போன்று மேலும் சில விக்கித் திட்டங்கள் தமிழில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் தன்னார்வலர்களே. தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியின் கீழாகவே அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் பிற விக்கித் திட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் இன்னும் விழிப்புணர்வு ஏதுமில்லையே…?
உண்மைதான். தமிழ் விக்கிப்பீடியா மற்றும் பிற விக்கித் திட்டங்கள் குறித்த செய்திகள் மக்களிடையே இன்னும் போய்ச் சேரவில்லை. விக்கிப்பீடியா அமைப்பு ஒரு அறக்கட்டளை அமைப்பாகச் செயல்படுவதால், விக்கித் திட்டங்களில் விளம்பரம் எதுவும் இடம் பெறுவதில்லை. மேலும் வெளி ஊடகங்களில் விளம்பரத்திற்காகப் பணம் எதுவும் செலவழிக்க முடிவதுமில்லை. விளம்பரம் மூலம் வருவாய் பெற்றுச் செயல்படும் முகநூல் (Face Book) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் இந்திய ஊடகங்கள், சமூகத்தின் மொழி வளர்ச்சிக்கான நல்ல நோக்கத்துடன் செயல்படும் விக்கிப்பீடியா மற்றும் விக்கித்திட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடத் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும் விக்கிப்பீடியா இணையத்தில் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வருகிறது. இணையத் தேடுதலில் விக்கிப்பீடியாவிலுள்ள தகவல்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடும் என்பதால் இணையம் பயன்படுத்துபவர்கள் விக்கிப்பீடியா குறித்து அறியாமல் இருக்க முடியாது. இன்று ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் விக்கிப்பீடியாவின் தரவுகளைப் பெறாமல் தங்கள் ஆய்வுப் பணியைத் தொடர முடியாது என்று சொல்லும் அளவிற்கு விக்கிப்பீடியாவில் பல துறைத் தகவல்கள் இருக்கின்றன. தமிழிலும் இதுபோன்ற நிலை கூடிய விரைவில் உருவாகி விடும்.
தமிழ் விக்கிப்பீடியாவில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியதாக எந்தத் தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன?
தமிழ் விக்கிப்பீடியாவில் என்ன தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன என்று கேட்பதை விட என்ன பகுப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன என்று கேட்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம் மற்றும் நபர்கள் எனும் ஒன்பது முக்கியப் பகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த முக்கியப் பகுப்பினுள் அகரவரிசைப்படி துணைப் பகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் துணைப்பகுப்பில் கட்டுரைகளின் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை விரைவாக குறிப்பிட்ட தலைப்பிலான கட்டுரையைக் கண்டறிய உதவுகிறது. இதுபோல் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் தமிழில் கட்டுரைக்கான தலைப்பை உள்ளீடு செய்து தேடுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் விக்கிப்பீடியா ஒரு இணையக் கலைக்களஞ்சியம். இதில் பங்களிப்பு செய்ய முடியாதவர்கள், இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் பொது அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி ஒரு முறை வந்து விட்டால் அடுத்து அவர்களுக்குத் தேவையான தகவல்கள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்து விடும்.
விக்கிப்பீடியாவில் இடம் பெறும் தகவல்கள் ஆதாரமற்றவை என்கிற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறதே…?
விக்கிப்பீடியாவில் இடம் பெறும் தகவல்கள் ஆதாரமற்றவை என்கிற குற்றச்சாட்டை தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி எனும் நிலையில் நான் மறுக்கிறேன். இவையெல்லாம் விக்கிப்பீடியாவில் விசமத்தனமாகப் பங்களிப்பு செய்யும் சிலரின் வெற்றுப் பேச்சுகள். அவர்கள் செய்யும் விசமத்தனங்கள் மற்றும் அவர்களால் சேர்க்கப்படும் பொய்யான தகவல்கள் போன்றவற்றை நிர்வாகிகள் நிலையிலிருப்பவர்கள் ஆதாரமற்றவை என்று கருதி நீக்கும் நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் சொல்லித் திரிகிறார்கள். இவர்கள் கதை “சீ… சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்கிற நிலைதான். தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பிலிருந்து மேல்வகுப்புகள் வரை அறிவியல் பாடநூல்களில் சில பாடங்களின் கீழ்பகுதியில் மேலும் அறிய இணையதளங்கள் எனும் பிரிவில் ஆங்கில விக்கிப்பீடியாவிற்கான இணைய முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது ஒன்றே விக்கிப்பீடியா தகவல்கள் ஆதாரமுடையவை என்பதற்கான சான்று. விக்கிப்பீடியா தகவல்கள் ஆதாரமற்றவை என்று சொல்பவர்கள் எல்லாம் மிகப் பெரிய அறிஞர்கள் இல்லை.
விக்கிப்பீடியா நிர்வாகிகள் என்று சொன்னீர்களே..? அவர்களுக்கு என்று சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதா?
விக்கிப்பீடியாவில் பயனர்கள் நிலையிலிருந்து சற்று கூடுதல் நிலையில் நிர்வாகி, அவ்வளவுதான். இவர்களும் பயனர்களைப் போல்தான். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளை ஓரளவு அறிந்தவர்கள் என கருதப்படுபவர்களை குறிப்பிட்ட பங்களிப்புகள் செய்த பிறகு நிர்வாகி நிலைக்குப் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பிட்ட கால அளவு கொடுக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நிர்வாகிகளாக நிலை உயர்த்தப்படுகிறார்கள். இவர்களுக்கென்று சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்கு பயனர்களைக் காட்டிலும் பங்களிப்பில் சிறிது கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாகி நிலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் தேர்வு செய்யப்பட்ட மொழிக்கான விக்கிப்பீடியாவிற்கு மட்டுமே நிர்வாகியாகச் செயல்பட முடியும். பிற மொழி விக்கிப்பீடியாக்களில் அவர்கள் பயனர்களாகவே செயல்பட முடியும்.
ஆங்கில மொழி விக்கிப்பீடியா 1,70,33,810 பதிவு பெற்ற பயனர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 1,31,988 பயனர்கள் தொடர்ந்து செயல்பட்டு வரும் பயனர்களாக இருக்கின்றனர். இவர்களில் 1468 பயனர்கள் நிர்வாகி நிலையில் உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு பெற்ற 39,835 பயனர்களில் 267 பயனர்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் பயனர்களாக இருக்கின்றனர். (பார்வையிடப்பட்ட நாள்: 29-06-2012) இவர்களில் 26 பயனர்கள் நிர்வாகி நிலையில் உள்ளனர். இந்த 26 நிர்வாகிகளில் அபுதாபியில் இருக்கும் இ. மயூரநாதன், கனடாவில் இருகும் நற்கீரன், தமிழ்நாட்டிலிருக்கும் சுந்தர், அ. ரவிசங்கர் ஆகியோர் அதிகாரி என்கிற நிலையை அடைந்துள்ளனர். நிர்வாகி நிலையை விட சற்று கூடுதலான நிலையைக் கொண்ட இவர்களுக்கென்று சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது. இவர்களும் மற்ற பயனர், நிர்வாகிகளைப் போலத்தான் செயல்படுவார்கள். இவர்கள் பங்களிப்புக்கு நிர்வாகிகளை விட சில வசதிகள் கூடுதலாகச் செய்யப்பட்டிருக்கும். அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவை முதன்மைப்படுத்த ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?
தமிழ் விக்கிப்பீடியாவை தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்வதுடன் பங்களிக்கவும் முன்வர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முதல் முயற்சியாக, தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகத் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய 500 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் சீர்திருத்தும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்த பிறகு 500 கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டு குறுந்தகடுகளாக உருவாக்கி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசின் நிதியுதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இதற்காக தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குத் தமிழக முதலமைச்சர் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
– தேனி. எம். சுப்பிரமணிக்கு கட்டுரை.காம் தனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது!
_________________________________________________________________________ 

முதல் 15 இடங்களைப் பிடித்த விக்கிப்பீடியாக்கள்

விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டுள்ள 285 உலக மொழிகளில் முதல் 15 இடங்களைப் பிடித்த மொழிகளும் அதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையும் கொண்ட பட்டியல். (பார்வையிட்ட நாள்: 29-06-2012)

#
மொழி
கட்டுரைகள் எண்ணிக்கை
உலக மொழிகளில் நிலை
1ஆங்கிலம்
3,98,5071
1
2ஜெர்மன்
1,42,6342
2
3பிரெஞ்ச்
1,265,708
3
4டச்சு
1,051,294
4
5இத்தாலி
9,34,847
5
6போலிஷ்
9,05,275
6
7ஸ்பானிஷ்
8,99,682
7
8ரஷ்யா
8,69,931
8
9ஜப்பான்
8,12,577
9
10போர்ச்சுக்கீசு
7,40,262
10
11சீனா
4,85,433
11
12சுவேதீஷ்
4,77,443
12
13வியட்நாம்
4,23,655
13
14உக்ரேனியன்
3,89,078
14
15கட்டாலன்
3,77,806
15

இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் விக்கிப்பீடியாக்களும், அவற்றிலிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை, அது உலக மொழிகளுக்கான பட்டியலில் பெற்றிருக்கும் நிலை, இந்திய மொழிகளில் பெற்றிருக்கும் நிலை குறித்த பட்டியல் (பார்வையிட்ட நாள்: 29-06-2012)
#
மொழி
கட்டுரைகள் எண்ணிக்கை
உலக மொழிகளில் நிலை
இந்திய மொழிகளில் நிலை
1
இந்தி
1,02, 832
40
1
2
தெலுங்கு
50,292
58
2
3
தமிழ்
47,099
59
3
4
மராத்தி
36,350
70
4
5
மலையாளம்
24,345
79
5
6
மேற்கத்திய பஞ்சாபி
24,279
80
6
7
வங்காளம்
23,611
82
7
8
குஜராத்தி
22,030
85
8
9
உருது
18,548
89
9
10
கன்னடம்
11,713
108
10
11
சமசுகிருதம்
7,635
126
11
12
பஞ்சாபி
3,412
153
12
13
பீகாரி
2,709
170
13
14
ஒரியா
2,668
172
14
15
அசாமிஷ்
1,322
208
15
16
சிந்தி
357
250
16
17
காஷ்மீரி
238
259
17
 கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்குக் கொடுக்கின்ற 

எல்லாமே பிறருக்குக் கொடுப்பததற்காகத்தான். நாம் இதை அடிக்கடி மறந்து விடுகின்றோம்.

Add caption


கட்டுரையாளர் : மாயவரத்தான்....

நமது தளத்தில் 7 கட்டுரை(கள்) எழுதியுள்ளார்..
Share___________________________________________
___________________________________________
___________________________________________

0 comments:

Post a Comment

Kindly post a comment.