Thursday, November 3, 2011

சீனாவின் பிடிக்குள் மாலத்தீவு! இந்தியா சுற்றிவளைப்பு?


இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயின் இலங்கைப் பயணத்தை அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது.

மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வையும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய'வையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன்போது, 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதைவிட சீன இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கவும், இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்ப் பயிற்சிகளில் சீனப் படை அதிகாரிகளுக்கு அதிக இடங்களை வழங்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த இணக்கப்பாடுகள் இந்தியாவுக்கு இன்னும் வெறுப்பேற்றும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்காகவே இந்தியா பெருமளவு முதலீடுகளை இங்கு மேற்கொண்டு வருகிறது.

அதுபற்றி நேரில் ஆராய இந்திய வெளி விவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் வந்து சென்ற கையோடு சீன இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பு வந்தது.

இப்போது தெற்காசியாவில் இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் செல்வாக்கை உடைத்துக் கொண்டு சீனா தனது பிடியை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.

முன்னர் இந்தியாவின் இசைவின்றி எந்த நாடும் எதுவும் செய்யாத நிலையொன்று இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

இலங்கையை அடுத்து மாலத்தீவும் இப்போது சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதான செய்தி இந்தியாவின் பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்த மாதம் மாலத்தீவில் சார்க் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.

அங்கு வலுவான படைகள் இல்லாததால், சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்து விசேட அதிரடிப் படையினர் மாலத்தீவு செல்லவுள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக மாலத்தீவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.

இந்த மாநாட்டின் பாதுகாப்புக்காக சீனா சி.சி..வி. எனப்படும் வீடியோ கண்காணிப்புக் கருவிகளை மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் இவையனைத்துமே சார்க் நாடுகள்.

சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் சந்தேகம் இல்லை.

ஆனால் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத சீனா எதற்காக மாலத்தீவுக்கு சி.சி..வி. வீடியோ கண்காணிப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்னரே எழுந்தது.

இந்த நிலையில் மாலத்தீவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகம் ஒன்றை நிறுவும் இரகசிய முயற்சியில் சீனா இறங்கியுள்ளதான தகவல் ஒன்றும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் பாணியில் மாலத்தீவின் மீதும் சீனாவின் கண் விழுந்துள்ளது.

இலங்கையில், அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிறுவியது சீனா. அங்கு விமான நிலையம் ஒன்றையும் அமைக்கிறது.

அதுபோலவே மாலத்தீவிலும் விளையாடத் தொடங்கியுள்ளது.

மாலத்தீவின் ஹவன்டு மற்றும் அதற்கு 10 கி.மீ தொலைவில் உள்ள மாறன்டு ஆகிய தீவுகளில் துறைமுகங்களை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

1192 தீவுகளைக் கொண்ட மாலத்தீவு நாட்டை தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு சீனா எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.

அடுத்து மாலத்தீவின் தலைநகர் மாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது விமான நிலையம் ஒன்றை ஹனிமன்டு தீவில் அமைப்பதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.

மாலத்தீவின் வடக்கு மாகாணத்தில் உள்ள 42 தீவுகளில் ஒன்றான இது இந்தியா மற்றும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமானது.

இந்தியாவுக்குத் தென்மேற்கே 250 மைல் தொலைவில்தான் இது இருக்கிறது.

இதைவிட மறாவோ தீவில் நீர்மூழ்கித் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த மே மாதம் சீன மக்கள் தேசிய காங்கிரஸின் நிலையியல் குழுத் தலைவர் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னரே இந்த அதிரடியான மாற்றங்கள் அங்கு நிகழத் தொடங்கியுள்ளன.

கிழக்கு ஆபிரிக்கா, சிசெல்ஸ், மொறிசியஸ், மாலத்தீவு, இலங்கை, பங்களாதேஷ், மியான்மார், கம்போடியா என்று இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் சீனா கடல்சார் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் இன்னும் வலுவாக பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவதார் என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது.

இவையெல்லாம் இந்தியாவைக் கலக்கம் கொள்ள வைக்கின்ற விடயங்களாகவே இருக்கின்றன.

மாலத்தீவு முன்னர் இந்தியாவின் கைக்குள் இருந்த நாடுதான்.

1989ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் ஒரு குழுவினர் மாலத்தீவுக்குக் கப்பலில் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றனர்.

அப்போது இந்தியாவே தனது படைகளை அனுப்பி பாதுகாத்தது.

அதன் பின்னர் கடற் கண்காணிப்பு சாதனங்கள், டோனியர் கண்காணிப்பு விமானம், ரேடர்கள் என்று இந்தியாவே மாலத்தீவுக்கு வழங்கியது.

ஆனால் இவற்றுக்கு அப்பால் சீனா தனது அதிகாரத்தை மாலத்தீவின் மீது செலுத்த ஆரம்பித்துள்ளது ஆச்சரியம்தான்.

மாலத்தீவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கம் அதிகம்.

அண்மையில்கூட ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்காக பிரசாரம் செய்வதற்கு மாலத்தீவு அதிபர் சென்றிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைக் காப்பாற்றும் நகர்வுகளை மாலத்தீவு அதிபர் இரகசியமாக மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு கடந்த வாரம் கொழும்பில் தங்கியிருந்தபோது, மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சரும் இங்கு தங்கியிருந்தார் என்பதும் இன்னொரு கதை.

மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் பலப்படுவதற்கு இலங்கை துணை நின்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

அப்படியானதொரு நிலை இருந்தால், இந்தியா இந்த விவகாரத்தை கடும் சினத்துடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தன்னைச் சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை இந்தியாவினால் எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாது.

ஏனென்றால் சீனாவின் இந்த வியூகம் இந்தியாவின் கடல்சார் திறன்களை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விடும்.

இதனால்தான் இது இந்தியாவை கடுமையாக கவலை கொள்ளச் செய்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம் தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் ஒரு காரணம்.

ஏனென்றால் இப்போது சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக் கொண்டவை.

இத்தகைய பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரே வாழ்கின்றனர்.

ஆனால் இந்த நாடுகளை இந்தியாவினால் தனது கைக்குகள் வைத்திருக்க முடியவில்லை.

போரின் போது தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி எடுத்ததோ, அப்படித்தான் தனது நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை.

இனிமேலும் இந்தத் தவறை இந்தியா களையாது போனால், தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி விடும்.

- சுபத்ரா http://thenseide..com

0 comments:

Post a Comment

Kindly post a comment.