Wednesday, January 25, 2012

தலித் மக்களின் உடல்கள் சாலையோரத்தில் அடக்கம்-தினமணி


அம்மாபாளையம் தலித் குடும்பத்தில் இறந்த சேகரின் உடலை சாலையோரத்தில் அடக்கம் செய்யும் அப்பகுதி மக்கள்.
திருப்பூர்: மயான வசதி இல்லாததால் தலித் குடும்பத்தில் இறந்தவர்களின் உடல்கள் சாலையோரத்தில் அடக்கம் செய்யும் நிலை ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் நீடிக்கிறது.

60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த அவலநிலையைப் போக்க, அம்மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அவிநாசி தாலுகாவுக்கு உள்பட்ட ஊத்துக்குளி ஒன்றியம், விருமாணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் அரிஜன காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அந்தக் கிராமத்தில் பிற சமுதாயத்தினரின் இறந்தோர் உடல்கள் அருகிலேயே ஓடைப் புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அந்த ஓடைப் புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால், தலித் குடும்பத்தில் இறந்தவர்களின் உடலை சுமார் ஒரு கி.மீ. தூரத்தில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து ஆதியூர் வழியாக குன்னத்தூர் செல்லும் சாலையின் ஓரத்திலேயே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அடக்கம் செய்து வருகின்றனர். சில சமயங்களில் அச்சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள், உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் அரிஜன காலனியைச் சேர்ந்த சேகர் என்பவர் இறந்தார். அவரது உடலை ஒரு கி.மீ. தூரம் தூக்கிச் சென்று, குன்னத்தூர் செல்லும் சாலையோரத்திலேயே அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஊத்துக்குளி ஒன்றியச் செயலர் ஆர்.குமார் கூறியது:அம்மாபாளையம், அரிஜன காலனி மக்கள், இறந்தவர்களின் உடல்களை ஓடைப் புறம்போக்கு நிலத்திலோ, குன்னத்தூர் செல்லும் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், சாலையோரத்தில் அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.

இந்த மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இதே கதைதான் என்றால் பெற்றது சுதந்திரமா? நடப்பது சட்டமன்ற-பாரளுமன்ற ஜனநாயக ஆட்சியா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.