Friday, February 17, 2012

வெட்கப்படச் செய்யும் தமிழ்த் திரைத்துறைக் கலாச்சாரங்கள்- சிற்றேடு-காலாண்டிதழ்




சிற்றேடு என்னும் பெயரில் காலாண்டிதழ் ஒன்று தனிச்சுற்றுக்கு மட்டுமாகப் பீடுநடை போடத் துவங்கியுள்ளது தமிழ்நாட்டில்! அதன் ஐந்தாவது இதழைப் பார்க்கும் வாய்ப்புதான் எனக்குக் கிடைத்தது.விளம்பரமே இல்லாமல் 84 பக்கங்கள். விலை அறுபது ரூபாய். நல்லதொரு செயலுக்கு மூன்று மாதங்களுக்கு அறுபது ரூபாய் செலவழிக்கத் தமிழ்ப் பற்றாளர்கள் தயங்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.

ஐந்தாவது இதழின் சிறப்புப் பகுதியாக சிங்கப்பூர்-மலேசிய இலக்கியம் இடம் பெற்றுள்ளது.

இடம்பெற்றுள்ள எல்லாமே சிறப்பாக இருக்கும்பொழுது எதனை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவது?

பள்ளி, கல்லூரி மாணாக்கரிடையே திகழும் படைப்பாற்றலுக்கு முதலிடம் கொடுப்பதே குறிக்கோளாகக் கொண்டு இந்தக் காலாண்டுச் சிற்றிதழ் துவக்கப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி வட்டார ஆசிரியராகத் திகழும் சிவசு தொலைபேசியில் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளது பாபநாசம். பொதிகை மலை அடிவாரத்தில் திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி சிறப்பாக இயங்கி வருகின்றது. நெல்லை மாவட்ட மாணாக்கர்களுக்கு இரு நாட்கள் கவிதைப் பயிற்சி முகாம் ஒன்று அண்மையில் நடை பெற்றது. தங்குமிடம்,உணவு இலவசம். வண்ணதாசன், கலாப்பிரியா, விக்கிரமாதித்தன் இன்னும் முக்கிய கவிஞர்கள் பலர் மாணாக்கர்களு கவிதைப் பயிற்சி அளித்தனர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதகவல் பெரு மகிழ்ச்சியினைத் தருகின்றது.

இன்று தமிழகத்தைப்பிடித்துள்ள சிக்கலில் முதலாவது வருவது சாராயச் சுனாமி. அது குறித்து அடிக்கடி எழுதி வருகின்றேன். இரண்டாவது சிக்கல் தமிழ்த் திரைப்படச் சூறாவளி. அது குறித்து சிற்றேட்டில் செ. அம்பிகாபதி என்பவர் துணிச்சலாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

அக்டோபர், நவம்பர், டிசம்ப்ர் காலாண்டிதழில் இல். சைலபதி என்பவர் இன்றையத் திரைப் படங்கள் ஒரு அலசல் என்ற கட்டுரையொன்றினை எழுதி இருக்கின்றார். அந்தக் கட்டுரையின் எதிர் வினையாக அதே தலைப்பில் செ.அம்பிகாபதி எழுதுகின்றார் புதியதோர் கட்டுரை.

இன்றையத் திரைப்படங்களில் ஆய்வு செய்ய என்ன இருக்கின்றது? 90 விழுக்காடு திரைப் படங்கள் காதலையும் கவர்ச்சியயுமே மையக் கருவாகக் கொண்டு வெளியாகின்றன. சமூகத்தில் வேறு பிரச்சினையே இல்லையா?

மூன்று வயதுச் சிறுவனுக்குக் கூட கதாநாயகர்களைத் தெரிந்திருக்கின்றது. ஒரு திரைப்படத்தில் வரும் துணை நடிகன்/ நடிகயைத் தெரிந்த அளவு நாம் ஒரு முன்னணி எழுத்தாளனையோ அல்லது அறிஞனையோ அறிந்திருப்பதில்லை.

10-ம் வகுப்புமாணவிக்கு மெக்கானிக் மீது காதல் வருகின்றது.அவன நம்பி வீட்டை விட்டும் வருகின்றாள், (காதல்)

தமிழே தெரியாத பெண்ணுக்கு கோழிச் சண்டையில் இருப்பவன் மீது காதல் வருவதும் (ஆடுகளம்)

வயதில் பெரியவள் மீது காதல் வருவதும் (காதல் சொல்ல வந்தேன்)

மாணவனுக்கு ஆசிரியை மீது காதல் வருவதும் (வல்லவன்)

திருமணத்திற்கு முன் வேறொருவன் மீது காதல் வருவதும் (யாரடி நீ மோகினி)

முறையற்ற உறவுகளின் மீது காதல் வருவதும் (உயிர், வாலி, கலாபக் காதலன்)

இப்படி அனைத்தும் இளைஞர்களைக் கெடுப்பதாகவே உள்ளன. இதனால் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் சினிமாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை இளைஞர்களுக்கு வந்து விடுகின்றது. இதனால் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். வாழ்க்கையின் எதார்த்தம் இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

இளைஞர்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் படங்களாகத் துள்ளுவதோ இளமை, பாய்ஸ், 7/ஜி ரெயின்போ காலனி, வல்லவன், படிக்காதவன், ஏகன், காதலில் விழுந்தேன், குட்டி, மாசிலாமணி, குத்து, தொட்டால் பூ மலரும், குஷி, அன்பே ஆருயிரே, நியூ போன்றவை உள்ளன. இந்தத் திரப்படங்கள் எல்லாமே இளைஞர்கள் கல்லூரிக்குச் செல்வதே காதலிக்கத்தான் என்பதைப்போல் காட்டுகின்றனர்.

கதாநாயகன் என்பவன் தன் உண்மையான வாழ்வில் எப்படி இருந்தாலும், திரைப்படத்தில் நல்லவனாகவும், உயர்ந்த குணங்கள் கொண்டவனாகவும் இருப்பான்.

ஆனால், இன்றையச் சூழலில் நேர்மைக்கு எதிரான குணங்கள் கொண்ட கதாநாயகர்களாகக் காட்டப்பட்ட மங்காத்தா, அயன், பீமா, புதுப்பேட்டை, தொட்டி ஜயச், வட்டாரம், பருத்தி வீரன் போன்ற படங்களை ஏற்றுக் கொண்டு மக்கள் வெற்றியடையச் செய்கிறார்கள்.இது மக்களின் அறியாமையையே காட்டுகின்றது.

பேராண்மை, வாகை சூட வா, முத்துக்கு முத்தாக, பசங்க, மாயாண்டி குடும்பத்தார், ரமணா, அங்காடித்தெரு, ஈசன், 7ம் அறிவு, அந்நியன்,போன்ற சில நல்ல கருத்துள்ள படங்களும் உள்ளன. ஆனால் இவற்றையும் காதலையும், கவர்ச்சியயும் கலந்துதான் சொல்ல வேண்டியதிருக்கின்றது.

இத்தகைய படங்களில் தொடர்புடைய காரண கர்த்தாக்கள் அனைவருமே புதுமையைக் கூறுகின்றேன் என்று கலாச்சாரத்தைக் கெடுக்கின்றனர். (பெயர்களையே குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர்) இத்தகைய படங்களைக் குடும்பத்துடன் பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர்.

திரைப்படத்தால் ஒரு பக்கம் இளைஞர் அழிந்து வருகின்றது. நாட்டிற்குத் தொண்டு செய்யவில்லை என்றாலும், தங்களுடைய வாழ்க்கையை இளைஞர்கள் சரியான முறையில் அமைத்துக் கொண்டால் போதும்.

திரப்படத்தப் பொழுது போக்காகப் பார்க்கும் மன நிலையை வளர்த்துக் கொண்டால் போதும்

இப்படிக் கேவலமான திரைப் படங்களைத் தமிழில் சிலர் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்க் கலாச்சாரம்தான் உயர்ந்தது என்று சொல்லி மார்தட்டிக் கொள்வது யோசிக்க வேண்டிய செய்தியாக உள்ளது. நாம் வெட்கப்பட வேண்டிய செய்தியும் கூட.

வெளியீடு:- MSM FOUNDATION, 253-IInd BLOCK, KATRIGUPPE WATER TANK,

BSK III STAGE III PHASE, BANGALURU-560 085

E MAIL :E-Mail:- tamil4545@gmail.com அச்சாக்கம்;- II-A MUDRANA, BANGALURU.

2 comments:

  1. Where to get சிற்றேடு in chennai?

    ReplyDelete
  2. சென்னை தியாகராயநகரில் உள்ளது நார்த் உஸ்மான் ரோடு. அங்கே முருகன் இட்லிக்கடை உள்ளவரிசையில், பனகல் பூங்கா நோக்கிச் செல்லவேண்டும் அதே வரிசையில் மேலும் சில கடைகள் தள்ளி பேஸ்மண்டில் நியூ புக் லேண்ட் உள்ளது. எல்லா புத்தகஙகளும் கிடைக்கும். இல்லை என்றாலும் வாங்கித்தருவர். அஞசல் செலவுடன் நூல் விலையையும் செலுத்திவிட்டால் வீட்டிற்கும் அனுப்பி வைப்பர். சென்னையில் அடிககடி வெளியே சென்று வரும் போக்குவரத்துச் செலவை விட இது குறைவுதான். நன்றி நண்பர் சீனிவாசன் அவர்களே!

    ReplyDelete

Kindly post a comment.