Thursday, November 24, 2011

இனி "விழி நுனியில்' தகவல் பெறலாம்!



கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இன்டர்நெட்டை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒருவரது அறிவுத்திறனைப் பாராட்டும் வகையில், ""அவர் பெரிய அறிவு ஜீவி. எதைப் பற்றிக் கேட்டாலும் பதில் சொல்லிவிடுவார். தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்'' என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

இனி இந்தப் பாராட்டு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம், தகவல் அனைத்தும் உங்கள் விரல் நுனியில் அல்ல, விழி நுனியில் வரப்போகிறது. இதைச் சாதித்திருப்பது, (வழக்கம்போல) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான்.

இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இன்டர்நெட் பிடித்துவிட்டது. எந்தத் தகவல் வேண்டுமானாலும் கணினியை இயக்கி இணையதளங்களில் திரட்டிவிடலாம். சிலர் லேப்-டாப்பை (கர்ணனின் கவச குண்டலம் போல) எப்போதும் சுமந்துசெல்வதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்தச் சுமையையும் குறைக்க, உங்கள் கண்களில் "கான்டாக்ட் லென்ûஸ' பொருத்தி, அதன் மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதற்காகப் பார்வைக் குறைபாடு உடையவர்கள், கண் கண்ணாடியை பயன்படுத்துவதற்குப் பதிலாக அணியும் கான்டாக்ட் லென்சில் பல மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

விஞ்சானிகள் உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்ஸுடன் இணைக்கப்படும் ஆன்டெனா, வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. "சிப்'பில் பதிவாகும் அந்தத் தகவல்கள், மெல்லிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம், இ-மெயில் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம்.

இந்த கான்டாக்ட் லென்ஸ ஒருவருக்குப் பொருத்தி, வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள், இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

எனினும், கண்களுக்கு மிக அருகில் இருப்பதால், வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையைச் சரிசெய்யத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது புத்தக மூட்டையைச் சுமந்து செல்லும் மாணவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் லேப்-டாப்புடன் (மடிக் கணினி) பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், கை வீசிக் கொண்டும் செல்லலாம்!

1 comments:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete

Kindly post a comment.