Thursday, March 1, 2012

உலகப் பெரும் மானிடப் படுகொலைகளும் போர்க் குற்றங்களும் புதிய நூல்..

February 29, 2012

உலகின் நான்கு பெரும் போர்க்குற்றவாளிகளின் கதையும் சிறீலங்காவும்.
.
20 ம் நூற்றாண்டுவரை உலகில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மாபெரும் மானிடப் படுகொலைகளையும் விளக்கும் நான்கு பெரும் நூல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள இனவாதமும், இலங்கையின் உள்நாட்டு போரும் நிகழ்த்திய மானிடப் படுகொலைகளின் பரிமாணங்களை உலகம் பேசும் இவ்வேளை நமக்கு இந்த நூல்கள் மிகவும் அவசியமானவை.

போரை நடாத்தும் இரு தரப்பும் ஒருவரை மற்றவர் குறைகூறுவது உலக இயல்பு. ஆனால் இருவரும் செய்த மடத்தனமான வேலைதான் போர். இந்தக் கொடிய போர் தனி மனிதர்களுக்குக் கொடுத்த அதிகாரம் மனித குலத்திற்கு எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தியது என்பதை இந்த நூல்கள் அற்புதமாக விளக்குகின்றன.

முதலாவது நூல் ஸ்ரீவ் செம் சான்ட்பியா எழுதிய டி பற்றிய ஈ லொட்ஸ் என்ற நூலாகும்.

661 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தற்போது டேனிஸ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு 349 குறோணர்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

எப்படி அன்று, வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள் உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு, நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதுபோல லொட்ஸ் முகாமில் கொல்லப்பட்ட 200.000 யூதர்களின் மானிடப் படுகொலையையும், சர்வாதிகாரி ஹிட்லர் நிகழ்த்திய மாபெரும் போர்க் குற்றங்களையும் விளக்குகிறது இந்த நூல்.



1939ம் ஆண்டிலேயே போலந்து லொட்ஸ் நகரில் யூதக்கொலைக்கான தடுப்பு முகாமை உருவாக்கிவிட்டான் ஹிட்லர். படிப்படியாக இந்த முகாமை உலகத்தில் இருந்து துண்டிக்கிறான். உலகத்தின் தலைவர்கள், ஊடகங்கள் எதுவுமே உள்ளே சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட இருண்ட வன்னி போல இது படிப்படியாக மாறுகிறது
.
அங்கே அடைக்கப்பட்ட யூதர்கள் உணவின்றி, மருந்தின்றி, கல்வியின்றி, உலகம் தெரியாத மானிடர்களாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். அந்த முகாமில் இருந்து நீதி கேட்பவர்கள், உரத்து கதைப்பவர்கள், எல்லாம் கே. இசற் முகாமுக்கு மாற்றப்படுவார்கள். ஆசிய நாடுகளின் இசற் பிரிவு கொலைப் போலீஸ் போல கொலைஞர்கள் அங்கே இருப்பார்கள். அங்கு போவோருக்கு இறுதி முடிவு மரணமே.

ஐ.நா செயலர் கொபி அனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இன்றைய ஐ.நா செயலர் பான் கி மூன் ஆகிய தலைவர்களை சிறீலங்கா அரசு வன்னிக்குள் நுழைய அனுமதி மறுத்தது. இறுதிப் போரின்போது, சரணடைய வந்தவர்களை பொறுப்பேற்கக்கூட தன்னை அனுமதிக்கவில்லை என்று ஐ.நா பிரதிநிதி விஜய் நம்பியார் சென்ற வாரம் கூறியிருந்தார்.

இதுபோலவே அன்று போலந்து லொட்ஸ் முகாம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் வன்னிக்கும், யூத முகாம் லொட்ஸ்சிற்கும் ஒரேயொரு வேறுபாடு இருக்கிறது. வன்னிக்குள் புலிகள் ஆயுதங்களுடன் இருந்தார்கள் லொட்ஸ்சில் அப்படி யாரும் இல்லை. மற்றப்படி இரண்டும் சந்தித்த அவலம் ஒன்றுதான், அவற்றின் கோட்பாடும் ஒன்றுதான் என்பதை தெட்டத்தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது
.
இதே லொட்ஸ் படுகொலைகளை அங்கேயே இருந்து கண்காணித்த ஜேர்மனிய அதிகாரி பிறிட்றிஜ் கெலனர் என்பவர் எழுதிய யூதர்கள் இனப்படுகொலை நாட் குறிப்புக்கள் என்ற நூல் கொலைகளை மேலும் துல்லியமாக எடுத்துரைக்கிறது. மொத்தம் 941 பக்கங்களில் யூத மானிடப் படுகொலையை நேரடியாக பார்த்து எழுதிய அடுத்த நூல் மனிதப் பிறப்பையே திகைக்க வைக்கிறது. பக்கங்களை புரட்ட நாம் வன்னிக்குள் இருக்கிறோமா இல்லை லொட்ஸ் கொலை முகாமிற்குள் இருக்கிறோமா என்ற தடுமாற்றமே ஏற்படுகிறது.

கடந்த 1941 அக்டோபர் ஜேர்மனிய எஸ்.எஸ். படைப்பிரிவினர் நடாத்திய படுகொலைகளையே இவர் ஜேர்மனிய ஊழியராக இருந்து நேரடியாக பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சுடப்பட்டவர்கின் சடலங்களால் புதை குழிகள் நிரம்பிவிட்டன. மண் போடுவதற்கு இடமில்லாமல் குழி மூடிவிட்டது. அந்தக் குழிக்குள் குற்றுயிராகக் கிடப்பவர்களின் மரண ஓலம் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் நிரம்பிய குழி பற்றிக் கூட கவனமெடுக்காமல் சுட்டுக்கொண்டே இருந்தது எஸ்.எஸ். படைப்பிரிவு.



இப்படி ஒரு படைப்பிரிவுதான் அன்று வன்னிக்குள் நின்று படுகொலைகளை நடாத்திக் கொண்டிருந்தது…

வன்னியில் புதைகுழிக்குள் குற்றுயிராக மூடப்பட்ட பல்லாயிரம் தமிழர்களை அப்படியே நினைவுக்குள் கொண்டு வருகிறது இந்த நூல். ஆயுதம் ஏந்தியவர்கள் அப்பகுதியை உலகின் பார்வையில் இருந்து முற்றாக துண்டித்துவிட்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள்.

அந்த இடத்தில் மனித குலத்தைப் படைத்த கடவுளே தோற்றுப் போய் நின்றார். பெண் புலிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது கடவுளே செய்வதறியாது திகைத்து நின்ற காட்சி கண்களில் மின்னலாக வெட்டி மறைகிறது.

அன்று கேட்ட இசைப்பிரியாவின் அலறல் லொட்ஸ் முகாமின் புதைகுழிக்கு அருகாமையில் நடந்த நிகழ்வுகளிலும் கேட்கிறது.

இதற்கு என்ன செய்யலாம் என்று வன்னிப் படுகொலைகளை விளக்கும் புகைப்பட ஆவண நூல் ஒன்று சென்ற ஆண்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. அதுபோல லொட்ஸ் முகாமில் சிக்குப்பட்ட மென்டீல் குறோஸ்மான் என்ற புகைப்படக் கலைஞன் எடுத்த வெறும் 17 புகைப்படங்கள் கொண்ட ஆவணம் இன்னொரு நூலாக வெளியாகியுள்ளது.

எனது இரகசிய கமேரா என்ற தலைப்பில் வெளியாகிய அந்த நூல் இதற்கு என்ன செய்யலாம் என்ற நம் தமிழ் நூல் கேட்ட கேள்வியை உலகின் முன் வைக்கிறது.

நான்காவதாக வெளியாகியிருப்பது ஈ வின்ரவொல்ட் என்ற 171 பக்க நூல். இதுவும் போலந்தில் சர்வாதிகாரி ஹிட்லரின் யூத படுகொலைகளை விளக்குகிறது. போலந்து தலைநகர் வார்ஸோவில் அமைக்கப்பட்ட கொலை முகாமில் சிக்குப்பட்ட யூத சிறுமி ஒருவர் அன்று தன் கண்களால் படம் பிடித்த மானிடப் படுகொலைகளை பட்டவர்த்தனமாக எழுதியுள்ளார்.

வன்னியில் கதறியழும் சிறு பிள்ளைகளில் உயிர் தப்பிய யாரோ ஒரு பிள்ளை அந்த குளிர்கால படுகொலை என்ற நூலைப்போல ஒரு உண்மை நூலை உலகின் முன் தரும் என்ற நம்பிக்கையை இந்த நூல் ஏற்படுத்துகிறது
.
21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மானிடப் படுகொலையை நிகழ்த்திய நாடு சிறீலங்கா என்று நாம் கூறவில்லை ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட 80 பக்க உத்தியோக பூர்வ ஆவணம் எடுத்துரைக்கிறது.

இந்த ஆவணம் உண்மையின் ஒரு துளி மட்டுமே என்பது உலகறிந்த உண்மை. இது குறித்த உலகத்தின் உணர்வு ஜெனீவாவில் வெளிப்பட இருக்கிறது.

அதைத் தடுக்க இலங்கையும், இந்தியாவும் படாதபாடு படுகின்றன. ஆனால் லொட்ஸ் படுகொலையை எப்படி மறைக்க முடியவில்லையோ அப்படியே வன்னிப் படுகொலைகளையும் மறைக்க முடியாது என்பதற்கு இந்த நான்கு நூல்களும் ஆதாரமாக உள்ளன.

அடுத்து உலகப் பெரும் மானிடப் படுகொலைகளை நடாத்திய தலைவர்கள் குறித்த விசேட கட்டுரையும் இந்த மாதம் வரலாறு டேனிஸ் இதழில் சிறப்பு அம்சமாக வெளிவந்துள்ளது. அளவுக்கு மீறிய அதிகாரம் கைக்கு வந்ததும் ஆயுதம் ஏந்தியவர்கள் எப்படி கொலைஞர்களாக மாறுவார்கள் என்பதை நான்கு பெரும் மானிடக் கொலைஞர்களை அடிப்படையாக வைத்து விளக்குகிறது.



யூ ரூ மீ புறூட்டஸ்… என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு யூலியஸ் சீசர் நினைவுக்கு வந்துவிடுவான். புறூட்டஸ்சால் முதுகில் குத்தப்பட்ட காரணத்தால் இவன் மிகவும் தூய்மையானவன் என்று நாம் கருதுகிறோம்.

ஆனால் உண்மை அப்படியல்ல, யூலியஸ் சீசர்தான் உலகத்தின் முதலாவது பெரும் மானிடப் படுகொலைஞன். இவன் கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகிய இடங்களில் நடாத்திய கொடும் போர்களில் 1 முதல் 1.5 மில்லியன் அப்பாவிகளை கொன்றான். கி.மு.58ல் உலகில் மனித இனம் மிக சொற்பமாக இருந்த காலத்தில் இவ்வளவு பெரும் கொலையை அறுவடைபோல செய்து மனித குலத்தை அறுத்தெறிந்தான்
.
இந்தக் கொலைகளாலேயே இவன் அச்சமூட்டும் தன்னிகரில்லாத தலைவனாக மாற்றப்படுகிறான். ஒரு கட்டத்தில் இந்த உலகில் தனக்கு இணையானவர்கள் யாருமே இல்லை என்ற முடிவுக்கு இவன் வருகிறான். தனது படைத் தலைவர்கள், அதிகாரிகளின் மனைவிகளை சூறையாடுகிறான். தன்னுடைய அழகு காரணமாக இவர்களைவிட அந்தப் பெண்கள் தன்னையே விரும்புவதாக முடிவு செய்கிறான்.

விளைவு இந்தப் பெண்ணாசை அவனுடைய நிர்வாகத்திலேயே அவனுக்கு எதிரிகளை ஏற்படுத்துகிறது. அவனுடைய பிரதான தளபதிகளே சுற்றவர நின்று அவனை கத்தியால் குத்தி கொலை செய்கிறார்கள். மொத்தம் 23 குத்துக்கள் அவன் மீது விழுகின்றன. அத்தனைபேரும் அவனால் பாதிக்கப்பட்டவர்களே. கடைசிக்குத்து புறூட்டஸ்சின் குத்தாக இறங்குகிறது. நீயுமா புறூட்டஸ் என்கிறான். ஆம் நானும்தான் உன்னால் பாதிக்கப்பட்டவன் என்ற குரல் மண்டபத்தில் ஒலிக்கிறது. முதலாவது உலகப் பெரும் மானிட படுகொலைஞனின் வீழ்ச்சி 23 கத்திக் குத்துக்களுடன் முடிவடைகிறது.



திகைத்து நிற்கிறோம், யூலிஸ் சீசர் பெரும் மானிடப் படுகொலைஞனா.. ஆம்..! உண்மை சுடத்தான் செய்யும்.

தன்னுடைய முதுகில் குத்திவிட்டார்கள் என்று கூறும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களும், தமிழ் சினிமாக்காரர்களும் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டிய விடயம் இது என்பதும் மனத்திரைக்கு வருகிறது.
அடுத்த மாபெரும் மானிடப் படுகொலைஞன் டேய்யன்ஸ் கான் என்ற மங்கோலிய சக்கரவர்த்தியாகும். 1209 முதல் 1227 வரை இவன் ஆட்சியில் இருந்தவன். 30 முதல் 40 மில்லியன் மங்கோலிய மக்களை கொன்றொழித்த மாபெரும் கொலைஞன். யூலியஸ்சீசரின் கதையும் இவனுடைய கதையும் வேறு வேறல்ல.

மூன்றாவது பெரும் கொலைஞன் சீன புரட்சிக்குக் காரணமான மா ஓ சே துங் ஆகும். இவரை குறைகூறுவது சீன கம்யூனிஸ்டுக்களுக்கு பிடிக்காது. ஆனால் 1959 – 61 காலப்பகுதியில் 40 முதல் 70 மில்லியன் சீன மக்களை படுகொலை செய்த மாபெரும் போர்க் குற்றவாளி, மானிடப் படுகொலைஞன் இவர் என்று கூறுகிறது.

இவருடைய படுகொலைகளும், முட்டாள் தனங்களும் அடங்கிய விபரமான 5000 பக்க நூல் வெளியாகியுள்ளது. (இந்த நூலின் சாராம்சம் தமிழ் மொழி பெயர்ப்பாக அலைகளில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.)

இவருக்கு அடுத்தாக வரும் சர்வதேச பெரும் கொலைஞன் அல்லது குற்றவாளி ரஸ்யாவின் அதிபர் ஸ்டாலினாகும். இவருடைய காலத்தில் 20 – 40 மில்லியன் மக்களைப் படுகொலை செய்து ஆட்சிக் கட்டிலில் இருந்தார்.

அடுத்ததாக வருவது கம்போடியாவில் கடந்த 1970 களில் கொலைகளை நடாத்திய பொல்பொட்டாகும். இவன் 1 முதல் 2 மில்லியன் மக்களை கொலை செய்த கொலைஞனாகும். சீனாவின் கொள்கைகளை கம்போடியாவில் பரிசோதனை செய்து படுகொலைகளை அறுவடை செய்த உலகின் மாபெரும் முட்டாள்.

சர்வாதிகாரி ஹிட்லரைப் போல மனித குலத்திற்கே நாசம் செய்த இந்தத் தலைவர்களை இன்றய அறிவியல் உலகம் காறித் துப்ப ஆரம்பித்துவிட்டது. இதுபோல துருக்கி ஆர்மீனியாவில் ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை கொன்ற போர்க் குற்றம். ருவாண்டாவில் 1994 ல் நடாத்தப்பட்ட ஒரு மில்லியன் மக்கள் படுகொலை போன்ற மானிட படுகொலைகள் உலகின் முன் மண்டை ஓடுகளாக குவிந்து கிடக்கின்றன.

இந்த வரலாறுகள் தெரியாமல் ஒரு சின்னஞ்சிறிய தீவான சிறீலங்காவுக்குள் நடாத்தப்பட்டுள்ள மானிடப் படுகொலைகளும், மாபெரும் போர்க் குற்றங்களும் 21 ம் நூற்றாண்டின் முதற் பெரும் களங்கமாக இருக்கின்றன.
இந்தத் தவறுக்கு சீனா துணை போனது தப்பல்ல மா ஓ சே துங்கின் கதை நமக்கு போதும்.

ஆனால் போரை வெறுத்து, களத்தில் வாளைத் தூக்கி வீசி, மரங்களைக் கூட அழிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த அசோக மன்னனின் அசோகச் சக்கரத்தை தேசியக் கொடியில் பறக்கவிட்ட இந்தியாவும் துணை போயுள்ளது என்பதை நினைக்க.. இந்த நூல்களின் ஏடுகள் மனதில் மிகவும் கனக்கின்றன.


 நன்றி:-அலைகள் நவீன அறிவியல் பிரிவுக்காக கி.செ.துரை 29.02.2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.