Sunday, April 15, 2012

வீரப் பெண்மணி, பத்திரிகையாளர், மேரி கால்வின்

படத்தில் காணப்படும் வீரப் பெண்மணியின் பெயர், மேரி கால்வின். போர்க்களச் செய்தியாளர். போர்க் குற்றங்களை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய குரல், இப்போது ஓய்ந்து விட்டது. 23-02-2012-ல் சிரியாவில் ஹொம்ஸ் நகரில் அந்தப்படைகள் வீசிய ஏவுகணை ஒன்றில்,  ”அரசு எதிர்ப்பாளர்கள்  ஊடக மையம் “ என்ற அந்தக் கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

நொறுங்கி இடிந்து விழும் கட்டடத்துக்குள்ளிருந்து பல உள் நாட்டுச் செய்தியாளர்களும், ஒன்றிரண்டு வெளிநாட்டுச் செய்தியாளர்களும் உயிருக்கு அஞ்சி வெளியே ஓடி வருகின்றனர். அவர்களில் இடது கண்ணை கருப்புத் துணியால் கட்டிய பெண்மணியும் ஒருவர்.

 ”சண்டே டைம்ஸ்” போர்க்களச்  செதியாளரான அவரது பெயர், மேரி கால்வின் என்பதாகும். தப்பித்து ஓடி வருபவர்களின்  மீதே எரிகணை ஒன்றும் வந்து வந்து விழுகின்றது. இறந்தும் போனார், மேரி கால்வின்.  அவருடன் அவர் அழைத்துச் சென்ற பிரெஞ்சு புகைப்படக்காரர் ரெமி ஒசலிக்கும் குண்டு வீச்சில் மாண்டு போனார்.

சிரியாவிற்கு ஏவுகணைத் தாக்குதலும், எரிகணை வீச்சும் புதிதல்ல. கடந்த 11 மாதங்களாக அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால், மேரி கால்வினின் படுகொலை அசாதரணமானது. உலகெங்கும் விடுதலைக்குப்  போராடும் மக்களுக்கு  ஈடு  செய்ய முடியாத  பேரிழப்பாகும்.இறப்பதற்கு  இரண்டு  நாட்களுக்கு முன்புதான் இலண்டனின் சேனல் நான்கு  தொலைக் காட்சியில் தோன்றி, சிரியாவின் 42 ஆண்டுகால பஷர் அல் அசாத் குடும்பத்தின்  சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திவரும்  போராட்டங்களையும்,  போராட்டத்தை  ஒடுக்குவது என்ற பெயரில் அல் அசாத்  ஆட்சி செய்துவரும்  படுகொலைகளையும்,  மக்கள்  படும் சொல்லொணாத் துன்பங்களையும்  காட்சிப்  படங்களாக்கி உலகின் முன் ஒரு செய்தியாளரின்  சாட்சியங்களாக்கியிருந்தார், மேரி கால்வின்.

பன்னாட்டு ஊடகங்களுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு  ஊடகங்களுக்கும்  சிரியா அரசு த்டைவிதித்திருந்த நிலையில்,  காவல் படைகளும்  அறியா வண்ணம்,  கடத்தல்காரர்கள் பயன்படுத்தும்  பாதையிலேயே பயணித்து, இலண்டணித்திலிருந்து சிரியா சென்று சேர்ந்தவர் மேரி

கால்வின்.உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் முயற்சியில் மரணத்திற்கு அருகாகவே அவர் பயணித்த  நாட்களும் நாடுகளும் அதிகம்.

 கொசவா,  செசன்யா,  ஜிம்பாப்வே,  கிழக்கு  தைமூர்,  ஈராக் , லிபியா,  எகிப்து,  ஈழம்  என எங்கெல்லாம் மனித குலம் வதைக்கப்  படுகின்றதோ  அங்கெல்லாம்  உயிரைப்  பயணம் வைத்து செய்தி  சேகரித்து வந்தவர் அவர்.

 2001-ல் சிறிலஙா இராணுவத்தின்  தடையை மீறி, ஈழப் பகுதிகளுக்குச் சென்று தமிழ் மக்கள் படும் இன்னல்களை,  போராலும்  பட்டினியாலும்  ஏற்படும் எண்ணற்ற இறப்புகளை  கட்டுரைகளாகத்  தீட்டி, அவை இலண்டனிலிருந்து வெளிவரும் “ சண்டே  டைம்ஸ் “ நாளிதழில் கால்வின் வெளியாக்கியபோதுதான்  மேற்லுலகம்  ஈழப் பிரச்சனையைத்  திரும்பிப் பார்த்தது.

வன்னியிலிருந்து திரும்பும்பொழுது இவர் வஎஉம்  பாதையைத்  தெரிந்து கொண்ட  சிறிலங்கா  இராணுவம்  இவரைப்  படுகொலை செய்யும்  நோக்கத்துடன்  தாக்குதலை  நடத்தியது.. தாக்குதல்  நடவடிக்கையில்  படுகாயமடைந்து  இடது  கண்  பார்வையைப்  பறி கொடுத்த  மேரி  கால்வினை,  அந்த  நிலையிலும்  சிறைப்  படுத்தியதோடு  மட்டுமல்லாமல்,  அவர்  ஆடைகளையும்  களைந்து  நிர்வாணமாக்கி  சித்ரவதையும்  செய்தது, சிறிலங்கா  இராணுவம்.

ஈழப்  பகுதிகளுக்குச்  சென்று  அவர்  கண்டறிந்து  வந்ததையும்,  சிறிலங்கா  இராணுவத்தின்  தாக்குதல்களிலிருந்து  தான்  மீண்டு  வந்தது  பற்றியும்  “சண்டே  டைம்ஸ்”  நாளிதழில்  மேரி  கால்வின்  எழுதிய  போதுதான்  இங்கிலாந்து உட்பட  பல  உலக  நாடுகள்,  இலங்கை  அரசின்  இனவாதப்  பயங்கரத்தைப்  புரிந்து  கொண்டன.

2009  மே  திங்களில்  நடைபெற்ற  நான்காம்  கட்டப்  போரின்  இறுதி நாட்களில்  ஐ.நா.  மன்றத்திற்கும்  விடுதலைப்  புலிகளுக்கும்  தகவல்  தொடர்பாளராகச்  செயல்பட்டார்,  மேரி கால்வின்.

அப்போது  மேரி  கால்வின்  மூலம் ஐ.நா.  மன்றத்திற்கு  அளித்த வாக்குறுதிகளை  மீறி,  வெள்ளைக்  கொடி  ஏந்தி  சரணடைய வந்த  நடேசந்  புலித்தேவன்  குழுவினரை  நயவஞ்சகமாகக்  கொன்றது  இலங்கை  அரசு.

எல்லா  தர்மங்களையும்  மீறி, சிறிலங்கா  இராணுவத்தால் கொன்ரோழிக்கப்பட்ட புலிகள்,  தன்னால்  வழிநடத்தப்பட்டு  சரணடைய  வந்தவர்களாயிற்றே,  என்ற  ஆற்றாமையாலும்,  ஆழமான மனக்  காயத்திலும் இருந்த மேரி  கால்வின்,  என்றேனும்  ஒருநாள்,  இந்த நயவஞ்சகமான படுபாதகச்  செயல்களைச்  செய்தவர்களை-  அதற்குக்  காரணமானவர்களை- உலகின் முன் அடையாளம்  காட்டியே  தீருவேன் எனச்  சபதமெடுத்திருந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கும்  மேலாக ஊடகத்  துறையிலிருந்து , உலகின் கண்முன்  மனித அவலங்களை, அவர்களின்  துயரங்களை  வெளிச்சமிட்டுக்  காட்டிய மேரி கால்வின்  பிறப்பால்  அமெரிக்கர்.  வாழும்  நாட்டால் பிரிட்டானியர்  ஆனவர்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா.  மன்றத்தில்  அமெரிக்கா ப்தீர்மானம்  முன்னெடுக்கவரும்  இவ்வேளையில்,  அத்தீர்ம்னானம் வெற்றிபெற உலக மக்களை ஒன்றிணைப்பதுதான் நாம்  மேரி கால்வினுக்குச்  செய்யும் உண்மையான் அஞ்சலியாகும்.

நன்றி :-ஊடகச் செம்மல்: பவாசமத்துவன், தமிழர்நாடு.கி.பி.2043.எண் 3,
எ சு,-9, மருத்துவர்கள் குடியிருப்பு, பூ.சா.கோ. மருத்துவமனை வளாகம்,
கோயம்புத்தூர்.    thamizarnadu@yahoo.com
0 comments:

Post a Comment

Kindly post a comment.