Thursday, November 3, 2011

கேரளாவில் குவியும் தமிழர்களின் நகைகள்


தமிழ்நாட்டில் சமீப காலமாக நகைகளை அடமானமாகப் பெற்றுக்கொண்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரள நிதி நிறுவனங்களான முத்தூட் பைனான்சு, மணப்புரம் பைனான்சு ஆகிய நிறுவனங்கள் தமிழகமெங்கும் சிற்றூர்கள் வரை கிளைகளைத் திறந்துள்ளன.


ஏழை மக்களும், நடுத்தர மக்களும் அவசரத் தேவைக்கு பணம் பெற கூட்டுறவு கடன் வங்கிகளை நாடி பணம் பெறமுடியாமல், மார்வாடிகள் நடத்தி வரும் அடகுக்கடைகளைத் தேடிச் சென்று நகைகளை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். கூட்டுறவு வங்கிகளைவிட இந்த அடகுக் கடைகளில் வட்டி விகிதம் மிகமிக அதிகமாகும். குறைந்தபட்சமாக 24% வட்டிக்கு மார்வாடிகள் கடன் வழங்குகிறார்கள்.


இப்போது தமிழகத்தில் ஆழமாகவும், விரிவாகவும் காலூன்றியுள்ள கேரள நிதி நிறுவனங்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் பகட்டான விளம்பரங்களைச் செய்து, மக்களைக் கவர்ந்துள்ளன. வாடிக்கையாளர்களின் அவசரக் கடன் தேவையை சில நிமிடங்களில் பூர்த்தி செய்து நகைகளின் பேரில் கடன் தருகின்றனர். மேலும், இந்த நிறுவனங்கள் வேறு யாரும் தராத அளவிற்கு அடமான நகைகளுக்கு அதிகப்பட்சக் கடன் வழங்குகின்றனர்.


சென்னையில் ஒரு சவரன் தங்க நகையின் விலை 21 ஆயிரம் ரூபாயாக இருக்கும் வேளையில் இந்நிறுவனங்கள் ஒரு சவரனுக்கு 17 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருகின்றன. இக்கடனுக்கு 12% முதல் 24%வரை வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாதந்தோறும் வட்டியை ஒழுங்காகக் கட்டாவிட்டால் 2 சதவீதம் அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. வட்டி விகிதமும் உயர்த்தப்படும். ஆனால் நகைக்கடன் பெற்றோரில் பெரும்பாலோர் ஒழுங்காக வட்டிசெலுத்த முடிவதில்லை. இதன் விளைவாக வட்டியும் அபராதமும் உயர்ந்து நகையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.


அதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள் இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமாகிவிடுகின்றன. அடகு வைக்கப்பட்ட 15வது மாதத்தில் நகைகளை ஏலம் விடுவது என்ற பெயரில் தங்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் இந்த நிறுவனங்களே ஏலத்தில் எடுத்து விடுகின்றன. இந்த வகையில் தமிழக மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கேரள நிறுவனங்களுக்குச் சொந்தமாகிவிடுகின்றன. கேரள நிறுவனங்களின் இந்த நகைக்கொள்ளையைத் தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.