Thursday, November 24, 2011

போலிச் சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் 1,800 பேர் --அமைச்சர் நாராயணசாமி



போலிச் சான்றிதழ்கள் அளித்து 1,800-க்கும் மேற்பட்டோர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) 157 பேரும், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 146 பேரும், இந்திய சென்ட்ரல் வங்கியில் 135 பேரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 112 பேரும், சிண்டிகேட் வங்கியில் 103 பேரும், தேசிய வேளாண்- ஊரக வளர்ச்சி வங்கியில் (மும்பை) 93 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படையில் 91 பேரும், இந்தியன் வங்கியில் 79 பேரும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 பேரும், கனரகத் தொழில் துறையில் 57 பேரும், அணுசக்தித் துறையில் 50 பேரும், பி.எஸ்.என்.எல்.லில் 49 பேரும் போலி ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளை அளித்து பணியில் இணைந்துள்ளனர்.

பணியில் இணையும்போதே சான்றிதழ்களை சரிபார்க்கவும், போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவரைப் பணிநீக்கம் செய்வதுடன் வழக்குத் தொடரவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். நிலுவையில் 1,132 ஊழல் புகார்கள்: அரசுத் துறைகளில் 1,132 ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தொடர்புடைய துறைகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், தொடர்புடைய அரசுத் துறைகள் விசாரணை அறிக்கையை அனுப்பாமல் உள்ளன. விதிமுறைகளின்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்த ஊழல் புகார்களின் மீது 3 மாதத்துக்குள் அந்தந்தத் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.