Monday, December 26, 2011

மா.சு.சம்பந்தனை எங்கேயாவது பார்த்தவர்கள், உடனே சொல்லுங்களேன்!
"அச்சுக்கலை', "அச்சும் பதிப்பும்', "தமிழ் இதழியல் வரலாறு', "சென்னை மாநகர்' உட்பட 10 நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய "அச்சுக்கலை' நூல் 1966 ஆண்டு தமிழக அரசின் பரிசு பெற்றது.

அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார். 1982 ஆம் ஆண்டு அவருடைய "அச்சும் பதிப்பும்' நூலுக்கு அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பரிசு வழங்கினார்.

மா.சு.சம்பந்தனின் "தமிழ் இதழியல் வரலாறு' நூலுக்கும் 1986 இல் தமிழக அரசு பரிசு கிடைத்தது. சென்னையின் தோற்றம், வளர்ச்சி பற்றி மா.சு.சம்பந்தன் எழுதிய "சென்னை மாநகர்' நூலைப் படித்தவர்கள் புத்தகத்தை மட்டுமல்ல, அவரையும் மறக்கமாட்டார்கள்.

கன்னிமாரா நூலகத்தில் இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தவர் மா.சு.சம்பந்தன். அண்ணா காலத்தில் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாநகராட்சித் தேர்தலில் நின்று, மாநகராட்சி உறுப்பினராக ஆனார். அவர் சென்னைப் பல்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்தார்.

அப்போது பெரிய அளவில் ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்ற சொற்களையே எல்லாரும் பயன்படுத்தி வந்தனர். மா.சு.சம்பந்தன் அவற்றை முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று மாற்றிப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தார். காணாமற் போன மா.சு.சம்பந்தனைப் பற்றி அவருடைய மூத்த மகன் இளங்கோவனிடம் கேட்டோம்: ""அப்பாவுக்கு வயது 89. அந்த வயதிலும் வீட்டோடு முடங்கிக் கிடப்பதை அப்பா விரும்பவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த ஒரு கூட்டத்துக்கு அப்பா சென்றார். கூட்டம் முடிந்த பின்பு அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. நாங்கள் அன்று இரவு முழுவதும் பதற்றத்துடன் பல இடங்களில் தேடினோம். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லாம் தேடினோம். அவரைப் பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் சென்னை வேப்பேரியில் உள்ள ஜி1 காவல்நிலையத்தில் புகார் செய்தோம். இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை'' என்கிறார் குரல் கம்ம. மா.சு.சம்பந்தன் சென்னையின் மையப் பகுதியான பிராட்வே - மண்ணடி பகுதியில் லிங்கி செட்டித் தெருவில் உள்ள தனது வீட்டில் வசித்திருக்கிறார்.

அவருக்கு 5 மகன்கள். அவர்களில் மூன்று பேருடன்தான் அந்த வீட்டில் அவர் இருந்திருக்கிறார். அவருடைய இன்னொரு மகனான மணிவண்ணனிடம் பேசினோம்: ""அப்பா தனது தள்ளாத வயதிலும் மிகவும் உற்சாகமாக இருந்தார். படிப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று. புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பது ரொம்பப் பிடிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி வரை சென்று புத்தகங்களை வாங்கி வருவார்.

சமீபத்தில் அவ்வளவு தூரம் போவதில்லை. ஏனென்றால் கண் பார்வை சற்று மங்கலாகிப் போய்விட்டது. அவருக்குப் பிடித்த இன்னொரு முக்கியமான விஷயம், கூட்டங்களுக்குப் போவது. அதிலும் முக்கியமாக தமிழுணர்வாளர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். "வயதான காலத்தில் ஏன் வீட்டில் இருக்காமல் இப்படிச் சுற்றுகிறீர்கள்?' என்று கேட்டால், "நான் உயிரோடு இருப்பதே இப்படி மீட்டிங் எல்லாம் போவதால்தான்' என்பார்.

வெளியே போகும்போது யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போகமாட்டார். எங்கே போனாலும் பஸ்ஸிலும், நடந்தும்தான் போவார். ஆட்டோ எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். அவர் காணாமற் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படி ஒருமுறை வெளியே போனபோது மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டுத் தகவல் சொன்னார்கள். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஒரு மூன்றுநாட்கள் வெளியே போகாமல் இருந்தார். அதன் பிறகு பழையபடி கிளம்பிவிட்டார். இப்போது எங்கே இருக்கிறாரோ? எப்படி இருக்கிறாரோ?'' குரலில் வேதனை தெரிந்தது. மா.சு.சம்பந்தனை எங்கேயாவது பார்த்தவர்கள், உடனே சொல்லுங்களேன்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.