Saturday, September 10, 2011

கவிஞர் ஆடற்கோ, இயற்கை எய்தினார்


அண்ணாகண்ணன்

என் இனிய நண்பரும் சிறந்த மரபுக் கவிஞருமான ஆடற்கோ(72), 08.09.2011 அன்று முன்னிரவு 7 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இவரின் இறுதிச் சடங்குகள், 09.09.2011 அன்று நிகழ்ந்தன.
AadaRkO, ஆடற்கோ
ஆடற்கோ
எஸ்.நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஆடற்கோ என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். சென்னையின் புகழ் வாய்ந்த பின்னி ஆலையின் தலைமை அலுவலகத்தில் அலுவலராக 45 ஆண்டுகள் பணியாற்றி, 1992இல் ஓய்வுபெற்றார். சென்னை, புரசைவாக்கத்திற்கு அருகில் பெருமாள்பேட்டையில் 50 ஆண்டுகளாக வசித்து வந்தார்; 2004இல் அந்த வீட்டை விற்றுவிட்டு, அம்பத்தூருக்கு இடம் பெயர்ந்தார். இந்த இரு வீடுகளுக்கும் நான் சென்று வந்துள்ளேன். 

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஈசூர் என்ற கிராமத்தில் நெல் பயிரிட்டு, அதனையும் அவ்வப்போது கவனித்து வந்தார்.இவருக்கு மகள்கள் மூவர்; மகன் ஒருவர். இவர் மகன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினேன்.
1997 காலக்கட்டத்தில் ’தேனாறு’ என்ற கவிதை மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகச் சிறப்புறப் பணியாற்றினார். 

அவரது ஊக்கத்தின் பேரில் இவ்விதழில் ’இதழ்தோறும் ஓர் இனிப்பு’ என்ற தலைப்பில் கவிதைகள் எழுதினேன். அவற்றை இதழின் கடைசிப் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டார். எனது ’உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ என்ற கவிதைத் தொகுப்பிற்கு, நல்லதோர் அணிந்துரை வழங்கி வாழ்த்தினார். என் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். என் கவிதைகளைப் பெரிதும் பாராட்டி மகிழ்வார்.

இதே ’தேனாறு’ என்ற தலைப்பில், தம் கவிதைகளைத் தொகுத்து, 2007ஆம் ஆண்டு, நூலாக வெளியிட்டார். அந்த நூல், கன்னிமாரா நூலகத்தில் உள்ளது. பார்க்க: http://connemara.tnopac.gov.in

தமிழ்ப் பாவை என்ற நூலை 2010ஆம் ஆண்டு இயற்றினார். இதனை இலக்குவனார் இலக்கியப் பேரவை வெளியிட்டது. காண்க: http://books.google.com
அம்பத்தூருக்கு ஆடற்கோ வந்த பிறகு, கம்பன் கழகம், அம்பத்தூர் நகைச்சுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் மாதாந்தர நிகழ்ச்சிகளில் அடிக்கடி சந்தித்தோம். 27.08.2011 அன்று நடந்த அம்பத்தூர், கம்பன் கழகக் கூட்டத்திலும் சந்தித்தோம்.

2008ஆம் ஆண்டு, ஆடற்கோவும் பெங்களூருப் பாடகர் நாகி நாராயணனும் தொடர் வண்டியில் ஒன்றாகப் பயணித்தார்கள். அப்போது ஆடற்கோவைப் பற்றி அறிந்து, அவர் கவிதை ஒன்றைப் பெற்று, கணினியில் தட்டி அனுப்பினார். அப்போது அதனைத் தமிழ் சிஃபி இதழில் வெளியிட்டேன். அமரர் ஆடற்கோவின் நினைவாக, இங்கு அதனை மீண்டும் வெளியிடுகிறேன்
.
நிலை பெறுவாய் என்னுள் !
- ஆடற்கோ
இல்லை உண்டென்னுமிரு வழக்குக் கென்னுள்
இலக்காகிச் சிந்தையினைக் கலக்கும் தேவா
அல்லலுறும் போதுன்னை அழைத்தேன் நீங்கா(து)
அவை வருத்தும்போதுன்னைப் பழித்தேன்; பேசாக்
கல்லுக்குள் ளாயிருக்கும் தெய்வம் என்று
கடாவினேன் நினதிருப்பை மறுத்தேன் ஓட்டைச்
சல்லடை போல் அறிவெனக்குத் தந்து நீயோ
தண்ணீர் போல் தங்காமல் ஒழுகுகின்றாய்!
நிலையற்ற வெலாம் கண்டு மலைப்பதற்கே
நீ வைத்த விழிகளினால் நின்னைத் தேடி
அலைவுற்றேன் காண்பவற்றுள் ஆர்ந்திருக்கும்
அழியாமை தத்துவங்கண்டறிந்து கொண்டேன்
அலைபோலென் நெஞ்சத்துள் எழுந்தெழுந்தே
அகல்கின்றாய் தூயமனம்நான் பெறாத தாலோ
நிலையாக நினையென்னுள் கொள்ளத் தக்க
நெறியொன்று காட்டியருள் கூட்டுவாயே!

கவிஞர் ஆடற்கோவின் உடல் மறையலாம்; ஆயினும் செழுமையான கவிதைகளாலும் சிந்தனைகளாலும் அவர் காலம் கடந்து வாழ்வார். அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பர்கள், ஆடற்கோ மறைவுக்கான இரங்கல் செய்தியை அவர் மகன் கண்ணனின் muthukannan@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்
.

0 comments:

Post a Comment

Kindly post a comment.