Wednesday, March 7, 2012

2011ஆம் ஆண்டின் சில முக்கிய உலக நிகழ்வுகள்


எகிப்தில் ஜனவரி 25ஆம் தேதியன்று அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி வெடித்தது. கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இந்தப் போராட்டங்கள் படிப்படியாக மேலோங்கியதை அடுத்து முபாரக் பதவி விலகினார். இவ்வாண்டு பல்வேறு அரபு நாடுகளிலும் அரசாங்கத்துக்கு எதிரான எழுச்சி உருவானது.


பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் கார்னிவல் கொண்டாட்ட ஆடைகள் எரிந்துபோயின. இந்த கார்னிவல் தொடர வேண்டும் என்பதை முக்கியமான சம்பா நடனப் பள்ளிகள் நிரூபித்தன.

லிபியாவில் கர்ணல் கடாஃபி கொல்லப்பட்டதை லிபியர்கள் பலர் கொண்டாடினர். கடந்த பிப்ரவரியில் கடாஃபிக்கு எதிராக உருவான எழுச்சி பின்னர் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து கடைசியில் கடாஃபியின் கொலையில் சென்று முடிந்தது. இந்தப் படத்தில் லிபிய கிளர்ச்சிப் போராளி ஒருவர்.ஜப்பானை இந்த வருடம் தாக்கிய மிகக் கடுமையான நில நடுக்கமும் அதனைத் தொடர்ந்த சுனாமியும் அந்நாட்டில் பெரும் சேதங்களை ஏற்படுத்தின. ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டு பெரும் பீதி உருவானது.


ஐவரிகோஸ்டில் பதவியகற்றப்பட்டிருந்த அதிபர் லாரண் பாக்போ மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, தலைநகர் அபிஜானில் அதிர்ச்சி அலைகளை பரவச் செய்தது. சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்திருந்த பாக்போ ஒரு ஆயுதப் போராட்டத்தால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.


பூமிக்கு மேலே நிலைகொண்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புதிதாக ஒரு தொகுதி ஆட்களை சுமந்துகொண்டு ரஷ்யாவின் சோயுஸ் ரொக்கெட் கஸக்ஸ்தானில் உள்ள பைகொனூர் மையத்திலிருந்து கிளம்புகிறது. ரஷ்யா விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி ஐம்பது வருடங்கள் இந்த ஆண்டு பூர்த்தியாகியிருந்தன.பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமுக்கு கேட் மிடில்டனுக்கும் லண்டனில் கோலாகலமான திருமண வைபவம் நடந்தேறியது. ஏராளமான மக்கள் நகர வீதிகளில் புதுமணத் தம்பதியரை வாழ்த்தினர்.

பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் நடத்திய ஓர் அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் அங்கு பதுங்கியிருந்த அல்கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன் கொல்லப்பட்டார். அந்த இராணுவ நடவடிக்கையை அதிபர் ஒபாமாவும் அதிகாரிகளும் வீடியோ இணைப்பு மூலமாக கவனித்திருந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையணிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது வரி விதிப்பது பற்றி பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது. இந்த வருடம் பல தடவைகளில் இந்த வாகனங்கள் மீது ஆயுததாரிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.


லண்டனில் கடந்த ஆகஸ்டில் மூன்று நாட்கள் கடைகள் சூரையாடப்பட்டு, பல இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. இளைஞர் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த சூரையாடல்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.ஆப்கானியத் தலைநகர் காபுலில் ஒரு முக்கிய விடுதியில் தாலிபான் ஆயுததாரிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருந்தனர். ஆப்கானிய அதிகாரிகள் உதவிக்கு நேட்டோ படையினரை அழைத்திருந்தனர்.


நோர்வேயின் உட்டோயா குட்டித் தீவில் மனம் பேதலித்த அண்டர்ஸ் பிரெய்விக் என்ற துப்பாக்கிதாரி தன்னந்தனியாக 69 பேரை சுட்டுக் கொண்டிருந்தார். ஒரு குண்டுவெடிப்பை நடத்தி மேலும் 8 பேரை இவர் கொன்றிருந்தார். இந்தச் சம்பவம் அந்நாட்டையே திகிலிலும் சோகத்திலும் உறையச் செய்திருந்தது. இந்தப் படத்தில் உடோயா தீவில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்படுகிறதுசர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த தொமினீக் ஸ்டிராஸ் கான் நியூயார்க் விடுதி ஒன்றில் ஒரு பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்து அவர் பதவியகலவும் விளக்கமறியலில் வைக்கப்படவும் நேர்ந்தது. ஆனால் பின்னர் அவர் மீதான குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.


2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் பெரிய அளவில் அனுஷ்டிக்கப்பட்டது. நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் நின்றிருந்த இடத்தில் நினைவு மண்டபம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

கடன் நெருக்கடியில் மூழ்கியிருந்த கிரேக்கம், சிக்கன நடவடிக்கைகளுக்கும் கடுமையான விதிமுறைகளுக்கும் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல மேற்கத்திய நாடுகளில், அப்பட்டமான முதலாளித்துவத்தை எதிர்த்து பல நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக தாய்லாந்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.


வடகொரிய அதிபர் கிம் யாங் இல் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அவரது இளைய மகன் கிம் யாங் உன்னை நாட்டின் அடுத்த அதிபராகக் கொண்டுவருவதற்கான பணிகள் அந்நாட்டில் நடந்துவருகின்றன. கிம் யாங் இல்லின் இறுதிச் சடங்கு அதற்கான ஒரு முன்னேற்பாடாக வடிவமைக்கப்பட்டிருந்தது.


நன்றி பிபிசி

0 comments:

Post a Comment

Kindly post a comment.