Friday, March 23, 2012

உலகையே உசுப்பும் மாயர் கணக்கு

உலகையே உசுப்பும் மாயர் கணக்கு

First Published : 20 Jan 2012 01:34:18 AM IST


பத்து பழங்களைப் பத்துப் பேருக்குப் பகிர்ந்து அளித்தால் ஆளுக்கு ஒரு பழம் கிடைக்கும். ஒரு எண்ணினை அதே எண்ணினால் வகுத்தால் ஈவு ஒன்றுதானே'' கணிதப் பாடம் நடத்தினார் கும்பகோண வாத்தியார்.

 ""ஏன் சார், பூஜ்யத்தைப் பூஜ்யத்தால் வகுத்தால் ஒன்று வருமா? இல்லாத பழங்களை இல்லாத ஆள்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால், ஆளுக்கு ஒரு பழம் கிடைக்குமா, சார்?'' ஒரு சுட்டி மாணவன் போட்டானே ஒரு போடு. திகைத்துப் போனார் ஆசிரியர். கேட்டது வேறு யாருமல்ல. நம் நாட்டு கணித மேதை சீனிவாச இராமானுஜம்தான். 

ஒருமுறை அண்ணல் காந்தி ஆசிரமத்தில் திரட்டப்பட்ட மக்கள் நிதிப் பணத்தில், மறுநாள் கணக்கு சரியாகவில்லை. சில பைசாக்கள் குறைந்ததாம். இரவு முழுவதும் மகான் உறங்கவே இல்லை. ஏதோ ஒரு ஏழையின் பணம் தம் கையில் வந்து தொலைந்துவிட்டதே என்கிற கவலை. அதனால்தானோ என்னவோ காணாமல் விடுபட்ட காசு என்றால், காந்தி கணக்கு என்கிறார்கள். இன்றைக்கு ஒரு விளம்பரத்தில் ""ஒன்றில் இருந்து ஒன்பது போகாது. பக்கத்தில் இருந்து ஒன்றைக் கடன்வாங்கிக் கழிக்கணும்'' என்று கற்றுத் தருகிறார் ஆசிரியர். ""கடன் வாங்கினால் திருப்பித் தர வேண்டாமா, இது என்ன சார், காந்தி கணக்கா?'' என்று தலையில் அடித்துக் கொள்கிறாள் ஒரு குட்டி மாணவி. நல்லவேளை, எந்த காந்தி என்று கேட்காமல் விட்டாளே? 

2012 இந்தியத் தேசியக் கணித ஆண்டாக அறிவிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டில் மாய இந்தியர் கணிப்பு உலகையே உசுப்பி வருகிறது. மெக்சிகோவில் யுகாதன் தீபகற்பத்தின் ஆதி நாகரிக இனத்தவர் மாய இந்தியர்கள். ஏறத்தாழ ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட விண்கல் மோதி, டைனோசர் இனம் அழிந்ததாகக் கருதப்படுகிறதே, அதே பிராந்தியப் பழங்குடிகள். 16-ம் நூற்றாண்டில் அங்கு குடியேறிய ஸ்பானியத் துறவிகள் செய்த திருப்பணி, மாயர்தம் அறிவியல் சுவடிகளில் அக்கினி வளர்த்ததுதான். நான்கே நான்கு சுவடிகள் தப்பித்தன. பாருங்கள், இன்னொரு வேடிக்கை. சிதைக்கப்பட்ட சம்பிரதாயங்களை வரலாற்று ரீதியில் தொகுத்தார் ஃப்ரே பெர்னார்டினோ டி சஹாகுன் எனும் பாதிரியார். 

"புதிய ஸ்பெயின் நாட்டில் பொது வரலாற்றுச் செய்திகள்' என்பது நூல் தலைப்பு. அங்கு "கிச்சென் இத்சா' என்ற இடத்தில் "குகுல்கன்' கோவில் ஒன்று பிரமிடு வடிவில் உள்ளது. பறக்கும் தெய்வீகப் பாம்பு என்று பொருள். தமிழில் "கூக்கழுகன்' மாதிரி ஒலிக்கிறதே. போகட்டும். 

அந்தப் பிரமிடு சதுர வடிவ அடித்தளம் கொண்டது. நாற்புறமும் பக்கத்திற்கு மூன்று பகுதிகளாக மொத்தம் 12 பிரிவுகள். அவை பன்னிரெண்டு ராசி மண்டலங்களாம். ஒவ்வொரு பக்கத்திலும் 91 படிக்கட்டுகள். உச்சியில் ஆலயப் படிவாசல். ஆக, 365 படிக்கட்டுகள். மாய இந்தியர்தன் ஆண்டுக் கணக்கு. "கௌத மலை'க்கு வடகிழக்கில் நரஞ்சோ நகரில் ஒரு கல்வெட்டு. அவர்தம் "நெடுங்கணக்கு நாட்காட்டி'. பத்தின் மடங்காக இல்லாமல், இருபதின் அடுக்குகளால் ஆனது. ஒருவேளை கை, கால்களின் 20 விரல்கள் அடிப்படையோ என்னவோ? 

மாயர்கள் 1 என்பதை ஒரு புள்ளியாலும், 5 என்பதை கிடைக்கோடு ஆகவும் எழுதினர். அந்தக் கல்வெட்டில் 9.13.18.4.18 என்று இருக்கிறது. அவை 9 பக்தூன்கள், 13 காதூன்கள், 18 தூன்கள், 4 உயினல்கள், 18 கின்கள். என்ன விழிக்கிறீர்கள்? சிந்துபாத் கதையில் வரும் மாயாஜால சமாச்சாரம் அல்லவே. குறு யுகம், பஞ்சாங்க ஆண்டு, ஆண்டு, மாதம், நாள் மாதிரியான அளவீடுகள். அனைத்தையும் கணக்குப்போட்டால், 13,96,178 நாட்கள் என்று வரும். 

கி.மு. 3114 ஆகஸ்டு 13 அன்று அந்தி வேளை மேற்கு அடிவானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், புதன், சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒன்றுகூடி புலப்பட்டன. அவர் தம் கணிப்புப்படி 13,96,178 நாட்களின் பின் அந்த அரிய காட்சி மீண்டும் தோன்றி இருக்க வேண்டுமாம். கி.பி. 710 ஜூன் 25 அன்று நிகழ்ந்து இருக்கலாம். யார் கண்டது? அது கிடக்கட்டும். மாயர் வாய்பாடு பற்றிச் சொல்லிவிடுகிறேன். 1 நாள் = 1 கின், 20 கின்கள் = 1 உயினல் (மாதம்), 18 உயினல்கள் = 1 தூன் (360 நாட்கள்) 20 தூன்கள் = 1 காதூன், 20 காதூன்கள் = 1 பக்தூன், அதாவது, 1,44,000 நாட்கள். 20 "கின்கள்' (நாட்கள்) வீதம் 18 உயினல்கள் கொண்டது ஒரு "ஹாப்' (மாய ஆண்டு) என்றும், 13 கின்கள் வீதம் 20 உயினல்கள் (260 நாட்கள்) ஒரு "த்சோல்கின்' என்றும் இருவித ஆண்டுக் கணக்குகளைப் பின்பற்றினராம். 

இந்த இரண்டு நாட்காட்டிகளிலும் 52 ஆண்டுகள் ஓர் உத்தமப் பொதுக் காரணி. திரும்பத் திரும்ப வரும். ஒவ்வொரு 52 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சூரியனே மறைந்து, உலகம் அழியும் என்று நம்பினர். மனிதர்கள் அனைவரும் ஆதிகால வேட்டை மிருகங்கள் ஆகவோ, காட்டுப் பறவைகள் ஆகவோ உருமாறக் கூடும் என்றும் அஞ்சினர். அதனால் ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் "பிளையாடிஸ்' (கார்த்திகை) உடுக்கணம், சூரிய வீதியினைக் கடக்கும் நள்ளிரவில் நரபலி கொடுத்து வந்தனர். வானில் கொத்தாகத் தோன்றும் கார்த்திகையைச் "சந்தைக் கூட்டம்' என்ற பொருளில் "தியான்குஸ்த்லி' என்று வழங்கினர். 

மெக்சிகோவில் "இஸ்தபலப்பா' என்ற இடத்தில் "ஹியுக்சாக்த்சலான்' (முள்மரம் என்று பொருள்) மலை உச்சியில் பூசாரிகள் கூடி நடத்தும் சடங்கு அது. பின்னர் அந்தச் சடலத்தின் இதயத்தைக் குறுங்கத்தியால் தோண்டி எடுத்துத் தீயில் போடுவார்களாம். ஏன் தெரியுமா? அந்தப் புது நெருப்பு ஏற்றி வைக்கும் சூரியனால் அடுத்த 52 ஆண்டுகளுக்கு எந்தப் பயமும் இல்லை என்பது ஐதீகம்.

 மாயர் ஆண்டுத் தட்சிணாயணத் தொடக்கம். சூரியன் வடகோடியில் கோடை சந்தி நாளில் மிதுன உடுக்கணத்தில் இயங்கிற்று. ஆனி மாத இரவில் தேள் வடிவ விருச்சிக உடுக்கணத்தின் நுனிக் கொடுக்கில் "மூலம்' (ஷெளலா) விண்மீனும் தெரியும். மாயர் மொழியில் அது "கொல்கா' கேட்டால், கொடுக்கா என்று தமிழாக ஒலிக்கிறதே.

 நம் ஆகாய கங்கை ஆகிய பால்வீதி அண்டத்தின் மையப் பகுதியும் அந்தக் கொடுக்குத் திக்கில்தான் உள்ளது. அதனால்தான் "மூலம்' மையம் என்று பொருள். சொல்லப்போனால், கார்த்திகை மாதச் சூரியனோ தட்சிணாயண இறுதி (குளிர் சந்தி) நாளில் இதே தேள் கொடுக்கு அருகில் இயங்கும். இன்றைய கணக்கில் டிசம்பர் 21, காலை 11 மணி, 11 நிமிடம். இந்த மாய இந்திய வரலாற்றுப் பின்னணியில்தான் 20-12-2012 இரவோடு இரவாக உலகம் அழியும் என்று குறி சொல்கிறார்கள். தார்ச்சுகுவெரா கல்வெட்டில் உலகின் அந்த மரண நாள் 13.0.0.0.0 என்று குறிக்கப்பட்டு இருக்கிறதாம். 

அதாவது, கி.மு. 3114 ஆகஸ்ட் 11 அன்று தொடங்கிய 13-ம் பக்தூன் முடிவு. அதுவே உலக முடிவாம். சில்வேனஸ் மோர்லி எழுதிய "பழங்கால மாயர்கள்' எனும் ஆங்கில நூலின் 1983-ம் ஆண்டு திருத்திய நான்காம் பதிப்பின் சாரம் இது. உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 குளிர் சந்தி நாளில் பூமியை ஒருபக்கம் பால்வீதி அண்ட மையமும், சூரியனும் நேர்கோட்டில் இணைந்து வடம் பிடிக்கும். மறுபக்கம் சந்திரன் மட்டும் தனித்து இழுக்கும். இந்த நிறையீர்ப்பு இழுபறியில் பூமியின் மேல்தோல் பிய்த்துக்கொள்ளலாம். நிலத்தில் பூகம்பம் நிகழும். 

அவ்வப்போது உள்புண் சீழ் மாதிரி எரிமலைச் சீற்றங்களும் ஏற்படலாம். அமெரிக்காவின் மஞ்சள்கல் தேசியப் பூங்கா, கொலொராடோவில் லா கரிதா கல்தேரா, நியூசிலாந்தில் தௌப்போ ஏரி, சுமத்ராவில் தோபா ஏரி எல்லாம் குமுறுவதற்கு தருணம் பார்த்துக் காத்து இருக்கின்றன என்கிறார்கள். ஆழிப் பேரலை பீறிடும். காற்றும் வந்து "தானே' தாண்டவம் ஆடும். 

நிலம், நீர், காற்று மட்டுமா, சூரிய நெருப்பும் பூமியை உக்கிரமாகத் தாக்கும். 1859-ம் ஆண்டு வெளிப்பட்டதைப்போல, இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தை ஒட்டி, சூரியனில் இருந்து அசாதாரண அணுப்புழுதிப் புயல் வீசுமாம். அதில் சிதறுண்டு செயற்கைக்கோள், தொலைக்காட்சி அலைபரப்புகள் அலைக்கழியும். 

வானில் அப்போஃபிஸ் எனும் குறுங்கோள் 2029-ம் ஆண்டு பூமிக்கு அருகில் பூச்சாண்டி காட்ட இருக்கிறது. 2036 ஏப்ரல் 13 அன்று மோதவும் கூடுமாம். ஒரு கோடி கோடி டன்கள் "ட்ரை நைட்ரோ டொலுவீன்' வெடிபொருளுக்குச் சமமான சேதம் உண்டாகலாம். ஏறத்தாழ 1980-ம் ஆண்டின் ஹெலீனா எரிமலைச் சீற்றத்தைப்போல் 60 லட்சம் மடங்கு. 

அடுத்த தேர்தலே வராதா, இலவசத் தவணைகளில் "இந்தியா விற்பனைக்கு' என்ற விளம்பரப் பலகை தொங்கவிட அவகாசம் கிடைக்காதா, சுவிஸ் வங்கியும் கூண்டோடு அழியுமோ என்ற கவலைகள் மகாராஜா குடும்பங்களுக்கு. புறநகர்களில் வளைத்துப் போட்ட நிலங்கள் என்னவாகும் என்ற அதிர்ச்சி சிற்றரசர் வாரிசுகளுக்கு. விபத்தில் சிதைந்த கழிவுகள், போரில் தகர்ந்த அழிவுகள் பார்த்துப் பயந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நடுவீட்டுக் கழிவறைப் பாதுகாப்பை யார் வந்து சொன்னாலும், குழாய்க்குள் தலையை நுழைத்துக் கழிவுகள் என்ன ஆகிறது என்று கண்டே தீர வேண்டும் என்கிற அக்கறை சிலருக்கு. 

விவிலியக் கணிப்புப்படி, ""அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டு விடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்'' என்கிற (மத்தேயு 24 : 29) வசனம் வாசித்துப் பீதியைக் கிளப்புகிறார்கள். போகிற போக்கில் 12-21-12 (மாதம் - நாள் - ஆண்டு) என்றபடி ஹீப்ரு மொழியில் எழுத்துக்களை இட, வலமாகக் கூட்டி வாசிக்கிறார்கள் எண்கணித நிபுணர்கள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.