Sunday, September 18, 2011

கூடங்குளம் அணு மின்நிலையம் ஏன் கூடாது?: போராடுபவர்களின் குரலில்..

http://www.4tamilmedia.com/special/news-review/626-2011-09-16-14-02-32

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில்

செப்.11ல் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதில் அப்பிரதேசவாசிகள், சூழல் நலன் விரும்பிகள், மாணவர், மக்கள் பிரதிநிதிகள் என 127 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நேற்றைய தினம் இப் போராட்டத்தினை மேற்கொள்வோருடன் தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், இந்தப் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து வருகிறது.

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோர் சிலரின் உடல்நிலை மிகமோசமாகியுள்ள இன்றைய நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனுமின்நிலையம் பாதுகாப்பாகவே அமைக்கப்பட்டு வருகிறது. ஆதலால் யாரும் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளமையானது, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துப் போராடிவரும் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேச வாசியும், சூற்றுச் சூழல் அக்கறையாளரும், வலைப்பதிவரும், தற்போது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 127 பேர்களில் ஒருவருமான கூடல் பாலாவுடன் தொடர்பு கொண்டபோது, இந்தப் போராட்டங்கள் கடந்த சில நாட்களில் தொடங்கப்பட்டது அல்ல. கூடங்குளம் அனுமின்நிலையம் அமைப்பது தொடர்பில் கடந்த ப வருடங்களாக இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டிவருகின்றார்கள். ஆனால் தமிழகத்தின் ஆட்சியாளர்களோ, மத்திய அரசோ மக்களின் எதிர்ப்பினைக் கண்டுகொள்வதாகவே இல்லை எனக் கவலையுடன் தெரிவிக்கின்றார்.

இந்தத் திட்டத்தை, இப்பிரதேச வாழ் மக்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்களையும், ஆதாரங்களையும், எடுத்துரைக்கும் அவர், தனது வலைப்பதிவிலும் பல்வேறு தலைப்புக்களில், இவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். தென்தமிழகத்திற்கும், சில பத்துக் கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள சிறிலங்காவுக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடியது கூடங்குளம் அனுமின்நிலையம் எனக் குறிப்பிடும் அவர், அதற்கான தரவுகளை பின்வருமாறு எழுதுகின்றார்.

ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார்.

இதனிடையே தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.

கூடங்குளம் அணுஉலை 2001ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மணலில் கடல் மண் கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்பாவு அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை .

இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

பொது மக்கள் நலன் பாதிக்கும் வகையில், அனுஉலைகள் எங்கு அமைக்கப்பட்டாலும், அது எதிர்க்கப்பட வேண்டும் எனபதற்கு முக்கியமான பத்துக் காரணங்களையும், அவர் தனது வலைப்பக்த்தில் பதிவு செய்துள்ளார்.

1 . அணு மின் நிலையங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது விபத்துதான். அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன .செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டோடு பிறக்கின்றன . ஜப்பான் அணு விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் இனி வரும் நாட்களில்தான் முழுமையாக தெரிய வரும் .விபத்துக்கள் இல்லாமல் அணு உலைகளை இயக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது .

2 .அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000 முதல் 5000 ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது .அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .

3 . அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும் .அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .

5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி )மிக அதிகம் .மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )

6 .அணு உலையின் ஆயுள் மிக குறைவு .30 வருடங்கள் மட்டுமே மின்சாரம் தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .

7 .விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .

8 . அணு உலைகளை விட ஆபத்து நிறைந்த இன்னொரு பெரிய ஆபத்து அணு கழிவுகள் .அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான் .மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம் .

9. எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்

10.ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான் .ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது .அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .

எனக் குறிப்பிட்டுள்ள அவர் உலக வெப்பமயமாதலுக்கு ஒரே தீர்வு அணுமின் நிலையங்கள்தான் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அணு உலைகள் தீர்வு அல்ல .சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு போடப்படும் அடித்தளம் என உறுதிபடத் தெரிவிக்கின்றார்.

கூடங்குளம் அணுமின்நிலையம் அமைப்பது தொடர்பில் சட்டரீதியான போராட்டங்களைத் தொடுப்பதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் குறைவாக இருப்பதனால், மக்கள் போராட்டம் ஒன்றே இதை நிறுத்துவதற்குச் சாத்தியப்படும் எனகின்ற இறுதி எண்ணப்பாட்டின் அடிப்படையிலேயே இப்போது இந்தப் போராட்டம் உறுதியோடு முன்னெடுக்கப்பட்டு வருவாதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு அரசியற்கட்சித் தலைவர்களும், அமைப்புக்களும், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும், ஆறுநாட்கள் கடந்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், அப்பிரதேசத்தில் காவல்துறை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நீண்டதூரத்துக்கு அப்பாலேயே வாகனப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

0 comments:

Post a Comment

Kindly post a comment.