Monday, February 13, 2012

இதயங்களின் வெற்றி- ஐஸ்வர்யாடிரஸ்ட்-சென்னை-600 017


இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் எட்டுக் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே அதாவது கருவில் இருக்கும்போதே இதயநோய் ஏற்படுகிறது. இவர்களில் 50 சதவீதம் பேருக்கு உடனடி அறுவை சிகிச்சை அவசியம் என்ற நிலை இருந்து வருகிறது.

கருவிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உயிர் தரும் விடிவெள்ளியாக இயங்கிவருகிறது ஐஸ்வர்யா அறக்கட்டளை.

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த இதய அறுவைசிகிச்சை நிபுணர்களைக்கொண்டு, நவீன வசதிகளைக் கொண்ட மருத்துவமனையில், தரமானசிகிச்சை அளித்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிறுவனரான கே.நாகராஜன் மற்றும் அவரது மகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவருமான சித்ரா விஸ்வநாதனையும் அவர்களின் சென்னை, தி.நகர் இல்லத்தில் சந்தித்தோம்.

இனி அறக்கட்டளை தொடங்கப்பட்ட நோக்கம் குறித்து சித்ரா கூறுகிறார்:

""இதயநோயால் பாதிக்கப்பட்ட என் மகள் ஐஸ்வர்யாவுக்கு 1991-ம் ஆண்டு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காமல் மகள் எங்களை விட்டுப் பிரிந்தாள். ஐஸ்வர்யாவின் நினைவாக, அவளைப் போன்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் 2008-ம் ஆண்டு ஐஸ்வர்யா அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

எங்கள் உறவினர்கள், தனியார் நிறுவனங்கள், பல்துறைப் பிரபலங்கள், நல்லிதயம் கொண்ட பொதுமக்கள் போன்றவர்களின் நன்கொடைகள் மூலமாக அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எங்கள் அறக்கட்டளைக்கு பெரும் அளவில் உதவி செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறக்கட்டளையின் மூலம் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படும் ஏழை குழந்தைகளுக்கான சிகிச்சை செலவை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் பிரபல இதய அறுவைசிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணனின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறக்கட்டளை தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் 403 ஏழைக் குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளோம்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு,குணமடைந்த குழந்தைகளைச் சோதித்து, அவர்களின் உடல்நலனின் முன்னேற்றத்தைக் கண்டறிய ஆண்டுதோறும் சிறப்பு மருத்துவ முகாம்களும் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்று வருகின்றன.

இந்தியா மட்டுமன்றி ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கென்யா, நைஜீரியா, புருன்டி போன்ற நாடுகளில் பிறவியிலேயே இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஐஸ்வர்யா அறக்கட்டளையின் மூலம் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகள், பெற்றோரின் ஏழ்மை நிலையால் இறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

"சிறிய இதயங்களைக் காக்க உங்கள் இதயங்கள் பெரியதாகத் திறக்கட்டும்' என்ற வேண்டுகோளை நன்கொடையாளர்களிடம் வைக்கிறோம். மேலும் சென்னை, பெங்களூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு உறுதுணையாக தொண்டாற்றி வருகிறார்கள்.

எங்கள் சேவையைப் பாராட்டி 2009-ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்கான விருதை முன்னாள் ஆளுநர் சுர்ஜிச் சிங் பர்னாலா வழங்கினார்.


கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னையில் நடைபெற்ற "இதயங்களின் வெற்றி' என்ற விழாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் நலம் பெற்றுள்ள குழந்தைகளைக்கொண்டு ஒரு வித்தியாசமான ஃபேஷன் ஷோ நடத்தினோம். இதனைப் பார்த்த அனைவரின் கண்களும் பனித்தன'' என்றார் சித்ரா.

ஐஸ்வர்யா அறக்கட்டளையின் தொலைபேசி எண்: 2815 1953

http://www.rhythmofheart.org/index.html

நன்றி;- கொண்டாட்டம் தினமணி 12-02-2012

கட்டுரை:- வாசுதேவன் படங்கள் :- ஆர்.சிவகுமார்

இத்தகைய தொண்டுகளில் ஈடுபட்டவர்களைத்தான் மனித தெய்வங்கள் என்கின்றோம். இவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்குபவர்கள் தங்களையே கவுரவித்துக் கொள்கின்றார்கள்.


Mr. K. நாகராஜன் , Founder & Trustee , B-1, Krishna Kripa, 17/7, Raman Street, T.Nagar, Chennai 600 017 , Tel: +91 44 28151953

Bangalore,Mrs. Chitra Viswanathan,Tel: +91 80 22269746

aishwaryatrust.org@gmail.com

வலைப்பூ அன்பர்கள் வாழ்த்துவதோடு நின்று விடாமல் இயன்ற வழிமுறைகளில் எல்லாம் உதவிடவும் வேண்டுகின்றேன்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.