Thursday, September 8, 2011

ஸ்ரீலங்காவில் பொதுநலவாய அமைப்பு மாநாட்டை நடத்தக்கூடாது- மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை!

http://www.thinakkathir.com/?p=18147
Published on September 8, 2011-2:51 pm   ·   No Comments
ஸ்ரீலங்காவில் 2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதை அறிந்து தாம் கவலை அடைந்துள்ளதாகவும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்த கால மீறல்களையும் புரிந்த சிறிலங்கா அந்த அமைப்பின் தலைமை பதவியை பொறுப்பேற்பது பொதுநலவாய அமைப்பின் அடிப்படை விழுமியங்கள், மனித உரிமைகள்
மீது வைக்கப்பட்டுள்ள உறுதிப்பாடு ஆகியவற்றை உதாசீனம் செய்வதாகி விடும் என முன்னணி பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

ஆசிய மனித உரிமை அபிவிருத்தி அமைப்பு, ஆசிய சட்ட ஆய்வு நிலையம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பொதுநலவாய மனித உரிமை நிறுவனம், மனித உரிமை கண்காணிப்பகம், மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம், மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம், சட்ட சமூக நிதியம், சர்வதேச சிறுபான்மை இனங்களுக்கான உரிமைக்குழு, சிறிலங்காவில் நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு ஆகியன இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன.

கடிதத்தின் சாராம்சம் வருமாறு

’2013 இல் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவது பற்றி கலந்துரையாடல் இடம்பெறுவதை  அறிந்து நாம் பலத்த கவலை அடைந்துள்ளளோம்.   அவ்வாறான மாநாடு ஒன்று இலங்கையில் நடத்தப்படுவது பற்றி ஆராயப்பட்டு இவ்விடயம் 2011 இலிருந்து 2013க்கு இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் பற்றிய கவலை காரணமாக பின்தள்ளப்பட்டது.

யுத்த கால மீறல்கள் முடிந்தும் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள், ஜனநாயக அமைப்புகள், ஊடகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

இவற்றைக் கவனத்திற்கெடுத்துக் கொள்ளுமிடத்து அடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்துவது பொருத்தமற்றது என நாம் கருகிறோம். அப்படி நடத்த அனுமதி வழங்குவது பொதுநலவாய அமைப்பின் அடிப்படை விழுமியங்கள், மனித உரிமைகள் மீது வைக்கப்பட்டுள்ள உறுதிப்பாடு ஆகியவற்றை உதாசீனம் செய்வதாகி விடும்.
2013-2015 கால பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை ஹராரே பிரகடனத்தின் 20 ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் தருணத்தில் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் பற்றிய விடயங்களில் சந்தேகத்திற்குள்ளான ( மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட)  ஸ்ரீலங்காவிடம் ஒப்படைப்பது கவலை தருவதாக அமையும்.

ஆகவே 2013ஆம் ஆண்டிற்கு முன்னர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் கீழ் வருகின்ற குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுநலவாய அமைப்பின் அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு  ஸ்ரீலங்காவிற்கு காலக்கெடு வி;திக்கவேண்டும்.

1. ஸ்ரீலங்கா கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமைகள் சாசனங்கள் மற்றும் உடன்படிக்கைகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. ஸ்ரீலங்காவில் உள்ள எல்லா மக்களும் கௌரவத்துடனும் சமத்துவமாகவும் அரசமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிக்கக்கூடியதான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.

3. ஆட்சியின் மூன்று பிரிவுகளிலும் உள்ள சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தக்கூடியதாக அரசமைப்பு விதிகளை மீளளிக்க வேண்டும்
.
4. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற முக்கிய அரச அமைப்புக்களின் சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

5. மனித உரிமைகளுக்காக உழைக்கும் மனித உரிமைக் காவலர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவிவலாளர்கள் ஆகியோரை பாதுகாக்கக்கூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படத்த வேண்டும்.

6. 2009 இல் முடிவுற்ற மோதல் தொடர்பாக நாட்டில் உள்ள மனித உரிமைச்சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் ஆகியவற்றை மீறியதான குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமானதும் நம்பத்தகுந்ததுமான உள்ளுர் மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

7. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐநா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.

8. இந்நிபந்னைகள் நிறைவேற்றப்படுவது பற்றிய கண்காணிப்பை பொதுநலவாய அமைப்பின் அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு அரசாங்கத்துடனும் சிவில் சமூகத்துடனும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்
.
இந்த விடயங்களை சிறிலங்கா நிறைவேற்றும் பட்சத்திலேயே ஸ்ரீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கும் சிறிலங்காவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதற்கும் சம்மதிக்க வேண்டும். இல்லையேல் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தக்கூடாது என வலியுறுத்துகிறோம் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன.

முக்கிய குறிப்பு இந்த அமைப்புக்கள் வெளியிட்டிருக்கும் ஆங்கில மூல கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் தினக்கதிர் ஆசிரியர் குழு. இதை மிகுந்த நேர விரயங்களின் மத்தியிலேயே இம்மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. எனவே இதை மீள்பிரசுரம் செய்பவர்கள் கண்டிப்பாக நன்றி தினக்கதிர் என குறிப்பிடவும்.

(இந்த கடிதத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்)

நன்றி:- தினக் கதிர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.