Thursday, October 13, 2011

நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!

நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!

‘விண்ணை முட்டும்’ அளவுக்கு உயரமான கட்டிடம் பார்த்திருக்கிறோம். மெக்சிகோவில் ‘பாதாளத்தை முட்டும்’ அளவுக்கு அண்டர்கிரவுண்டில் சுமார் ஆயிரம் அடி ஆழத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட இருக்கிறார்கள். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மத்திய பகுதியில் 65 மாடி கட்டிடம் ஒன்று வர இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால்.. மொத்த கட்டிடமும் அண்டர்கிரவுண்டில் அமையப் போகிறது.

கடைகள், அபார்ட்மென்ட்களில் தரை தளத்துக்கு கீழே ‘பேஸ்மென்ட்’ என்று ஒரே ஒரு தளம் இருக்கும். இந்த கட்டிடத்தின் மொத்த மாடிகளும் பேஸ்மென்ட்டில்தான் அமையப் போகின்றன. ஆயிரம் அடி உயரம் (ஆழம்) உள்ள 65 மாடி கட்டிடத்தில் 35 மாடிகளில் ஆபீஸ்கள் செயல்படும். வீடுகள், கடைகள், அருங்காட்சியகத்துக்கு தலா 10 மாடிகள் ஒதுக்கப்படுகின்றன. திருமணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த வசதியாக விழா அரங்கம் ஒன்றும் இதில் அமைக்கப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த ‘பங்கர் ஆர்கிடெக்சுரா’ என்ற கட்டுமான நிறுவனம் இதை கட்டுகிறது. இதுபற்றி நிறுவனத்தின் தலைமை இன்ஜினியர் எஸ்டிபன் சூரஸ் கூறியதாவது:

இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்கும்போது, 800க்கு 800 அடி சதுரத்தில் ஒரு மைதானம் போலத்தான் இருக்கும். கட்டிடத்தின் கீழ் தளம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தரை தளம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்படுகிறது. சூரிய வெளிச்சம், வெளி காற்று கிடைப்பதற்கு வசதியாக, பிரமிடை தலைகீழாக கவிழ்த்ததுபோல கட்டிடத்தை டிசைன் செய்திருக்கிறோம். ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெரிய கட்டிடங்கள் கட்ட இடமில்லை. மேலும், 8 மாடிக்கு மேல் கட்டக்கூடாது என்று நகர நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றன.

மீறினால், ‘டீவியேஷன்’ பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 65 மாடியும் அண்டர்கிரண்டில் கட்டப்படுவதால் அத்தகைய பிரச்னைகள் எதுவும் இருக்காது. ‘வானுயர்ந்த’ கட்டிடம் கட்டுவதைவிட அண்டர்கிரவுண்டில் கட்டிடம் அமைப்பது சிக்கலானது. கிரேன்கள் பயன்படுத்துவது, கட்டுமான பொருட்களை எடுத்து செல்வது என எல்லாமே சிரமமாக இருக்கும். அவற்றை சமாளித்து உருவாக்கப்படும் இந்த பிரமாண்ட கட்டிடம் கட்டிட கலை வரலாற்றில் மைல் கல்லாக அமையும். இவ்வாறு எஸ்டிபன் கூறினார்.

1 comments:

Kindly post a comment.