கேரள மாநில சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் 9-12-11 அன்று நடைபெற்ற அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கீழ்க்கண்டத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சினைக்குத் தீர்வு. புதிய அணை கட்டப்படும்வரை இப்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளை உள்ளடக்கிய, இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டுகூட குறையாமல் வழங்கப் படும் என உறுதி அளித்துள்ளார். கேரளத்திற்குப் பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்ற புதிய முழக்கத்தையும் அறிவித்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்துக்கு நேரானவையாகும்.திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது அதில் குமரிமாவட்டம் இணைந்திருந்தது. அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணைக் கட்டப்பட்டது.
இந்த அணையின் இடதுபுறக் கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9200 ஏக்கர் நிலம் 1956ஆம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட போது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால் இந்த நிலத்திற்கு அளிக்க வேண்டிய நீரைத்தர கேரளம் பிடிவாதமாக மறுக்கிறது. இந்த கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது? தமிழகத்திற்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு ஆனந்துக் குழுவிடம் செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் '37ஆம் பக்கத்தில்' முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்திற்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது.' மேலும் அந்த அறிக்கையின் 23ஆம் பக்கத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்.' எனக் குறிப்பிட்டுள்ளது. அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தரமறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய அணை கட்டவேண்டும் என்னும் கேரளம் வலியுறுத்துவது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். புதிய அணை கட்டப்பட்டால் இப்போது உள்ள அணையின் மீது 999 ஆண்டுகளுக்கு நமக்குள்ள உரிமை பறிபோகும். புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால், அதிலிருந்து நமக்குத் தண்ணீர் தருவது என்பது மிகமிகக் குறையும், புதிய அணையின் மீது கேரள அரசின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும், இப்போதுள்ள அணையை வலுப்படுத்தும் பணியை செய்யவிடாமல் 21 ஆண்டுகாலம் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிப்பார்களோ? புதியதாகப் போடப் படவேண்டிய ஒப்பந்தம் மிகக் குறைந்த ஆண்டுகளுக்கே போடப்படும். இப்போதைய குத்தகைப் பணம் மற்றும் மின் உற்பத்திக் கான கட்டணம் ஆகியவற்றை அதிகமாக கொடுக்க நேரிடும். பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 120 அடியில் இருக்கும். இதன் விளைவாக தென் தமிழகத்தில் உள்ள 2 இலட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானக் குற்றச்சாட்டு என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர் நீதி மன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும் அணையின் பாதுகாப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும், இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும்' என்று அவர் கேரள அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியாறு ஆற்றுப் பகுதியில் இருந்து 450 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டோம் என்றும் அட்வகேட் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை உடைந்தால் 4 மாவட்டங்களில் உள்ள 35 இலட்சம் மக்கள் செத்து மிதப்பார்கள் என இடைவிடாது புளுகித் தள்ளிய கேரள அரசு 450 குடும்பங்களை மட்டும் வெளியேற்றியிருக்கிறது என்று கூறியதின் மூலம் அது இதுவரை கூறிவந்த பொய் அம்பலமாகிவிட்டது.
கேரள மாநில இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணிநேரமும், செருதோணி அணை மூலம் அரபிக்கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது' என்று கூறியுள்ளார்.
மேலும், விசாரணை நடத்திய, கேரள உயர்நீதிமன்ற ஆயம் 'முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் திருப்திகரமாக இருந்தன' என்று குறிப்பிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் உயர்நீதி மன்றத்தில் ''அட்வகேட் ஜெனரல் தெரிவித்தக் கருத்துக்கள் சதித்திட்டமும், துரோகமும் கலந்தது. அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்'' என வற்புறுத்தினார்.
'முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், அதன் நீரை இடுக்கி அணை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் எனவே, பயப்படவேண்டிய தேவை இல்லை. ஆனால் இப்போது சில பத்திரிகைகளும், சில தலைவர்களும்தான் இதுகுறித்து கூப்பாடு போடுகிறார்கள். இந்தப் பிரச்சினைக் குறித்து, உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் ஆராய்ந்து வருவதால், நாங்கள் இதில் தலையிட மாட்டோம்' என கேரள மாநில மனித உரிமை ஆணையத் தின் தலைவர் நீதியரசர் ஜே.பி. கோஷி அறிவித்திருக்கிறார்
. அணை உடைந்தாலும் 106 அடிக்குமேல்தான் உடையும். அவ்வாறு உடையும்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பு உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும். எனவே அணை உடைந்தால் வெளியேறும் நீர் அவ்வளவையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும். அணை உடையும் நிலை ஏற்பட்டாலும் தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்த சமவெளிப் பகுதியும் இல்லை. பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேல்தான் உள்ளன. பெரியாறு அணை நீர் இவற்றுக்குள் ஒருபோதும் செல்லாது. பெரியாறு அணையின் நீர்க்கசிவு அதிகம் இருப்பது அபாயகரமானது என்றும் கேரளம் குற்றம் சாட்டுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச நீர்க்கசிவு நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆகும்.
முல்லைப்பெரியாறு அணையில் நிமிடத்திற்கு 45 லிட்டர்தான் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவில் இது 5இல் ஒரு பகுதியாகும். எனவே இது அபாயம் அற்றது. உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறும்வரைக் காத்திருக்காமல் அணை உடைந்து பல இலட்சம் மக்கள் பலியாவார்கள் என இடைவிடாது கூப்பாடு போடும் கேரள அரசு பெரியாறு அணைப்பகுதியில் படகு சவாரியை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை. பெரியாறு அணையில் கேரள வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் கேரள அரசுக்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. அணை உடையப்போகிறது என்பது உண்மையாக இருந்தால், படகு சவாரியை உடனடியாக கேரள அரசு நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை, நிறுத்தவில்லை.
9-12-11 அன்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் அணை உடைந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறது. உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் குழு பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து முழுமையாக பரிசோதனை செய்து வருகிறது. இக்குழு அணையின் வலிமை குறித்து, நன்கு ஆராய்ந்து தனக்கு அறிக்கை தருவதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத்துறை, பாபா அணுஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையை பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியார் அணை நீருக்குள் மூழ்கியும் மேலும் பல்வேறுவிதமான சோதனைகளை மேற்கொண்டும் நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் உண்மையைக் கண்டறிந்து, ஆனந்த் குழுவினரிடம் கடந்த 5-12-11 அன்று அளித்துவிட்டனர். இந்தக் குழுவின் ஆய்வு வேலைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.1.38 கோடிகொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . அணை வலிமையாக இருப்பதாக இந்த அறிக்கையில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை அறிந்த கேரள அரசியல்வாதிகள், அவசரஅவசரமாகப் போராட்டங்களை, நடத்திவருகின்றனர். முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்குழு பிரதமர் உட்பட அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சந்தித்து அபாயச் சங்கு ஊதியுள்ளனர். மேலும் தாங்கள் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதற்கு பிரதமர் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது. ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்து, உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தனக்கு எதிராக தீர்ப்புச் சொல்லிவிட்டால் என்னசெய்வது என்று அச்சத்தின் காரணமாக அதை எப்படியாவது தடுப்பதற்குக் கேரளம் திட்டமிட்டுள்ளது. கேரளத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கி தமிழகம் பேச்சுவார்த்தைக்குப் போனால், அதை காரணமாகக் காட்டி உச்சநீதிமன்றத்தை எத்தகைய முடிவும் எடுக்கவிடாமல் தடுக்கமுடியும். நல்ல வேளையாக தமிழக அரசு இந்த சூழ்ச்சி வலையில் சிக்க மறுத்துவிட்டது.
தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சியும், விவசாயிகள்-பாட்டாளி வர்க்க நலன் பற்றி ஓயாது பேசும் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சி இணைந்து பொய்யான தளத்தின் மேல் நின்று பெரியாறு அணைநீரை தமிழக விவசாயிகள் பயன்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இந்தியா ஒரே நாடு, மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மை யானால் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது ஏன்?
1984ஆம் ஆண்டில் சோவியத் நாட்டிற்குச் செல்லக் கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது சோவியத் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக பாலை வனமாக இருந்த ஒரு பகுதியில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆற்று நீரை கால்வாய் வெட்டிக் கொண்டுவந்து சோலைவனமாக்கிவிட்டதை நான் பார்த்தேன்
. துர்க்மேனிய குடியரசுக்கு நான் சென்றபோது வியப்பூட்டும் இக்காட்சியை நேரில் கண்டேன். வறண்ட பாலைவனமாக இருந்த துர்க்மேனியாவிற்கு அண்டை மாநிலத்தில் ஓடும் அமுதாரியா ஆற்றின் நீரை 1400 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் வெட்டி திருப்பிக்கொண்டுவந்து மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள். இதன் விளைவாக 25 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. லெனின்-காரகம் கால்வாய் என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய் உண்மையில் பெரிய ஆறு ஆகும். இதில் கப்பல்கள் கூட செல்லுகின்றன. இந்த ஆற்றை வெட்டுவதற்கு சோவியத் நாட்டிலிருந்த பல்வேறு தேசிய இனமக்களும் ஒன்றுசேர்ந்து அளித்த ஒத்துழைப்பும், உழைப்பும்தான் காரணம். ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மட்டோம் என கர்நாடகமும், கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. அவர்களுடன் நாமும் ஒரே இந்தியாவில்தான் இருக்கிறோம். இந்திய அரசும் நாம் படும்பாட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே தவிர உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமானால், சோவியத் திருநாடு உடைந்து சிதறியதற்கு வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், இந்தியா உடைந்து சிதறுவதற்கு உம்மன்சாண்டிகளும், அச்சுதானந்தன்களும் முழுமையான காரணமாக இருப்பார்கள்.
நன்றி : தினமணி
|
0 comments:
Post a Comment
Kindly post a comment.