Wednesday, June 13, 2012

எல்லா நாடுகளிலும் யாளி ( DRAGAN ) - பேராசிரியர்: அ.பெருமாள் & பொறி இயல் பட்டதாரி , மணி தணிகை குமார்



உலகம் முழுவதும் பரந்து விரிந்து கோலோச்சும் கலை- இலக்கிய -ஓவியச் செழுமைகள்தான் மானுட பாரம்பரியத்தைத் தலைமுறைதோறும் கொண்டு செல்கின்றன.


இவை குறித்த மெய்யான ஆய்வுகளும் கடவுளைத் தேடுவதற்கு ஒப்பானதேயாகும்

 1. .உயிர்வாழ் பிராணிகள் பலவற்றின் கலப்படமாகத் தோன்றும், நம்ப முடியாத அளவு விந்தை மிருகம் யாளி.கற்காலத்திற்கும் முந்திய சரித்திரக்கால மிருகங்கள் சிலபோலும் விந்தையான தோற்றம் கொண்டது.நாட்டுப்புறக் கதைகளின் நம்புதற்கரிய கற்பனையோடு கலந்தது.

தலையையும் உடம்பையும் பார்த்தால் தற்போதுள்ள ஊர்வன வகை சார்ந்த, முதன்மையாகப் பாம்பு போலும், பறக்கும் தன்மையதாய், நீண்ட வாலும், நான்கு கால்களும் கொண்ட உடும்பு போலும் தோன்றுவது, ஐரோப்பிய யாளி.,
அதன் அண்மைக் கிழக்குப் பிரதேசத்தில் உள்ளதைப்போல் பாம்பு வடிவினது. கீழை நாடுகளில் போலன்றி, பொதுவாக பாம்பும் யாளியும் தீமை விளைவிக்கும் பிராணிகளாகவே கருதப்படுகின்றன.

அநேகமாக ஒவ்வொரு நாட்டின் புராணக் கதைகளிலும் யாளியைப் பார்க்க முடியும். பல நாக்குகளும் தீச்சுவாலை கக்கும் வாயுமாக சில யாளிகள் தோற்றமளிக்கும்.

சிஙகம் முதலாய் நாய் அல்லது பூனை போலும் தலையைக் கொண்டிருக்கும்.
பிளந்துபட்ட கொம்பு-ந்கங்களுடன் காட்சியளிப்பதே பாரசீக யாளி.

பாபிலோபியப் பெண் யாளி ( DRAGONESS ) நான்கு சிறகுகளும் செதில் நிறைந்த உடம்பும் கொண்டது.

முந்தைய கிரேக்கத்தைப்போல எகிப்தில் யாளி என்பது பாம்போ, சீன யாளியோ, ஷான் காலத்து வாங் சொன்னது போல, கலைமானுக்குரிய கொம்புகளும் ஒட்டகத் தலையும் இராட்சதக் கண்களும் பாம்பின் கழுத்தும் கொண்டதாகும்.

2.  பழங்காலத்து ஐரோப்பிய மற்றும் அண்மைக் கிழக்கு நாடுகளின் நாகரீகத்தில் யாளியானது தீமை, கொடுமை ஆகியவற்றின் உருவமாகக் கருதப்பட்டது.

கிறித்துவ நம்பிக்கையின்மையின் வடிவாக இருந்தது. புனித பைபிளில் யாளியானது பறவை-நாகம் என்றும், பேய், சாத்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( புனித பைபிள்-திருவெளிப்பாடு : 12/7-8 ) புனித மைக்கேல், தூய பிலிப், நற்ஜார்ஜ் பொன்ற புனிதர்கள் யாளியுடன் போராடிய பல கதைகள் உள. கிறித்துவ நம்பிக்கை நலிந்த ( PAGAN EUROPE ) ஐரோப்பிய சரித்திரக் காலத்தைப் புரட்டினால், நாட்டுக் கதைகளில், ஆக்கிரமித்துக் கொண்ட யாளிகளுடன் போர்புரிந்து, மென்மையான பெண்களை விடுவித்த போராட்ட நாயகர்கள் உலா வருவர்.

கொடூரமான, ஆனாலும், அருமையான யாளி போர்ச் சின்னமாக, கலகத்தூதாகக் காட்சியளிப்பதையே சரித்திர ஏடுகள் சான்றுரைக்கும்; ரோம் படை வீரர்களின் வெற்றிப் பெருமிதத்திற்கு யாளிக்கொடி அணிவகுப்பு அணி செய்யும். ஆர்தர் அரசராகுமுன், ஒளிமயமான யாளி வானில் காட்சிதர, பொன்யாளியே அவர்  போர்க் கொடியில் துலங்கிற்று.

சாக்ஸ்ன் அரசர்களும் நார்மன் மன்னர்களும் வேல்ஸ் நாட்டு இளவரசர்களும் யாளிக் கொடியே முத்திரையாய்ப் படையுலா சென்றமை இராஜ கதைகளாயின.

பிரிட்டிஷ் யாளி செதில்களுடன், முதுகில் மூன்று மேடுகளுடன், பறவைகளின் அலகுடன், குத்திட்ட முட்செவிகளுடன், வேலின் கூர்த்த நாக்குடன் விளங்குவதைக் காணமுடிகிறது.

படைத்தூது யாளிக்கு இரு கால்களே பொதுவாக இருப்பினும் நான்கு கால்களுடனும் காட்சி அளிப்பதும் உண்டு.

3.  மேலை யாளிக்கு நேர்மாறான வடிவில் கீழை நாட்டு யாளி தோன்றக் காணலாம்: ஜப்பானிலோ, சீனாவிலோ தீமைக்குச் சான்றாய் யாளி என்றுமே காட்சியளித்ததில்லை: இயற்கைச் சக்திகளுடன் ஒன்றாய் வாழ்க்கையில் கலந்த சாட்சியான யாளி, தாவு ( TAO )  மதத்தினருக்குத் தாவின் வடிவாகவே தோன்றும்.

பளிங்கு அரண்மனைகளில் அமைச்சுடன், படைபலத்துடன் வாழும் சீனாவின் நான்கு இராஜ  யாளிகள்  வாழ்க்கைக்கு உணவளிக்கும் மளைக்குக் காரணமாக, மழையை மன்ணுக்குக் கொண்டுவர வேண்டி, மக்கள் ”யாளி நடனம்” ஆடுவதனைச் சம்பிரதாமாகக் கொண்டதையும் காண முடிகின்றது.

ஜப்பானிய யாளிக்கு, கால்களில் நீளமான நகங்கள் மூன்றிருக்க,  சீன யாளிக்குப் பொதுவாக நான்கிருக்க, சீன இராஜ யாளியை ஐந்து நகங்களுடன் சித்தரித்தல் சிறப்புக் கூறு எனினும், எப்போதுமே சீன- ஜப்பானிய யாளிக்குச் சிறகுகள் இருந்ததில்லை.

சீனச் சிற்றூர்களில் தீப்பிடித்து தீநாக்கு சுழன்று எழும்போதெல்லாம் நெருப்பை அணைத்திட யாளியை நினைந்து துணைக்கு அழைக்கும் வழ்க்கமும் உண்டு.

சாதாரண மக்களுக்கு மதில்களில், நீரோடைகளில் வாழும் இராஜ யாளிகள் துணையாய் அமைவதும்  உண்டு. அவற்றிற்குப் பெரு மரியாதை/ மதிப்பு மக்களிடம் உண்டு.  யாளியை நினைவூட்டும் விழாக்களும் உண்டு. ஆண்டுதோறும் ஐந்தாம் திங்களில் ஐந்தாம் நாளில் நடைபெறும் ”யாளிப் படகு விழா”  அதற்குச் சான்றாகும்.

நன்றி: பர்னலின் ( PURNELL ) புதிய ஆங்கிலேயச் சொல் விளக்க அகராதி, லண்டன், 1965, தொகுதி-4, பக்கம்: 1992-93.


பேராசிரியர் அ. பெருமாள் தமிழாக்கம் செய்த, சீன-ஜப்பானிய யாளியின் ஓவியக் கலைத் தத்துவம் என்ற நூலின் ஒரு பகுதி. இதனை ஆங்கிலத்தில் எழுதியவர், லாரன்ஸ் பின்யன் ( LAWRENCE BINYON ) 

வெளியீடு: கதிர் பதிப்பகம், 
D/158 சம்பந்தர் தெரு, 
அழகப்பன் நகர், 
மதுரை-625 003.

மேற்படி  நூலின் எஞ்சிய பகுதிகள் தனியாக ஒரு பதிவில் எழுதுவேன்.

பொறியியல் பட்டதாரியான, மணி தணிகை குமார்,  (நாகர்கோவில் )  அவர்கள் தமிழில் எழுதிய யாளி என்னும் நாவலைப் படித்த பின்னரே, யாளியின் பால் கவனம் சென்றது. அதன் தொடர்ச்சியாக விசித்திரமாக அதே நாகர்கோவில் நடைபாதைக் கடை ஒன்றில் , அதே மணி தணிகை குமாரால் வாங்கப்பட்டு, எனக்கு அனுப்புவித்த நகலின் அடிப்படையில் எழுதப்பட்டதே இப்பதிவு.

தமிழகத் திருக்கோவில்களில் காணப்படும் யாளி சிலைகளைக் கண்டபின் அவரது கற்பனையில் எழுதப்பட்டதே யாளி என்னும் நாவல். அதிலும் யாளிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன  என்பதே அவரது கற்பனையின் உச்சம். இது குறித்துத் தனியாக ஒரு பதிவு இதே வலைப்பூவில் எழுதப்பட்டுள்ளது. தேடினால் கிடைக்கும்.

மணி தணிகைகுமாரின் அலைபேசி எண்:9443177764..அலைபேசி எண் கிடைப்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. தொடர்பு கொள்ளும்போது கிடைக்காவிடினும், படைப்பாளி  தன் மொபைலில் வந்துள்ள மிஸ்டுகாலைப்  பார்க்கும் பொழுது நிச்சயமாய்த் தொடர்பு கொள்வார். 


ஒரு படைப்பாளிக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களிடம் உரையாடுவதைத் தவிர வேறு மகிழ்ச்சிதரும் செயல் என்னவாக இருக்கக் கூடும்? 


இன்றளவும் யாளி குறித்துத் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பது எனது துணிவான முடிவு.

1 comments:

  1. மிக நேர்த்தியான பதிவுங்க அய்யா. யாழி பற்றிய பல புதிய செய்திகளை இதில் நான் தெரிந்துகொண்டேன். இது போன்ற பயனுள்ள பதிவுகளை இன்னும் எழுதவேண்டுகின்றேன்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete

Kindly post a comment.