Sunday, September 4, 2011

இரவுவிருந்து கொடுத்து இராஜதந்திரிகளை மடக்க முயன்ற சிறிலங்கா இந்தியாவும் கலந்து கொண்டது.



ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு கொழும்பில் இரவு விருந்து கொடுத்து வளைத்துப் போட முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா சார்பில் பங்கேற்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவே இந்த இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா அரசின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிஸ் ஆகியோரும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தனர்.

காலிமுகத்திடல் விடுதியில் நடந்த இந்த இரவு விருந்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
           http://www.puthinappalakai.com/

அதேவேளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதே சிறிலங்காவின் தற்போதைய இலக்கு என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ம்நாள் ஆரம்பமாகி 30ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியன தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்பதால், சிறிலங்கா அரசு அதனை முறியடிப்பதற்கான முயற்சிகளை கடந்தவாரம் உச்சவேகத்தில் முடுக்கி விட்டிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் மகிந்த சமரசிங்க தலைமையிலான சிறிலங்கா பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 8ம் நாள் கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.

அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, அமைச்சரவையின் சட்டஆலோசகர் மொகான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.

முன்னதாகவே, ஜெனிவா செல்லும் சிறிலங்கா பிரதிநிதிகள் குழு அங்கு ஐ.நா மற்றும் வெளிநாட்டு  இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது, வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளது...








.



0 comments:

Post a Comment

Kindly post a comment.