Thursday, October 27, 2011

வெளிநாட்டினரைக கவர்ந்திழுக்கும் தூங்காநகரம் மதுரை!

இந்தியாவின் எந்த பகுதிகளிலும் குறைந்த செலவில் நிறைவான சந்தோஷத்தை அனுபவித்துச் செல்லலாம் என்பதால், பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நிலைகுலைந்த போதும், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. டில்லி, மும்பை என பெருநகரங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை போன்று, மதுரைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லை. ஆனால் இங்கு ஒருமுறை வந்து செல்லும் வெளிநாட்டுப் பயணியால், அவர் அனுபவித்து செல்லும் மனநிறைவுகளால், பல பயணிகளை அனுப்பிவைத்து விடுகிறார்.

இந்தியாவில் அக்., முதல் மார்ச் வரை வெளிநாட்டு பயணிகள் அதிகமாக முகாமிடுகின்றனர். மதுரையை மையமாக வைத்து தேக்கடி, மூணாறு, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு அதிகம் பயணிக்கின்றனர். மதுரையில் அதிகபட்சமாக இரண்டு இரவு, ஒரு பகல் அல்லது ஒரு பகல் இரண்டு இரவு தங்குகின்றனர். இங்கு நட்சத்திர அந்தஸ்தில் குறைவான ஓட்டல்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2008ம் ஆண்டில் 48,000 பேர், 2009ம் ஆண்டில் 53,000 பேர், 2011ம் ஆண்டில் 57,000 பேர் மதுரைக்கு வந்துள்ளனர். இதில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்பானிஷ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்க என பயணிகளின் பட்டியல் நீள்கிறது.

தெப்பத்திருவிழா, மீனாட்சி கோயில் தேரோட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என தென்மாவட்டங்களில் நடைபெறும் பல திருவிழாக்களை பார்ப்பதற்காகவும் வெளிநாட்டு பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளிநாட்டு பயணிகள் மதுரையை விரும்புவதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வடமாநிலங்களை விட, தென் மாநிலங்களில் நல்ல காலநிலை, செலவுகளும் குறைவு, உபசரிப்புகள் அதிகம் என்பதும்தான் !

வெளிநாட்டு பயணிகள் மதுரையை விரும்பும் அளவிற்கு அவர்களுக்கான வசதிகள் மதுரையில் இல்லை. சர்வதேசத் தரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டும் இன்னும் விமான சேவைகள் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப நட்சத்திர ஓட்டல்களின் எண்ணிக்கையும்
போதுமானதாக இல்லை.

வெளிநாட்டு பயணிகள் விரும்பும் உணவு வகைகள் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பிரத்தியேகமாக தயார் செய்யப்படுகிறது. இவற்றை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டினரை வியாபாரிகள் ஏமாற்றுதல், பிச்சைக்காரர்களின் தொல்லை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், முறையற்ற அதிக கட்டணம் வசூல் இவற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தால், வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டும், என்பதில் ஐயமில்லை.


0 comments:

Post a Comment

Kindly post a comment.