Friday, February 10, 2012

விவாகரத்தை ஆதரிப்பவர்கள் படிக்க வேண்டாம்!


உயிர் கொடுத்து உடல் கொடுத்து நம்மை உலகுக்கு அனுப்பி வைக்கும் சிருஷ்டி பிரம்மாக்கள் தாய் - தந்தை. அவர்களின் உறவுதான் உலகில் மனதினை வாழ வைக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பிரிவுத்துயரையும், ஆதரவற்று தவிக்கும் தவிப்பையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அந்த வகையில் விஜயாவுக்கு அப்போது வயது 5. கண்ணீர் விட்டு அழுதது தான் மிச்சம். தாயையும் காணோம்... தந்தையையும் காணோம்... பெரம்பூர் ரோட்டில் தவித்த விஜயாவை நல்ல உள்ளம் படைத்தவர்கள் சிலர் மீட்டு மணப்பாக்கம் கிறிஸ்து நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தனர்.

நம்பிக்கை ஊட்டி வளர்த்தனர் காப்பகத்தினர். விஜயா வளர்ந்து பெரியவளாகி விட்டார். 19 வயதை எட்டிய விஜயாவுக்கு இன்று டும்.... டும்... மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதும் தன்னை வளர்த்து ஆளாக்கிய காப்பக உரிமையாளரிடம் கண்டிப்புடன் கூறியது இதுதான்...

பெற்றோர் இல்லாமல் நான் பட்ட வேதனைகள்.. அதன் வலி எனக்குத்தான் தெரியும். வாழ்க்கையில் வேதனையை அனுபவித்தவர்தான் எனக்கு துணையாக வரவேண்டும். அதுவும் அவர் ஊனமுற்றவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் என்னை விட பரிதாபத்துக்குரியவர்கள்.

நமக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க மாட்டாளா? என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவருக்கு மனைவியாகி எனது வேதனையை மறந்து அவருக்கு ஆறுதல் கொடுப்பவளாகவே வாழ விரும்புகிறேன் என்றார்.

விஜயாவின் விருப்பப்படியே மதுராந்தகம் அருகே உள்ள காட்டுக் கரணையை சேர்ந்த சுரேஷ் என்ற ஊனமுற்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலையில் விஜயா- சுரேஷ் திருமணம் நடந்தது. மத போதகர்களின் ஆசியுடன் சுரேஷ் விஜயாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

உங்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு திருமண உதவித் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ அத்தனையும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் புரட்சி தலைவி உத்தர விட்டுள்ளார். உங்களுக்கு என்னென்ன சலுகைகள் உண்டோ அத்தனையும் முதல்- அமைச்சர் உத்தரவுப்படி கிடைக்கும். நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்குங்கள் என்றார்.


கொத்தடிமைச் சிறார்கள், தெருவோரச் சிறுவர்கள், சிங்கிள் பேரண்ட் வாரிசுகள், யாருமே இல்லாத விஜயா போன்றோருடன் விவாகரத்துப் பெறுவோரின் வாரிசுகளும் ஒரு கட்டத்தில் அநாதையாகின்றனர்। உலகில் இவர்களுக்கான தீர்வு எங்குமே ஏற்படவில்லை।

விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்। தூக்குத் தண்டனையைவிட மோசமானது விவாகரத்து। மறுமணங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை। பெற்றோர் முடிந்தால் சேர்ந்து வாழட்டும்। இல்லையேல் பிரிந்து போகட்டும்। இது அவர்கள் குடும்பப் பிரச்சினை। அவர்களுக்கிடையில் வழக்கறிஞர்களோ நீதிபதிகளோ தலையிட வேண்டாம்। பிரிந்தாலும் காலம் ஒரு வேளை அவர்களை ஒன்று சேர்க்கக்கூடும்। தீர்க்கமுடியாத சில பிரச்சினைகளைக்கூட கணவன் - மனைவியே பேசி முடிவெடுத்துத் தீர்மானித்துக் கொள்ளட்டும்। மூன்றாவது மனிதர் குறுக்கீடு வேண்டவே வேண்டாம்। நீதிமன்றத்தின் நேரம் மிகவும் மிச்சமாகும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.