கலாபாகோஸ் தீவுகள் (Galapagos Islands) என்ற பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டுக்கூட இருக்க முடியாது. காரணம் இது வர்த்தக ரீதியில் இன்னமும் பெரிதாகப் பிரபல்யம் பெறவில்லை. ஆனால் அதற்காக இந்தத் தீவுக் கூட்டத்தில் இயற்கை அழகைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. செயற்கைக் கலப்பில்லாத இயற்கை அழகைக் காணவேண்டுமென்றால் சுற்றுலாச் செல்வதற்கு அட்டகாசமான இடம் இது.
லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் வரும் இந்தத் தீவுக்கூட்டங்கள் பசுபிக் பெருங்கடலில், ஈகுவடோரிலிருந்து 970 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது. கலாபாகோஸ் தீவுகளுக்கு நீங்கள் எப்படிப் பயணிக்கலாம் என்பதைக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்க்கவும். அதற்குமுன், இந்த இடம் உங்களது ரசனைக்கு ஏற்ற இடமா என்பதைத் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விபரங்களைப் படியுங்கள்.
காலாபாகோஸ் தீவுக் கூட்டம் 15 தீவுகளையும், 3 குட்டித் தீவுகளையும், 107 பாறைத் திட்டுகளையும் கொண்டது. பாறைத் திட்டுகளில் யாரும் வசிப்பதில்லை. பெரிதும் சிறிதுமாகவுள்ள 18 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர்.
மொத்த மக்கள் தொகை 17 ஆயிரம் மட்டுமே. பாறைத்திட்டுகள் உள்ள பகுதிகளில், திமிங்கலங்கள், ஆமைகள் முதலியவை நிறைந்துள்ளன.
இங்கே உள்ள ஜியோசெலோன் என்ற ஆமையின் எடை 250 கிலோ. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட யானைக் குட்டி போலவே இருக்கும். இந்த வகை ஆமைகளின் வாழ்நாள் காலம் 100 ஆண்டுகள்.
இங்கு வந்த உல்லாசப் பயணிகளின் அனேகர் இந்த ஆமையை உண்பதற்காகவே வந்துகொண்டிருந்தனர். காரணம் இவற்றின் மாமிசச் சுவை பலரைப் பெரியளவில் கவர்ந்திருந்த காரணத்தால் மிகப் பிரபலமாகியிருந்தது. கடந்த காலங்களில் ஏராளமான ஆமைகள் இங்கு வேட்டையாடப்பட்டு, தற்போது 15 ஆயிரம் ஆமைகள்தான் உள்ளன.
தற்போது ஆமை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் உயிருடன் இருக்கும் ஆமைகளில் 7,214 ஆமைகள் பழங்காலத்தைச் சேர்ந்த உயிரினங்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இப்போது நீங்கள் போனால் ஆமையைக் கண்குளிரக் கண்டு களிக்கலாம். ஆனால் கைவைக்க முடியாது. இந்த இனத்தைச் சேர்ந்த ஆமைகளைத் தவிர மற்றய கடல் ஆமைகளைத் தாராளமாக உண்ணலாம்.
காலாபாகோஸ் தீவுக் கூடத்தில் அக்னிக் குழம்பைச் சிந்தும் எரிமலைகளும் உள்ளன. கடலுக்கு அடியில் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான எரிமலைகள் இவை. இன்று, 2000 எரிமலைகள்இங்குள்ள தீவுகளில் குமுறிக்கொண்டுதான் இருக்கின்றன.
பயப்படாதீர்கள். அடுத்த 20 வருடங்களுக்கு இவற்றில் எதுவும் பெரிதாக வெடித்துப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உல்லாசப் பயணிகளின் வருகையெல்லாம் சமீப வருடங்களாகத்தான். அதற்குமுன் இங்கு வந்து சென்றவர்கள் யார் தெரியுமா? கடல் கொள்ளையர்கள். இந்தப் பகுதிதான் ஒருகாலத்தில் பிரிட்டிஷ் கடல் கொள்ளையர்களுக்குப் புகலிடமாக இருந்து வந்தது.
பிரிட்டிஷ் கடல் கொள்ளையர்கள், ஐரோப்பாவிலிருந்து இவ்வளவு தொலைவுக்கு ஏன் வந்தார்கள்? தென் அமெரிக்காவிலிருந்து தங்கமும், வெள்ளியும் ஏற்றிக்கொண்டு செல்லும் ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்துவிட்டு இங்கே ஓய்வாகத் தங்குவது அவர்களது வழக்கம்.
ஒருகட்டத்தில் அமெரிக்கர்கள் இந்தக் கடற்பகுதிக்கு வந்து பிரிட்டிஷ் கொள்ளையரை விரட்டியதில், அவர்கள் இந்தப் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டனர். அமெரிக்கக் கப்பல்கள் அதன்பின் இந்தக் கடல் பகுதியை ரோந்து சுற்றிக்கொண்டிருந்தன. ஆனால், அந்தக் கப்பல்களும் தீவுக்கு அருகே வருவதில்லை.
இதனால் காலப்போக்கில், இந்தத் தீவுகள் திமிங்கலங்களுக்குச் சரணாலயம் போல ஆயிற்று. தென்னமெரிக்க நாடுகளில் தண்டனை பெற்ற கைதிகளை அனுப்பி வைக்கும் இடமாகவும் இத்தீவுகள் சிறிது காலம் இருந்தன.
ஐரோப்பியர்களுக்கு, முக்கியமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தத் தீவு தெரியவந்தது 1835ம் ஆண்டு சார்ள்ஸ் டோர்வின் இங்கு பீகிள் கப்பல் மூலம் வந்து இறங்கியதால்தான். பிரிட்டனைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான அவர், இங்கு கடலோரங்களில் தங்கி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்துவதால் உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் ஆய்வு செய்தார்.
எந்தவித செயற்கை இடையூறுகளும் இன்றி, இயற்கையான சூழலில் ஆய்வு செய்வதற்காக கடல் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தார் அவர். இந்த இடத்தை அவர் கண்டபோது, விலங்குகளும், தாவரங்களும் நிறைந்த பழங்கால உலகம் அவரது கண்முன்னே தெரிந்து அதிசயிக்க வைத்தது. உடனே இங்கேயே தங்கிவிட்டார்.
காலாபாகோஸ் தீவுக் கூட்டங்களில் காணப்பட்ட சுமார் 13 வகை உயிர் ஜந்துகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ஒன்றுக்கு ஒன்று போட்டியாக இல்லாமல் ஒவ்வொரு விலங்குகளும் வெவ்வேறு வகையில் அதன் குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் பாலூட்டுவதை அவர் கண்டறிந்தார். பரிணாம வளர்ச்சித் தத்துவத்துக்கு இது ஓர் அடிப்படையாக அமைந்தது என்று 1859-ல் வெளியான நூலில் டார்வின் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆய்வை முடித்துக்கொண்டு அவர் பிரிட்டன் திரும்பிய பின்னர் இந்தத் தீவுக்கூட்டம் பிரிட்டிஷ் இயற்கை ஆய்வாளர்களுக்கு முக்கிய தளமாகியது.
அது பழைய கதை. சமீப ஆண்டுகளில் ஆய்வாளர்களைவிட அதிக சதவீதத்தில் உல்லாசப் பயணிகள் வரத்தொடங்கவே, இப்பகுதி இயற்கையில் ஆர்வமுடைய உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக மாறிவிட்டது. இப்போது ஆண்டுதோறும் 80,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டது.
ஏப்ரல், மே மற்றும், செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் காலநிலை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் உல்லாசப் பயணிகளின் வருகை குறைவு. மற்றய மாதங்களில் சென்றால் தீவுகளுக்கிடையே படகுகளில் செல்ல முடியும். கடலின் நடுவேயுள்ள பாறைத் திட்டுகளுக்கும் படகில் செல்லலாம்.
சில பாறைத்திட்டுகளில் உல்லாசப் பயணிகளுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுது சாயுமுன் பாறைத் திட்டுகளுக்குச் சென்று இரவு அங்கே தங்கியிருந்தால் (பயம் இல்லாவிட்டால்!), கடலில் நடமாடும் திமிங்கலங்கள் முதல், பாறைகளுக்கு வரும் ராட்சத சைஸ் ஆமைகளையும் காணலாம்.
நிலவு காலங்களில் பாறைத் திட்டுகளுக்குச் செல்லும் உல்லாசப் பயணிகள் அதிகம். இதனால் கும்பலோடு கோவிந்தா என்று அவ்வளவு பயமில்லாது போய்விட்டு வரலாம்.
இந்தத் தீவுக் கூடத்தில் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் போய்வர இயலும். ஆனால், அந்தச் சிறிய பகுதியிலேயே அரிய வகை வனவிலங்குகளும் கடல் உயிரினங்களும் நிறைந்திருப்பதால் இங்கு வருபவர்கள் மன நிறைவுடன் செல்கின்றனர்.
இங்குள்ள விலங்குகள் அமைதியாக அதன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களைப் பார்த்து அவை பயப்படாது. நீங்கள் பயப்படாவிட்டால் சரி. மற்றய விலங்குகளை அடித்துக் கொன்று தின்னும் பெரிய விலங்குகள் எதுவும் இங்கு இல்லை. ஒவ்வொரு வகை விலங்குகளும் அவைகளுக்கான இடங்களில் அமைதியாக வசிக்கின்றன.
இங்குள்ள ஒவ்வொரு தீவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. வட மேற்கிலிருந்து வந்தால், ஜெனோவேசா என்ற எரிமலைத் தீவைக் காணலாம். இந்த எரிமலையின் பெரும் பகுதி கடல் நீருக்குள் மூழ்கியுள்ளது.
இங்கு நல்ல மணம் பரப்பும் பர்சேரா மரங்கள் கண்களுக்கும் விருந்தளிக்கிறது. கோடைக்காலத்தில் இலைகளின்றி காய்ந்துபோய்விடும் இந்த மரங்கள், டிசம்பரில் (மழை பெய்யும் காலம்) பசுமை பூத்துக் குலுங்கும். இங்குள்ள மாந்தோப்புகளில் ஃபிரிகேட் பறவைகள் கூடுகட்டிக் கொண்டு வாழ்வதைக் காணலாம்.
ஃப்பெர்னாண்டினா தீவில் உள்ள கும்ப்ரே எரிமலை 4930 அடி உயரமுள்ளது. இந்த எரிமலைதான் ஆபத்தானது. இதிலிருந்து கரிய எரிமலைக் குழம்பு கொட்டுவதைப் பீதியை பார்த்துவிட்டு வரலாம். இப்பகுதியில் மனிதர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. கடல் நாய்கள், மற்றும் கடல் சிங்கங்களை நிச்சயம் பார்க்க முடியும்.
பார்த்தோலோமி தீவில் உள்ள கலங்கரை விளக்கம், இத்தீவுக் கூட்டத்திலேயே மிக ரம்மியமான இடம். இங்கு சூரிய அஸ்தமனக் காட்சி கண்ணைக் கவருவதாக இருக்கும். மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் நாரைகள் பாய்ந்து செல்வதை பார்த்து ரசிக்க முடியும். நீங்கள் பென்குவின்களைப் படத்தில் மாத்திரம் பார்த்திருந்தால், இங்கு நேரிலேயே காணலாம்.
செயற்கை அம்சங்கள் எதுவுமற்ற இயற்கையான இடமொன்றில் விடுமுறையைக் கழிப்பதுதான் உங்கள் விருப்பமாக இருந்தால், நிச்சயமாக இது உங்களுக்கான இடம். செல்ல வரும்புகிறீர்களா? எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா?
நீங்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்து பயணித்தாலும், முதலில் போய் இறங்க வேண்டிய இடம் ஈகுவடோர். உங்கள் சர்வதேச விமானப் பயணத்தை ஈகுவடோரின் குவாயாகுவுக்கோ, அல்லது தலைநகர் குயிட்டோவுக்கோ புக் பண்ணுங்கள். அமெரிக்காவின் நியூயோர்க், மயாமி அல்லது ஐரோப்பாவின் அம்ஸ்ட்ரடாம், மாட்ரிட் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் இவ்விரு நகரங்களுக்கும் செல்கின்றன.
நீங்கள் ஆசியாவிலிருந்து செல்வதானால் அட்லான்டிக் பாதையைத் தேர்ந்தெடுங்கள் (பசுபிக் பாதையில் விமானக் கட்டணங்கள் அதிகம்) ஐரோப்பாவிலிருந்து கே.எல்.எம். விலை குறைந்த டிக்கட்களை வைத்திருக்கிறது. அடுத்த இடத்தில் ஐபீரியா எயார்லைன்ஸின் கட்டணங்கள் இருக்கின்றன. விசா பிரச்சினை கிடையாது.
நாங்கள் குறிப்பிட்ட இரு ஈகுவடோரியன் நகரங்களில் ஏதாவது ஒன்றுக்கு வந்துவிட்டீர்கள் என்றால், மிகுதி சுலபம். இங்கிருந்து விமானத்திலும் போகலாம். கப்பலிலும் போகலாம். கப்பல் பயணத்திலுள்ள சிக்கல் என்னவென்றால், போய்ச்சேரக் கிட்டத்தட்ட 3 நாட்கள் எடுக்கும். எனவே விமானப் பயணம் சிறந்தது.
இவ்விரு நகரங்களிலுமிருந்து தினசரி பல விமானங்கள் தீவுக் கூட்டங்களுக்குச் செல்கின்றன (சிறிய விமானங்கள்தான்) டேம் எயார்லைன்ஸ் மற்றும் ஏரோகல் எயார்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் பயணிகளுக்கான விமான சேவையை இவ்விரு நகரங்களிலுமிருந்து, பால்ட்ரா தீவு, சான் கிறிஸ்டோபல் தீவு ஆகிய இரு இடங்களுக்கும் நடாத்துகின்றன. அங்கு போய் இறங்கிவிட்டால், தீவுகளுக்கிடையே படகு சேவைகள் இருக்கின்றன.
சுவாரசியமான, வித்தியாசமான பயண அனுபவமாக நிச்சயம் இருக்கும். விலங்குகளிலும் பறவைகளிலும் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அவற்றின் அருகே சென்று இயற்கையாகப் பார்ப்பது த்ரில்லிங்காக இருக்கும்
0 comments:
Post a Comment
Kindly post a comment.