Thursday, October 20, 2011

சொந்தப் பணத்தில் படகில் பயணித்து ஜனநாயகம் பேணும் பழங்குடிமக்கள்


உள்ளாட்சித் தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் படகில் வந்து வாக்களித்து சென்றனர்.ஆனால், தாங்கள் கட்டணம் செலுத்தி படகில் வந்து வாக்களிக்க வேண்டியுள்ளதெனவும், அதனால் இனிவரும் தேர்தல்களில் எங்களுக்காக கட்டணமில்லா சிறப்பு படகுகளை இயக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சிப்பாறை ஊராட்சியின் பெரும்பகுதி வனப்பகுதியாக உள்ளது. இங்கு தோட்டமலை, தச்சமலை, களப்பாறை, வலியமலை உள்ளிட்ட 26 மலைகளில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.காணி இன பழங்குடி வாக்காளர்கள் ஏறக்குறைய 1200 பேர் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி பேச்சிப்பாறை ஊராட்சிக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.இதற்காக பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு காணி இன மக்கள் வரவேண்டுமானால் பேச்சிப்பாறை அணையைக் கடந்துதான் வரவேண்டும்.

இதனால், பேச்சிப்பாறை அணையின் வழியே படகுகளில் வந்து தங்களது வாக்குரிமையை பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் செலுத்தினர்.இதுகுறித்து தோட்டமலைப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காணி கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலின்போதும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கான வாக்குச்சாவடி பேச்சிப்பாறை அரசுப் பள்ளியில் அமைக்கப்படுகிறது. இதனால், நாங்கள் மலைப் பகுதிகளில் நீண்ட தொலைவு நடந்து, பின்னர் படகு வழியாக பேச்சிப்பாறை அணையைக் கடந்துவந்து வாக்களிக்கிறோம்.

நாங்கள் இங்கு வந்து வாக்களித்துச் செல்லும் வகையில் சிறப்புப் படகுகள் இயக்கப்படுவதில்லை. எங்கள் சொந்த செலவில் ஒரு நபருக்கு ரூ.10 வரை தனியார் படகில் கட்டணம் செலுத்தி இங்கு வந்து வாக்களிக்கிறோம். இவ்வாறு வாக்களிப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.