Saturday, April 14, 2012

திருவள்ளுவர் திருநாளும் ஆண்டுப் பிறப்பும்










Dinamani - First Published : 14 Apr 2012 03:06:00 AM IST

1935-ஆம் ஆண்டு, மே திங்கள் 18-ஆம் நாள், சென்னை திருவள்ளுவர்
திருநாட்கழகத்தினர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திரளாக
மக்கள் கூடியிருக்க திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடினர்.
 மே திங்கள் 18 என்பது வைகாசி மாதத்தில் அமையும் நாளாகும். அந்தத்
திருநாள் கூட்டத்தின் தலைவர் மறைமலை அடிகள். அவரைத் தலைமையேற்றுக் கூட்டத்தை நடத்திவைக்க முன்மொழிந்து அழைத்தவர் திருநாட்கழகத் தலைவர் பெரும்புலவர் கா. நமச்சிவாய முதலியார். வழிமொழிந்து அழைத்தவர்கள் திரு.வி.க; தெ.பொ. மீனாட்சி சுந்தரம், மணி. கோடீச்சுர முதலியார் ஆவர்.

திருநாட்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருமக்கள்: ச.
சச்சிதானந்தம்பிள்ளை, பி. தாவூத்ஷா, ஈ. டி. இராஜேஸ்வரி அம்மாள், பா.
கண்ணப்ப முதலியார், டி. செங்கல்வராயன், சிவ. அருணகிரி முதலியார், மா.
பாலசுப்பிரமணிய முதலியார், சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், டி.
செங்கல்வராயபிள்ளை, காழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, ஆர்.எஸ். சாம்பசிவ
சர்மா, வ. சுப்பையாபிள்ளை, டி.பொ. கோபாலரத்னம், மே.வீ. வேணுகோபால்பிள்ளை, நின்றை தங்கவேலு முதலியார்.
 மேலும், சென்னை மாநில அமைச்சராக இருந்த எஸ். முத்தையா முதலியார்,
தெய்வநாயகம்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, எ. பாலகிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட பெரியோர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டனர்.
 "திருவள்ளுவர் திருநாள் கழகம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கித்
திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என வ.
சுப்பையாபிள்ளை, தமது நண்பர் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளையுடன் கலந்து பேசி முடிவெடுத்துச் செயலாற்றியதன் விளைவே மே திங்கள் 18, 19 ஆகிய நாள்களின் கொண்டாட்டமாகும்.

இந்த இருநாள் கூட்டத்துக்கும் மறைமலை அடிகளே தலைவர். அந்தக் காலத்தில் கூட்டப்பட்ட அந்தச் சிறந்த விழாவில் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவில்லை.  மறைமலை அடிகள் தமது தலைமை உரையில் ""கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்'' எனக் குறிப்பிடுகின்றார்.தாம் ஆய்ந்து கண்ட முடிவை ஏற்றுத் தொடர் ஆண்டு கொள்ள வேண்டும் என அடிகள் கூறவில்லை. திருநாட் கழகத்தினரும் "தொடர் ஆண்டு' என்ற ஒன்றைக் குறிப்பிடவில்லை

திருநாட் கழகத்தின் நோக்கங்கள் என அவர்கள் குறிப்பிடும் நோக்கங்களில் 1.
பொதுமறையாகிய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் திருநாளை ஆண்டுதோறும் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடச் செய்தல். 2. திருவள்ளுவர் திருநாளன்று ஏழைகளுக்கு உணவளிக்கச் செய்தல் என்பனவாகிய ஒன்பது நோக்கங்களில் திருவள்ளுவர் தொடர் ஆண்டு என ஒன்றைக் கொள்ள வேண்டும் என்ற முடிவு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மேலும், திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் மே திங்கள் 18-ஆம் நாள் ஊர்வல
முடிவில் திருமயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று வள்ளுவரை ம்வழிபட்டுள்ளனர்.  ஆண்டுதோறும் வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் மயிலைத் திருவள்ளுவர் கோயிலில் வழிபாடு நடக்கிறது என்பதை நினைவுகூர வேண்டும்.

 ""தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித்திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்'' (மறைமலை அடிகள் வரலாறு - மறை. திருநாவுக்கரசு)

திருவள்ளுவர் திருநாள் என்பது வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில்
கொண்டாடப்பட வேண்டியது என்பது மறைமலை அடிகளின் தனிப்பட்ட முடிவு. எந்தக் கூட்டத்திலும் அது தீர்மான வடிவில் வரவில்லை.
 இந்த வைகாசி அனுஷ நட்சத்திரத்திலேயே மயிலைத் திருவள்ளுவர் கோயிலிலும் விழா எடுக்கின்றார்கள்.  திருவள்ளுவர் திருநாட் கழகத்தினரும் வைகாசியிலேயே திருவள்ளுவருக்கு விழா எடுக்க முடிவு செய்துள்ளனர்.

திருநாட் கழகத்து முன்னோடிகள் சாதாரணமானவர்கள் அல்லர் என்பதையும், மறைமலை அடிகளுக்குக் குறைந்தவர்கள் அல்லர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர், மறைமலை அடிகளின் தொடர் ஆண்டு முடிவினை ஒப்புக்கொண்டார்களா எனில், இரண்டு நாள் கூட்ட நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது

. ஆனால், திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்களில் அமைகிறது என்பதில்
மறைமலை அடிகளும், திருவள்ளுவர் திருநாள் கழகத்தினரும் ஒத்துப்போகின்றனர்.
 1935-ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மண்டப நிகழ்ச்சி இவ்வாறிருக்க,


நமது முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, ""மறைமலை அடிகள் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை- பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென ஒரு ""தனி ஆண்டு'' தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்'' என்கிறார். (பக்கம் 38-39. 2008-ஜனவரி 23-ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை)

 ""அடிகள் 1921 மார்கழித் திங்கள் இறுதியில் யாழ்ப்பாணம் சேர்ந்தனர்.
யானும் உடன் சென்றேன். அப்போது என் ஆண்டு 14''.
 ""1921 தைத்திங்கள் முதல்நாள் யாழ்ப்பாணத்தில் அடிகள் "தமிழர் நாகரிகம்'
என்னும் தலைப்பில் உரையாற்றினார்''  (மறைமலை அடிகள் வரலாறு - மறை. திருநாவுக்கரசு).  1921 தை மாதம் முதல் நாளில் மறைமலை அடிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்தார் என்கிறார் அவர் மகனும் அடிகள் வரலாற்றை எழுதியவருமாகிய மறை. திருநாவுக்கரசு.
 தமது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த அடிகள் 1921-ஆம் ஆண்டு எந்த மாதத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் கூட்டத்தில் தலைமை
தாங்கினார் எனக் கருணாநிதி குறிப்பிடவில்லை. எந்த அமைப்பின் சார்பில் 500- க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடினார்கள் என்பதையும் சொல்லவில்லை. அதற்கான ஆதாரம் இருந்தால், கருணாநிதி எடுத்துக் காட்டினால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதத் தயக்கமும் யாருக்கும் இருக்காது.

1921-இல் அப்படி ஒரு கூட்டத்தில் அனைவரும் கூடி முடிவு செய்திருந்தால்
அக்காலம் தொடங்கித் திருவள்ளுவர் திருநாளைத் தொடர்ந்து
கொண்டாடியிருப்பார்களே! மேலும் 1935-ஆம் ஆண்டில் கூடிய கூட்டத்தில்
கட்டாயம் அதைக் குறிப்பிட்டிருப்பார்களே! அவ்வாறு குறிப்பிடாதது கொண்டு
1921-இல் கருணாநிதி சொல்லும் கூட்டம் நடைபெறவில்லை என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது.

1921}இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரிக் கூட்டத்தில் கலந்துகொண்ட
திரு.வி.க. அந்தக் கூட்டத்தின் தொடர் ஆண்டு தொடர்பாக இயற்றப்பட்ட
தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார் என்பதாகக் கருணாநிதி சொல்கிறார்.
 1921-இல் ஒரு கூட்டம் நடைபெற்றதா என்பது ஐயமாக உள்ளது.

ஆனால், 1935-இல் நடந்த கூட்டத்தில் திரு.வி.க. கலந்துகொண்டு மறைமலை அடிகளின் தமிழ் உணர்வினைப் பாராட்டி அவரைத் தலைமை ஏற்க அழைத்தது உண்மை. அடிகளின் திருவள்ளுவர் ஆண்டு முடிவு பற்றி அவர் ஏதும் அங்கே பேசவில்லை. அப்படியான ஒரு பதிவும் இல்லை. மாறாக, மறைமலை அடிகளின் ஆய்வுப்போக்கில் திரு.வி.க. மாறுபாடு கொண்டவர் என்பதனை ""அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்கும் கணைகள் இருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும் என்பது எனது உட்கிடக்கை. மறைமலை அடிகள் சமய
நூல்களிலும் தத்துவ நூல்களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடும்
கருத்துகளை என் மனம் ஏற்பதில்லை.

அவ்வாராய்ச்சியால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது, முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இறையாகும் என்பது எனது எண்ணம்.ஒருவர் பன் மனைவியரை மணக்கலாம் என்று அவர் அறைவது எனது நோக்குக்கு
முற்றும் முரண்பாடானது'' எனத் திரு.வி.க. எழுதுவது கொண்டு அதனை அறியலாம்.

 ÷திருவள்ளுவர் திருநாட்கழக நிகழ்வுகள் இவ்வாறிருக்க, 1963-ஆம் ஆண்டு
ஏப்ரல் 14-ஆம் நாள் சென்னை இராயப்பேட்டைத் திருவள்ளுவர் மன்றத்தின்
சார்பில் முதல் திருக்குறள் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில்
அறிஞர் அண்ணா, அன்றைய மாநில நிதியமைச்சர் எம். பக்தவத்சலம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 ÷அந்த மாநாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவரின் நினைவாக ஜூலைத் திங்கள் 21-
ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரையில் யாதேனும் ஒரு நாளை அரசாங்கம்
விடுமுறையாக விடவேண்டும் எனக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
 ÷அதன் பயனாக, பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில், 1966-ஆம்
ஆண்டு முதல் ஜூன் திங்கள் 2-ஆம் நாளை வள்ளுவர் நாளாகக் கொண்டாட தமிழக அரசு விடுமுறை அளித்தது. இதனைச் சுட்டிக்காட்டி 1967-இல் நடைபெற்ற இரண்டாவது திருக்குறள் மாநாட்டில் இராயப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தார் எம்.பக்தவத்சலத்துக்கும் அண்ணாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.  ÷திருவள்ளுவர் பிறந்த மாதமாகத் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் கொண்ட மாதம் வைகாசி. 1966-இல் பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு திருவள்ளுவர் தினத்திற்கான விடுமுறை அளித்த மாதமும் வைகாசி என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்

இந்த வைகாசி மாத விடுமுறையில் அண்ணாவுக்கும்
உடன்பாடு இருந்திருக்க வேண்டும். இல்லையேல் அதனை அவர் மறுத்திருப்பார்.  ÷1967-இல் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தபின்பு, அண்ணாவும் காலமான பின்னர் கருணாநிதி முதலமைச்சராகிறார். வரலாறு படிக்கமட்டுமன்று வரலாறு படைக்கவும் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கருணாநிதி திருவள்ளுவர் நினைவு தினம் குறித்துப் புதிய வரலாறு படைக்கப் புறப்பட்டார்

÷வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி,திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார்.  ÷கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலையடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார்.

÷திருவள்ளுவர் ஆண்டை அனைவரும் வரவேற்றனர். மக்கள் மத்தியில் அது
வழக்கத்திற்கு வந்தது. ஆனால், திருவள்ளுவர் ஆண்டு அறிமுகமான பின்னர்,
தமிழர்கள் இரண்டு ஆண்டுப் பிறப்பைக் கொண்டாட வேண்டியவராயினர்.


ஒன்று

தமிழ் வருடப்பிறப்பு எனச் சித்திரையில் கொண்டாடப்படுவது. மற்றொன்று
திருவள்ளுவர் வருடப் பிறப்பு எனத் தையில் கொண்டாடப்படுவது. வள்ளுவர்
ஆண்டுப் பிறப்பு அவ்வளவாக மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இதனால்,
திருவள்ளுவர், தமிழ் வருடப் பிறப்பிலிருந்து அந்நியப்பட்டிருப்பதுபோல ஒரு
தோற்றம் உருவாயிற்று. தமிழ் வருடங்கள் எனப் பெயர் பெற்றிருந்தாலும்
சுத்தமான வடமொழிப் பெயர்களோடு சுழற்சி முறையில் வரும் 60 வருடங்கள்,

தமிழர்களுக்குத் தொடர்பில்லாதவையே என்பதில் ஐயமில்லை. கடந்த 400
வருடங்களாகத்தான் இவை வழக்கில் உள்ளன. ÷தொல்காப்பியத்திலும் சரி, சங்க இலக்கியங்களிலும் சரி இந்த 60 வருடப் பெயர்கள் இல்லை. மாறாக சித்திரை தொடங்கி, பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.  ÷மறைமலையடிகள் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைக் கொண்டது,

60 வருடச் சுழற்சி முறையிலான வடமொழி வருடங்கள் வழக்கில் இருந்து நீக்கவே எனில் அது  மிகையாகாது.வருடப்பிறப்பை இரண்டாகக் கொண்டாட வேண்டிய இடர்பாட்டை நீக்கவே கருணாநிதி தை முதல் நாளைத் தமிழ் வருடப் பிறப்பு என அறிவித்தார் எனலாம். வேறு எந்த ஆதாரத்தையும் அவரால் தரமுடியாது. ஆனால், இந்த அறிவிப்பு நம் முன்னோர்களின் வானவியல் முடிவிலிருந்து முற்றாக விலகி நிற்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

  ÷மறைமலையடிகள் உள்ளிட்ட பெரியோர்களும் அவர்கள் முன்னோர்களும்,
பண்டுதொட்டுக் கைக்கொண்டுப் போற்றி வந்த சித்திரைப் பிறப்பில் தொடங்கி, பங்குனி வரையிலான 12 மாதங்களை ஒதுக்க முடியாது. அவற்றில் சில வடமொழியிலானவை, சில தமிழ் மொழியிலானவை என்ற ஆராய்ச்சி வெட்டி வேலையே!  ÷தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தொடங்குகிறது என்பதற்குப் பல சான்றுகள் தரமுடியும். தையில் தொடங்குகிறது என்பதற்கான சான்றுகள் கிடையா. சிலர் வலிந்து சொல்லும் காரணங்கள் அறிஞர் சபை ஏறா.÷இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?

 ""எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
 அவ்வது உறைவது அறிவு''
 -என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, உலகத்தோடு ஒட்டிச் செல்ல நமக்குத்
தொடர் ஆண்டு தேவையே. அது திருவள்ளுவர் பெயரால் ஏற்கெனவே அறிமுகமாகிப் பழக்கத்தில் வந்துவிட்டது. பிரச்னை தொடர் ஆண்டில் இல்லை. எந்த மாதத்தில் அந்த ஆண்டு பிறக்கிறது என்பதுதான் பிரச்னை.

  ÷மறைமலையடிகள் தொடங்கி, பக்தவத்சலம் ஈறாகப் பெரியவர்கள் வள்ளுவர் பிறந்ததாகக் கொண்ட மாதம் வைகாசி. கருணாநிதி கொள்ளும் காலம் தை. ÷தமிழர்தம் வானவியல் வருடப் பிறப்பாகச் சித்திரையைக் குறிக்கிறது.மறைமலையடிகள் குறிப்பிடும் வைகாசி அனுஷத்திற்கும் சித்திரைத் தொடக்கத்திற்கும் இடையே உள்ள நாள்கள் மிகக் குறைவே. தை மாதத்திற்கும் வைகாசிக்கும் இடையீடு மிகப் பெரிது. ÷வைகாசியாயினும், தை மாதமாயினும் யூகத்தின் அடிப்படையிலேயே வள்ளுவர் பிறந்த நாள் அமைக்கப்படுகிறது என்பதனை நினைவிலிருந்து நீக்காமல் நாம் ஒரு
முடிவுக்கு வரலாம். அது எது?

 ÷ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்றில் கொண்டாடப்படுகிறது. இந்தப்
புத்தாண்டை இயேசு பிறப்பிலிருந்து கணக்கிடுகின்றனர். இயேசு பிறப்பு
டிசம்பர் 25 என்கின்றனர். இயேசு பிறந்த நாளிலிருந்து 6 நாள்கள் கழித்தே
ஆங்கிலப் புத்தாண்டு தொடங்குகிறது. இதைப்போல வைகாசி அனுஷ
நட்சத்திரத்திலிருந்து 15 அல்லது 20 நாள்களை முன்வைத்து சித்திரை ஒன்றில்
திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது என முடிவு செய்யலாம். அவ்வாறு முடிவு செய்தால் இப்போதிருக்கும் குழப்பத்திலிருந்து விடுபடலாம். அறிஞர்கள் இந்த வழியில் நின்று சிந்தித்தால் திருவள்ளுவர் தொடர் ஆண்டும் கிடைக்கும், சித்திரையில் வருடமும் பிறக்கும்.


கட்டுரையாளர்: திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் - சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

மலையாளிக்குத் திருவோணம் போல, தமிழருக்கு
சமயங்கடந்த விழாவாகப் பொங்கலை 20-ஆம்
நூற்றாண்டில் வழங்கினோர் மறைமலையடிகள்,
பெரியார் ஈவேரா நாயக்கர், கி.ஆ.பெ. விசுவநாதம்,
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோராவர்.

கருணாநிதி 1971-ல் அரசு நாட்காட்டியிலும்,
1972-ல் தமிழரசு பத்திரிகையிலும் திருவள்ளுவராண்டு
இடம்பெறச்செய்தார்.

எம்ஜிஆர் 1981-ல் உலகத்தமிழ் மாநாடு (மதுரை), சற்று
முன்னர் எல்லா அரசாங்க நடவடிக்களிலும் திருவள்ளுவராண்டு
அச்சாக, பயன்படுத்த ஆணையிட்டார். இதுபற்றி
ஜி.ஓ, மற்றும் பத்திரிகைச் செய்திகள் 1981-ல் இருந்து
யாராவது இணையத்தில் தர முடியுமா?

எம்ஜிஆர் 1981-ல் திருவள்ளுவராண்டு பற்றிய அறிக்கைகள்,
செய்திகள் பற்றித் தகவல் அறிவிப்போருக்கு நன்றி.
பொள்ளாச்சி நசன், பல்லடம் மாணிக்கம், அரச ஆவணக்
காப்பகம் ... இங்கு இருக்கும். இத் தேடலுக்கு உதவுவோருக்கு
நன்றி,

நா. கணேசன்
http://nganesan.blogspot.com- Show quoted text -

நல்ல தகவல்களை நான்கைந்து இடங்களில் பதிவு செய்து வைப்போம்

நா.கணேசன், பொள்ளாச்சி நடேசன் போன்ற நல்லோர் கேட்கும்போது

எடுத்துக்காட்ட எளிதாக  இருக்கும். நன்றியுடன், சீராசை சேதுபாலா.

2 comments:

  1. தை முதல் (சனவரி 14) நாளுக்கும் சித்திரை முதல்நாளுக்கும் வானியல் அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறது. தை முதல் நாளில் ஞாயிறு தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதி்சைப்பயணத்தை மகர ஓரையில் (இராசியில்) தொடங்குகிறது. இதனை வட நூலோர் தட்சணாயணம் என்பர். சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) அதே ஞாயிறு புவியின் நடுக்கோட்டை கடக்கிறது. மீன ஓரையில் இருந்து மேட இராசிக்குள் புகுகிறது. எனவே தை முதல் நாள் சித்திரை முதல் நாள் இரண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. வைகாசி அனுச நட்சத்திரத்துக்கு அவ்வாறான வானியல் அடிப்படை இல்லை. இதுவே தை முதல்நாள் ஆண்டின் தொடக்கம் எனக் கொண்டதற்குக் காரணம் ஆகும். இன்னொன்றை கவனிக்க வேண்டும். ஞாயிறின் அச்சு ஞாயிறு சுற்றுப்பாதையில் ஞாயிறு - சந்திரன் ஈர்ப்புக்காரணமாக பின்னோக்கி நகர்கிறது. இதனால் ஞாயிறு இப்போது மகரக்கோட்டில் டிசெம்பர் 20-21 இல் புகுகிறது. இதனை Winter Solstice என்று வானியலாளர்கள் சொல்வார்கள். ஞாயிறு புவியின் நடுக்கோட்டை மார்ச்சு 20-21 இல் கடக்கிறது. அந்த நாளில் பகலும் இரவும் சமமாக இருக்கும். ஞாயிறு சரியாக கிழக்கில் உதித்து மேற்கே மறையும். இதனால் வேனில்காலம் ஏப்ரில் 14 க்குப் பதில் மார்ச்சு 20-21 இல் தொடங்கிவிடுகிறது. எனவே சித்திரை ஆண்டுப்பிறப்பின் போது வேனில் காலம் தொடங்குகிறது என்பது வானியல் அடிப்படையில் தவறு. உண்மையில் பருவங்கள் புவியின் அச்சு 23 பாகை சாய்ந்திருப்பதாலேயே ஏற்படுகின்றன. அதற்கும் ஓரைகளுக்கும், கோள்களுக்கும் தொடர்பில்லை.

    ReplyDelete
  2. வைகாசி அனுசத்துக்கு வானியல் அடிப்படை இல்லை. தை முதல் நாள், சித்தி்ரை முதல் நாள் இரண்டுக்கும் வானியல் அடிப்படை உண்டு. தை முதல் நாள் ஞாயிறு தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தை மகர ஓரையில் தொடங்குகிறது. சித்திரை முதல்நாள் ஞாயிறு மீன ஓரையில் இருந்து மேட ஓரைக்குள் புகுகிறது.

    ReplyDelete

Kindly post a comment.