Monday, November 14, 2011

வெளி மாநிலங்களுக்குச் செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?



வீ.அரிகரசுதன் -

தமிழகத்தில், காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்பிருந்தும், நிலுவைத் தொகை வழங்குவதில் அரசின் மெத்தனம், மின்மாற்றிகள் மற்றும் மின் பாதையை (டிராஸ்மிஷன் லைன்) மேம்படுத்தாமல் உள்ளது போன்றவற்றால், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மரபு சாரா மின் உற்பத்தியில், காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரம் தூய்மையானதாக உள்ளது. இந்தியாவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

உற்பத்தித் திறன்: தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், 2,000க்கும் மேற்பட்ட காற்றாலைப் பண்ணைகள் உள்ளன. இவை, 6,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.காற்று அதிகம் வீசும், மே முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாள்தோறும் 2,500 முதல் 3,000 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர காலத்தில், நாள்தோறும் சராசரியாக, 400 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலை மூலம் பெறப்படும் மின் உற்பத்தியை, சில நிறுவனங்கள் சுய பயன்பாட்டிற்குப் பயன்படுத்துகின்றன. பெரும்பான்மை நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை, 2.37 முதல் 3.39 ரூபாய் வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. மாதந்தோறும் கொடுக்கப்படும் பில் தொகைக்கு, 30 நாட்களுக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் பணத்தைப் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், வாரியம் இதைப் பின்பற்றுவதில்லை.

சென்றாண்டு அக்டோபர் முதல் நடப்பாண்டு அக்டோபர் வரை, தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 2,500 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வெளிகொண்டு வருவதற்கான, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. தமிழகத்தில், காற்றாலை மின் திட்டங்களில் கூடுதலாக, 10,000 மெகா வாட் உற்பத்தி செய்யும் வாய்ப்பிருந்தும், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ரெட்டி என்பவர் கூறும்போது, "தமிழகத்தில், தற்போது, 10 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம்.

மின்வாரியம், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக வாங்க மறுப்பதுடன், வாங்கிய மின்சாரத்திற்கான, பணத்தையும் ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே, தமிழகத்தில் காற்றாலைகளுக்கு அதிக வாய்ப்பிருந்தும், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில், காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளோம்' என்றார்.

மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வெளி கொண்டு வருவதற்கு, 33 முதல் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களே உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இதை, 400 கிலோ வாட் என்றளவில் அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை செயல்பாட்டுக்கு வரும் போது நிலைமை சீராகும்' என்றார்.

காற்றாலைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், காற்றாலை டர்பைன் விற்பனை தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில், சில மாதங்களாக, இதன் விற்பனை குறையத் தொடங்கியுள்ளது. மின் வாரியம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகளால், டர்பைன்கள் விற்பனை குறைந்துள்ளது. இருந்த போதிலும், தமிழக காற்றாலை டர்பைன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆந்திரா, கர்நாடகம், குஜராத் போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து, அதிகளவில் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காற்றாலை டர்பைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை, 225 முதல் 2,500 கிலோ வாட் திறன் கொண்ட, காற்றாலை டர்பைன்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

10 மெகா வாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றால், 850 கிலோ வாட் திறன் கொண்ட, 11 டர்பைன்களை நிறுவ வேண்டும். தமிழகத்தில், பெரும்பாலான காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், 850 கிலோ வோல்ட் திறன் கொண்ட டர்பைன்களையே நிறுவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்கத் தலைவர் மற்றும் உலகக் காற்றாலை சங்கத் துணைத் தலைவர் கஸ்தூரி ரங்கய்யன் கூறியதாவது:நிலுவைத் தொகை அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்து வரும் மின் வாரியம், மின் பகிர்மானத்தில் இழப்பு என சாக்குபோக்கு சொல்லி, காற்றாலை நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதை தட்டிக்கழிக்கிறது. வாங்கும் மின்சாரத்திற்கு பணம் தர வேண்டும் என்ற காரணத்தாலும், மின் வினியோகம் சீராக இல்லை என்ற தவறான தகவலை அளிக்கிறது.தமிழகத்தில், மின் பற்றாக்குறையால் ஏராளமான தொழில்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே, மின்வாரியம் காற்றாலைகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற்று கொள்ளும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதர மாநில அரசுகள், காற்றாலை வாயிலாக பெறும் மின்சாரத்திற்கு, உடனடியாக பண பட்டுவாடா செய்து விடுகின்றன. தமிழக மின்வாரியமும், இதேபோன்று, செயல்பட்டால், இங்கும் அதிகளவில் காற்றாலை வாயிலாக மின் உற்பத்தி மேற்கொள்ள பலர் முன் வருவர்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையும் சீரடையும். இவ்வாறு கஸ்தூரி ரங்கய்யன் கூறினார்.
http://tamil.yahoo.com/வ-ள-ம-ந-லங்கள-க்க-ச-ல்ல-183900695.htm


0 comments:

Post a Comment

Kindly post a comment.