இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.இந்தியாவின் கடைசி கவர்னர்-ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிரமணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக என். சிவராஜ் போன்றோர் பதவி வகித்து அப்பதவிகளுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் எனக் கருதப்படும் அலைக்கற்றை ஊழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் முக்கியப் பங்கு வகித்திருப்பது, என்றும் மாறாத தலைக்குனிவைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. ராசா அலைக்கற்றையை அளிப்பதில் கையாண்ட முறை ஊழல் நிறைந்தது. இதன் விளைவாக, அரசுக்கு வரவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதையொட்டி பெரும் அமளி ஏற்பட்டது. இவ்வளவும் பகிரங்கமாக வெளியான பிறகும் அமைச்சர் ராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகி இருக்கும்படி அவருக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஆணையிடவில்லை.
இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்னையில் தலையிட்டு விசாரணையைத் தானே நேரடியாக மேற்கொள்ள நேரிட்டிருக்காது.
ராசா பதவியில் தொடர்வதை உச்ச நீதிமன்றம் கண்டித்தப் பிறகே அவரைப் பதவி விலக பிரதமர் அனுமதித்தார் என்பது வெட்ககரமானது. ஆ. ராசா, கனிமொழி மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும்போதே மற்றொரு மத்திய அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
நிதியமைச்சகத்தின் துணைச் செயலராக உள்ள ராவ் என்பவர் பிரதமரின் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பிய ரகசியக் குறிப்பு அவர் மட்டுமே தயாரித்தது அல்ல. மாறாக, தொலைத் தொடர்புத் துறை, சட்டத்துறை, நிதித்துறை ஆகியவற்றின் செயலர்களும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலரும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சரவைச் செயலர் தலைமை வகித்திருக்கிறார்.
ராவ் தயாரித்த குறிப்பில் நிதித்துறை 12 அம்சங்களைக் குறிப்பிட்டது. அதற்கு மேல் 14 அம்சங்களை அமைச்சரவை செயலகம் சேர்த்தது என்றும் திட்டவட்டமான தகவல்கள் கூறுகின்றன. அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம் ஆவார். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்தும், அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை.
இந்த மாபெரும் ஊழலை அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால் அப்போதே தடுத்திருக்கலாம் என தனது குறிப்பில் ராவ் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது ஆகும். முளையிலேயே கிள்ளி எறித்திருக்கக்கூடிய இந்த ஊழல் முள்செடியை மரமாக வளர அனுமதித்தது ப. சிதம்பரமே என்பது தெளிவாகத் தெரிகிறது.
பதவியில் மிக இளையவரான ராசா மட்டுமே இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. எனவே, ஆ. ராசா செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் அனைத்திலும் ப. சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு எனக் கருத வேண்டியுள்ளது.
சிதம்பரம் நிரபராதியாக இருந்தால் இந்த ஊழலைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும் அதைப் பயன்படுத்தாதது ஏன்? அவ்விதம் அவர் செயல்பட முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தால், அவரை முடக்கிய அதிகார சக்தி எது? இந்தக் கேள்விகளுக்குரிய விடையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை சிதம்பரத்துக்கு உண்டு.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆ. ராசாவும், ப. சிதம்பரமும் தன்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக 4-7-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எனவே 2001-ம் ஆண்டு விலையில்தான் அலைக்கற்றை விற்பனை நடக்கப்போகிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் இருக்க வேண்டும். சிறந்த பொருளாதார நிபுணர்களான அவர்கள், இதனால் நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்பதையும் கணித்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த ஊழல் நடைபெறுவதைத் தடுக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவ்வாறு செய்யவிடாமல் அவர்களைக் கட்டிப் போட்ட சக்தி எது?
நிதியமைச்சகத்தின் இந்தக் குறிப்பு வெளியான பிறகும் மத்திய புலனாய்வுத் துறை இதுவரை ப. சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரிடம் பெயரளவுக்குக் கூட விசாரணை நடத்தவில்லை.
பிரணாப் முகர்ஜிக்கும் ப. சிதம்பரத்துக்கும் இடையே உள்ள பிரச்னைபோல இது திட்டமிட்டுச் சித்திரிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் குறித்து எல்லாம் தெரிந்திருந்தும் அதைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருந்தும் அதை ஏன் ப. சிதம்பரம் தடுக்கவில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, இரு அமைச்சர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல இது.
இதற்கிடையில் சிறையில் உள்ள ஆ. ராசா பிரதமரையும், ப. சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின்முன் வைத்துள்ளார். பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராசாவைப் பின்னிருந்து இயக்கிய சக்தி எது என்பது அம்பலமானால் என்ன செய்வது என அவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகியோர் நேர்மையற்ற வகையில் நடந்துகொண்ட விதம் இந்திய அரசியலில் தமிழகத்துக்கு இருந்த பெருமையை சீர்குலைத்துள்ளது. அலைக்கற்றை ஊழல் புகார் எழுந்தவுடன் பதவியை விட்டு விலகவும் விசாரணையை எதிர்கொள்ளவும் ஆ. ராசாவும் முன்வரவில்லை. ப. சிதம்பரமும் முன்வரவில்லை.
போதாக்குறைக்குத் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவரான தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்திலேயே அலைக்கற்றை ஊழல் தொடங்கிற்று என்ற குற்றச்சாட்டு எழுந்து அதன்பேரில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
ஆக, இந்தப் பெரும் ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவருமே தமிழர்களாக இருப்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. திட்டமிட்டே இந்த ஊழலை இவர்கள் செய்துள்ளனர் என்பது வெளிப்படையானது.
மத்திய நிதியமைச்சர்களாக பிரதமர் நேருவின்கீழ் பதவி வகித்த ஆர். கே. சண்முகம் செட்டியார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது பதவிகளைத் துச்சமாக மதித்து தூக்கியெறிந்து விசாரணையை நெஞ்சுரத்துடன் நேர்கொண்டு தங்களின் தூய்மையை நிலைநிறுத்தினார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராகப் பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் 1948 பிப்ரவரியில் வரி ஏய்ப்பு தொடர்பான சில வழக்குகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்தார். இந்த வழக்குகள் நியாயமற்ற முறையில் தொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் நினைத்ததால் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே வரி ஏய்ப்புகள் தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்றை வரதாச்சாரி என்பவர் தலைமையில் இந்திய அரசு அமைத்திருந்தது.
கமிஷன் விசாரணையில் இருந்த சில வழக்குகளைத் திரும்பப் பெற நிதியமைச்சர் சண்முகம் உத்தரவிட்டதன் விளைவாக, பிரச்னை எழுந்தது. கமிஷன் தலைவரான வரதாச்சாரியைச் சந்தித்து, தனது நடவடிக்கை குறித்து சண்முகம் விளக்கினார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பெரும் பிரச்னையாக ஆக்கினார்கள்.
உடனடியாக ஆர்.கே. சண்முகம் செட்டியார் தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து 1948-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியன்று விலகினார். பிரதமர் நேரு பதவி விலகலை ஏற்கத் தயங்கினார். மிகக் கடுமையான சூழ்நிலையில் சண்முகம் தன் பொறுப்பைத் திறம்பட நிர்வகித்ததாகவும் மிகுந்த வருத்தத்தோடு பதவி விலகலை ஏற்பதாகவும் அவருக்கு நேரு கடிதம் எழுதினார். அவரையடுத்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ஜான்மத்தாய் இந்த வழக்குகள் சம்பந்தமான கோப்புகள் முழுவதையும் பார்வையிட்டு சண்முகம் இதுதொடர்பாக எந்தத் தவறும் இழைக்கவில்லை எனப் பகிரங்கமாகக் கூறினார்.
அதைப்போல நிதியமைச்சராக டி.டி.கே. இருந்தபோது பிரதமர் நேருவின் மருமகனான பெரோஸ் காந்தி முந்திரா ஊழல் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். நொடித்துப்போன நிதிநிலைமையில் இருந்த முந்திராவின் நிறுவனங்களை மீட்பதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2 கோடியே 76 லட்சம் ரூபாய்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
தனி ஒரு மனிதரைக் காப்பாற்றுவதற்காக இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. இந்தப் பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அன்றாட நிர்வாகத்தில் நிதியமைச்சருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், நிதியமைச்சராக இருந்த டி.டி.கே. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.
அதற்கிணங்க 1958-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சக்ளா கமிஷனை பிரதமர் நேரு அறிவித்தார். அமைக்கப்பட்டு 50 நாள்களில் அந்தக் கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே நிதியமைச்சர் டி.டி.கே. பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பிரதமர் நேருவுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், ��நிதித்துறைச் செயலர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் தார்மிகப் பொறுப்பு ஏற்கிறேன்� என்று கூறி தனது கண்ணியத்தையும், நேர்மையையும் நிலைநாட்டினார்.
ஆர்.கே. சண்முகமும், டி.டி.கே.யும் மத்திய நிதியமைச்சர் பதவியைத் திறம்பட வகித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். ஆனால், ஜனநாயக நெறிமுறைகளை நிலை நிறுத்தவும் வெளிப்படையான, நேர்மையான, தூய்மையான நிர்வாகம் நடக்கவேண்டும் என்பதற்காகவும் தங்கள் பதவிகளைத் துறக்க முன்வந்ததன் மூலம் மக்களாட்சியின் மாண்பை பல படி உயர்த்தினார்கள்.
மேற்கண்ட இருவரையும் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பொறுப்பை வகித்த ப. சிதம்பரம் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் தனது கண்ணெதிரே நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததோடு, அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தது, அவரின் மீதான ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளது.
மேலும் அந்த ஊழலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சாதிக்க முயல்வதும் அவருக்குப் பிரதமர் நற்சான்றிதழ் வழங்குவதும் ஜனநாயக ஆட்சி முறையைக் கேலிக் கூத்தாக்கிவிட்டது. நிர்வாகத்தில் நேர்மை என்பதையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
ஆர். கே. சண்முகம், டி. டி. கே. ஆகியோர் தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகிய இரு தமிழர்கள் என்பதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.