Thursday, January 26, 2012

கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம்- கொழும்பு

ஊடக அடக்குமுறைக்கு எதிரான கறுப்பு ஜனவரி ஊடக போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

‘பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டு வருடங்கள் இரண்டு அரசு மௌனம்’, ‘லசந்த படுகொலை செய்யப்பட்டு வருடங்கள் 3 கொன்றவர்கள் நடமாட்டம்’, ‘லங்கா ஈ நியூஸ் கொழுத்தப்பட்டு வருடம் ஒன்று அரசு மௌனம் போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி மாதத்திலேயே ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அதிகளவான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கறுப்பு ஜனவரி என பிரகடனம் செய்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என இதில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் உபதலைவர் அ.நிக்ஸன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஊடக சுதந்திரமும்; ஊடக ஜனநாயகமும் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதுடன், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் பல வருடங்களாக தொடர்ந்து ஏதோவொரு வகையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் உரியமுறையில் விசாரணைகளை முன்னெடுக்காதுள்ள அதேவேளை, அரசாங்கமும் மௌனம் சாதித்து வருகின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரம், ஊடக ஜனநாயகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும், இவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்.

கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலேயே ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஊடக அமைப்புக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது’ என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.