Thursday, January 5, 2012

அரசு டாக்டர்கள் திடீர் வேலை நிறுத்தம் நோயாளிகள் பரிதவிப்பு பதிவு செய்த நாள் : 1/5/2012 1:12:22 AM

சென்னை : தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அரசு டாக்டர்கள் 15 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 8 லட்சம் நோயாளிகள் கடும் பாதிப்படைந்தனர். சுமார் 1,500 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டது. தூத்துக்குடி இஎஸ்ஐ தலைமை டாக்டர் சேதுலட்சுமி. கிளினிக்கும் நடத்தி வந்தார். கடந்த திங்கள் இரவு கிளினிக்கில் இருந்த சேதுலட்சுமியை மகேஷ் (28) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். சேதுலட்சுமியின் கிளினிக்கில் கர்ப்பிணி நித்யா (24) சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நித்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கு சேதுலட்சுமிதான் காரணம் என கருதிய மகேஷ், அவரை வெட்டிக் கொன்றார். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மற்று இஎஸ்ஐ டாக்டர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை வழக்கம் போல் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு டாக்டர்கள் வந்தனர். காலையிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்து நின்ற
புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். கறுப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உதவி டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள் 500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் பி.பாலகிருஷ் ணன், சென்னை மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர்களும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுபோல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, சேலம், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழந்தைகள், முதியோர், பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்தனர். அரசு மருத்துவமனைகளில் நேற்று நடைபெற வேண்டிய சுமார் 1,500 ஆபரேஷன் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. அதே நேரம் அவசர ஆபரேஷன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டனர். நேற்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்ததால், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

டீன் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் அரசு டாக்டர்கள் திடீர் போராட்டத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டாக்டர் தொழில் புனிதமானது. பலரது உயிரை காப்பாற்றும் நாமே போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. இதை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பிரச்னை ஏற்படுத்த நேரிடும். தமிழக அரசும், சுகாதார துறை அமைச்சரும் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்ÕÕ என்று கேட்டுக் கொண்டார். எனினும் டாக்டர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்

இந்திய மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கோவையில் நேற்று கூறியதாவது: தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் சேதுலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருந்தும் உரிய தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபடவில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கோவையில் கார்பரேட் மருத்துவமனைகள் உள்பட 200 மருத்துவமனைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். இன்று (5ம் தேதி) காலை 6 மணி முதல் மறுநாள்(6ம் தேதி) காலை 6 மணி வரை சிகிச்சை நடைபெறாது. மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதி என அரசு அறிவிக்க வேண்டும்.

Ôநோட்டீஸ் போர்டு வைத்திருந்தால் ஏமாந்திருக்க மாட்டோம்Õ

நாகர்கோவில் : நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நேற்று காலை வழக்கம் போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நோயாளிகளும் அவர்களுக்கு உதவியாக உறவினர்களும் வந்தனர். ஆனால், மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே நோயாளிகளும் அவர்களுடன் வந்திருந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் யாரும் பணியாற்றாததால், ஏற்கனவே நோயால் அவதிப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் நொந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
எதற்காக டாக்டர்கள் ஸ்டிரைக் செய்கிறார்கள். எப்போது இந்த ஸ்டிரைக் முடியும் என்று யாரிடமும் கேட்க முடியாமல் தடுமாறினர். இது குறித்து சில பெண்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

டாக்டர்கள் ஸ்டிரைக் என்றால், அது பற்றிய அறிவிப்பு போர்டு வைத்தால் அதைப் பார்த்து நாங்கள் வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவோம். அல்லது வீட்டுக்கு போய்விட்டு நாளை வந்து சிகிச்சை பெறுவோம். எந்த அறிவிப்பு போர்டும் வைக்கவில்லை. எத்தனை மணி நேரம் இப்படியே காத்துக்கொண்டு இருப்பது. யாரும் பொதுமக்களின் துயரங்களை தீர்ப்பதற்கு முன்வராதது வேதனை அளிக்கிறது என்று கண்ணீருடன் கூறினர்.

இந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக இருந்தது. ஆனால், என்ன செய்வது என்று புரியாமல் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டதை கேட்க முடிந்தது. சிலர் அருகில் உள்ள மருந்து கடைகளில் மருத்து வாங்கிக் கொண்டு சென்றனர். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். எப்படியும் டாக்டரை பார்த்துவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொண்டு போய்விடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலை நீண்ட நேரம் நீடித்தது.

ஒரு டாக்டர் கொலைக்காக 1000 நோயாளிகள் சாவதா?

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்பி வைப்பது வழக்கம். அதேபோன்று நேற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.

நீண்ட நேரம் அந்த பெண்கள் ஆம்புலன்ஸ் வேனில் படுக்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் சாலமோன் கூறும்போது, “தூத்துக்குடியில் ஒரு பெண் டாக்டரை ஒருவர் கொலை செய்து விட்டதாக கூறுகிறார்கள். அவரது சாவுக்கு நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம். ஆனால் அதற்காக எங்களை போன்ற ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் சாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்களா? போராடுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளது. அதற்காக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று கூறி போராடுவது நியாயம் இல்லை“ என்றார்.

அமைச்சர் விஜய் பேட்டி அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

கடலூர் : தமிழகத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் விஜய் கூறினார்.
தானே புயலால் தாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேற்று முதல்வர் ஜெயலலிதா கடலூர் வந்தார். இதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, விஜய் ஆகியோர் கடலூர் வந்தனர்.

திடீரென சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவமனையை பார்த்து விட்டு சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
ஸ்டிரைக் நீடிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரச்னைக்கு உடனடியாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார். கடலூர் மாவட்டத்தில் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவம் சார்ந்த சேதாரங்கள் அதிகளவில் இல்லை.’’ என்றார்.

‘அரசிடம் சொல்ல தேவையில்லை’

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.செந்தில் கூறியதாவது: சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். இதுபோன்ற திட்டமிட்டு நடத்தப்படும் வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து 15 நாட்களுக்கு முன்னதாக அரசுக்கு நோட்டீஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று.

ஆனால், தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை சம்பவம், டாக்டர்கள் அனைவரையும் பாதித்துள்ளது. இது ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகும். இதற்கு அரசிடம் சொல்லிவிட்டு தான் போராட வேண்டும் என்பதில்லை. ஆனாலும், எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு துறை அமைச்சர், செயலாளர், இயக்குனர் போன்றவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பிவிட்டு தான், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

8 லட்சம் நோயாளிகள் பரிதவிப்பு

டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், இஎஸ்ஐ என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பணியாற்றும் 14 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பயிற்சி டாக்டர்கள் 3 ஆயிரம் பேர், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் 4,500 பேர், மருத்துவ மாணவர்கள் 10 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நடத்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 8 லட்சம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 1,500 அறுவைச் சிகிச்சைகள் நடைபெறவில்லை. சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி தாய்&சேய் மகப்பேறு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடக்க இருந்த 500 அறுவைச் சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டது.

மனித சங்கிலி கண்டன பேரணி

அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.செந்தில் கூறியதாவது: தூத்துக்குடியில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கவே டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு நீதிமன்றம் மூலம் கொலையாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளித்து,

மருத்துவமனை உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். டாக்டர்களின் சேவை குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை பணிகள் இன்று வழக்கம் போல் செயல்படும். புறநோயாளிகள் பிரிவில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஒத்திவைக்கப்பட்ட அறுவைச் சிகிச்சைகளும் நடைபெறும். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாரிமுனை வரை இன்று பகல் 2 மணிக்கு அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 20 மாவட்டங்களில் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளனர். டாக்டர் கொலையை கண்டித்து மதுரையில் இன்று நடக்கும் கண்டன பேரணியில் அனைத்து டாக்டர்களும் கலந்து கொள்கின்றனர்.

1
0
1


0 comments:

Post a Comment

Kindly post a comment.