Tuesday, February 7, 2012

2,200 ஆண்டுக்கு முற்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியாவில் மீட்பு !

2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, தென்னிந்தியப் பண்பாட்டை ஒத்த சுடுமண் சிற்பங்கள் பெரும் எண்ணிக்கையில் வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்து சுமார் 50 சிற்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று யாழ். பல்கலைக் கழக தொல்லியல்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவித்தார். ''மீட்கப்பட்டவற்றில் அதிகமான சுடுமண் சிற்பங்கள் பெண் உருவிலானவை. தவிர மிருகங்கள், பறவைகள், அகல் விளக்கு என்பவற்றின் உடைந்த நிலையிலான சிற்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

சாஸ்திரி கூழாங்குளத்தின் மேற்குப்புறப் பகுதியில் மண் அள்ளப்பட்டபோது இந்தச் சுடுமண் சிற்பங்கள் காணப்பட்டுள்ளன। அந்தப் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்திற்காக மண் அள்ளப்பட்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டன। உடனடியாகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு வவுனியா அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டது। அரச அதிபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையில் சென்று ஆய்வு நடத்தி சுடுமண் சிற்பங்களை மீட்டெடுத்துள்ளனர்.

இது குறித்துப் பேராசிரியர் தெரிவித்ததாவது, இந்தச் சுடுமண் சிற்பங்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். இவற்றைப் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியவையாகக் கூறலாம். தென்னிந்தியாவில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை ஒத்த பண்பாட்டை உடைய மக்கள் இங்கும் வாழ்ந்துள்ளார்கள் என்பதையே இந்தச் சான்றுகள் நிரூபிக்கின்றன. குளக்கட்டை அண்டிய காட்டுப் பகுதியில் இருந்து இவை மீட்கப்பட்டிருக்கின்றன. அங்கு விவசாயக்குடிகள் இருந்ததை இவை உறுதிப்படுத்துகின்றன. அந்தக் காலப்பகுதியில் மக்களின் வழிபாட்டுக்குரிய பெண் தெய்வங்களின் உருவங்களாக மீட்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் இருக்கலாம். இதே மாதிரியான பெண் தெய்வ உருவங்கள் தமிழ்நாட்டில் உள்ள கொடுமணல், அழகன்குளம், கொற்கை, அரிக்கன்மேடு ஆகிய பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் கந்தரோடை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இதேபோன்று சிற்பங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன. வவுனியாவில் இந்தத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மண் அள்ளுவது தடுக்கப்பட்டுள்ளது. திணைக்களப் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளோம் என்றார் பேராசிரியர்.

மீட்கப்பட்ட தொல்லியல் சிற்பங்களில் பல யாழ். பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கணிசமானவை வவுனியா அரச அதிபரின் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.





0 comments:

Post a Comment

Kindly post a comment.