Saturday, September 17, 2011

அம்னோ-மஇகா கூட்டணியால் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?



http://www.semparuthi.com/?p=463


United Malays National Organisation * (அம்னோ)

Malaysian Indian Congress (ம.இ.கா.)

கடந்த 54 ஆண்டுகளாக இந்திய மலேசியர்களை ஓரங்கட்டி அவர்களைக் கடைநிலை சமூகமாக்கிய அம்னோ-மஇகா அடங்கிய பாரிசானுக்கு எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய மலேசியர்கள் தங்களுடைய ஒரே தற்காப்பு ஆயுதமான “வாக்குகளை” தங்களை அழித்து நாசமாக்கிய ஆளும் கட்சிக்கு அளிக்கலாமா?

2008 மார்ச் 8 இல் இந்திய மலேசிய வாக்காளர்கள் அளிக்க மறுத்த 55 விழுக்காட்டு வாக்குகளால் ஆளும் கட்சி பாரிசான் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது. ஐந்து மாநிலங்களைப் பறிகொடுத்தது. மிதிக்கப்பட்ட புழுவும் துள்ளி எழும். குடிகாரர்கள் என்றும், நாய்க்குப் பிறந்தவர்கள் என்றும், குப்பைகளை அகற்றுவதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்றும், பிழைக்க வந்த கூலிகள் என்றும், திரும்பிப் போங்கள் என்றும் அம்னோ கூட்டத்தினரால் ஏளனம் செய்யப்பட்ட இந்திய மலேசிய சமூகத்தின் பெரும்பான்மையான வாக்காளர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற, சக்தி வாய்ந்த “வாக்கு” என்ற ஆயுதத்தைக் கொண்டு திருப்பி அடித்தனர்.

அம்னோகாரர்களுக்கும் அவர்களுக்கு வால் பிடித்து நின்று இந்திய மலேசியர்களின் மானம், மரியாதை, உரிமை ஆகியவற்றை பிச்சைக்கார பதவிகளுக்காக, சுயநலத்திற்காக அம்னோவிடம் அடகு வைத்த மஇகா மற்றும் இதர பாரிசான் பங்காளி கட்சிகளுக்கும் இந்திய மலேசிய வாக்காளர்கள் முதல் முறையாக பாடம் போதித்தனர்.

அடுத்த கட்டப் பாடத்திற்கு இந்திய மலேசியர்கள் தயாரா? பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் இந்திய மலேசியர்களை தங்கள் பக்கம் திருப்புவதற்காகப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், தோசை சுட்டுத் தருகிறார்கள், வடை போடுகிறார்கள், பிறந்த நாள், இறந்த நாள் வாழ்த்துகள் கூறுகிறார்கள்.

பிரதமர்துறை அமைச்சில் இந்தியப் பொம்மைகளை அடுக்கி வைக்கிறார்கள். முழுமையாக்கப்பட்ட ஓர் இந்திய அமைச்சர் கூட அங்கு கொலுவீற்றிருக்கிறார். இன்னொரு இந்தியப் பொம்மை அமைச்சர் கூறுகிறார்: கேட்டது 7, கிடைத்தது 9 என்று! ஆனால், சம உரிமை எங்கே? அக்கேள்விக்கான பதில் எங்கே?

இந்திய மலேசியர்கள் தொடர்ந்து ஏமாறத் தயாரா? அவர்களின் வாக்குகள் யாருக்கு? நேற்று ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய இந்திய வணிகர் மன்றம் (மீபா) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சூடான விவாதம் நடந்தது.

பிரதமர் நஜிப்புக்கு பாராட்டு

இந்திய மலேசிய சமூகம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அதில் சந்தேகமே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்த மஇகாவின் புதிய தலைவர் ஜி. பழனிவேல், இந்திய மலேசியர்களை ஓரங்கட்டிய பாரிசான் கட்சிக்கு இந்தியர்களின் ஆதரவு திரும்புகிறது. இந்திய மலேசியர்கள் பாரிசானுக்கு தங்களுடைய முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். அவர்களின் வாக்குகளை வண்டியிலேற்றி அம்னோவின் மடியில் கொட்டுவதற்காக மஇகா தேர்தல் இயந்திரத்தை முடிக்கி விட்டுகொண்டிருக்கிறார். ஏன்? ஓரங்கட்டப்பட்டவர்களை ஒன்றுமில்லாதவர்களாக்குவதற்கா? இக்கேள்வி மீபா கருத்தரங்கில் ஒலிக்க விவாதம் தொடங்கியது.

இந்திய மலேசியர்களின் மிகப் பெரிய பிரச்னை தலைமைத்துவம் பற்றியதாகும். அவர்கள் சிவில் சமூக அமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அரசியல் தலைமைத்துவ ஆதரவை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. “மாற்றம் நமது கையில் இருக்கிறது. நம்மிடம் அதற்கான சக்தி இருக்கிறது”, என்று கூறி இந்திய சமூகம் அரசியல் தலைமைத்துவம் என்ற தலைப்பிலான ஆய்வைத் தொடங்கி வைத்தார் அந்நிகழ்வின் தலைவரான ரேமன் நவரெட்னம்.

அடுத்து உரையாற்றிய யுகேஎம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டென்னிசன் ஜெயசூரியா எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் மிகுந்த சவால் மிக்கதாக இருக்கும். அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கடுமையான வியூகங்களைக் கையாண்டு வாக்காளர்களைக் கவர முயற்சிப்பர். அதில் அன்பளிப்புக் கூடைகளை வழங்குவது அடங்கும். ஆனால், அடுத்தத் தேர்தலில் அது பெருமளவுக்கு எடுபடாது என்றாரவர்.

இந்தியர்கள் 7.2 விழுக்காட்டினராக இருந்த போதிலும் பல்வேறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை 10 முதல் 20 விழுக்காடு வரையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் உதாரணங்களையும் வழங்கினார்.

54 நாடாளுமன்ற தொகுதிகளில் 10 விழுக்காட்டிற்கும் கூடுதலான இந்தியர்கள் இருக்கின்றனர். 125 சட்டமன்ற தொகுதிகளில் அதிகமான இந்தியர்கள் இருக்கின்றனர். உதாரணத்திற்கு புந்தோங்கில் 46.02 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்றார்.

ஆகவே, இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இந்தியர்களின் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அடுத்து, பிரதமர் நஜிப் இந்தியர்களின் மீது காட்டும் அக்கறையை டென்னிசன் வலியுறுத்திக் கூறினார். இது பாராட்டிற்குரியதாகும் என்ற அவர், “சீக்கிய, தெலுங்கு மற்றும் மலையாளி சமூகங்கள் மீது நஜிப் கொண்டிருக்கும் ஈடுபாட்டைச் சுட்டிக் காட்டிய டென்னிசன் பிரதமர் இங்கும் அங்கும் சென்று இந்தியர்களைச் சந்திக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

ஒவ்வொரு இந்தியரும் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறிய டென்னிசன், ஒரு மூன்றாவது சக்தியும் வலுவான அரசியல் தலைமைத்துவமும் தேவைப்படுகிறது என்று ரேமன் நவரட்னத்தின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினார்.

மக்கள் கூட்டணி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்தியர்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஓரங்கட்டப்பட்ட இந்தியர்கள்

பிரதமர் இந்தியர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், தோசை சுட்டுக் கொடுக்கலாம். ஆனால், அம்னோவின் கடந்த 54 ஆண்டுகால ஆட்சியில் இந்திய மலேசியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதனைப் பகிரங்கமாக கூறியவர் மஇகாவின் புதிய தலைவர் ஜி. பழனிவேல். “நாம் ஓரங்கட்டப்பட்ட சமூகம்…அதில் சந்தேகமே இல்லை” (“we are a marginalised community… there is no doubt about it”), என்று கருத்தரங்களில் பங்கேற்ற ஒருவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 54 ஆண்டுகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கான புள்ளிவிபரங்களைக் குறிப்பிட்டார்:

“1958 இல் பொருளாதாரத்தில் 28% இப்போது (2011) 1.1%, சொத்துடமையில் 24% இப்போது 7.9%, பட்டதாரிகள் 34% இப்போது 0.9%, வங்கிகள் 3, இப்போது 0, அரசாங்க ஊழியர்கள் 63% இப்போது 3.7%, நிலவுடமை 37% இப்போது 0.8%, தமிழ்ப்பள்ளிகள் 1028 இப்போது 523, அமைச்சர்கள் 16 பேரில் 2 இப்போது 33 இல் ஒன்று…” (சிவமுருகன் பாண்டியன், தமிழ் நேசன் 30.7.11)

இப்புள்ளிவிபரங்கள் வாசிக்கப்பட்டபோது கூட்டத்தில் முணுமுணுப்பு எழுந்தது.

இன்னும் பல புள்ளிவிபரங்கள் இருக்கின்றன என்றும், இந்தியர்களின் இந்தப் பாழடைந்த நிலைமை மஇகாவுக்கு தெரியாமல் இல்லை என்றும் கூறிய அவர், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மஇகா தயாரித்த ஓர் (இரகசிய) அறிக்கையில் இந்தியர்களின் பொருளாதார வலுமையின்மை, வேலை, கல்வி மற்றும் இதர பொருளாதார வாய்ப்புகள் இன்மை ஆகியவற்றோடு அவற்றால் அவர்களின் மனநிலை பாதிப்பு, தன்மான இழப்பு, மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவது போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் நிறுவனத்துறையில் இந்திய மலேசியர்களின் பங்கு கடந்த 25 ஆண்டுகளாக தேக்கம் கண்டுள்ளது, குறிப்பாக புதிய பொருளாதாரக் கொள்கை (NEP)அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திருந்து என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மஇகா அறிக்கையில் இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்படவில்லை என்றால் இந்தியர்கள் நிச்சயமாக கடைநிலை மக்களாக மாறுவர் (“if their problems are not arrested…, it is almost certain that Malaysian Indians will emerge as an underclass in Malaysia.”)

மலாய்க்காரர்கள் பெருமளவில் பங்கேற்ற, முன்னாள் பிரதமர் படாவி, அரசப் பேராசிரியர் உங்கு அசிஸ் மற்றும் சில மஇகா பிரதிநிதிகள் உட்பட, Majlis Perundingan Economi Negara 1991 இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளைக் கவனமாக ஆய்வு செய்து அவற்றைத் தீர்க்கும் நோக்கத்தோடு அரசாங்கத்திற்கு சில முக்கியமான பரிந்துரைகளைச் செய்திருந்தது. அவற்றில் ஒன்று பூமிபுத்ராக்களுக்கு அமலாக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்புச் செயல் திட்டத்தைப் (Affirmative Action)போன்று இந்தியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதாகும். அந்தப் பரிந்துரை குறித்து மஇகா என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் வினவப்பட்டது.

சாவதற்கு கோட்டா இல்லை, உரிமைக்கு கோட்டா ஏன்?

இந்திய மலேசியர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்ட பாரிசான் கூட்டணியை இந்திய சமூகம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று அக்கூட்டணியில் ஓர் அங்கமான மஇகா எப்படிக் கோர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளின் இன்றையப் பரிதாப நிலைக்கு அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைதான் காரணம். சீன, தமிழ்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும். அதுதான் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்”. அக்குறிக்கோளை அடைய தாய்மொழிப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் இறுக்கிப் பிடித்து வருகிறது என்று கூறிய அவர், மலேசிய ஐந்து ஆண்டு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய புள்ளிவிபரங்களைக் கூறினார்.

மலாய், சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்:

6 ஆவது திட்டம் (1991-1995)-மலாய்ப்பள்ளி 89.72%; சீனப்பள்ளி 8.14%; தமிழ்ப்பள்ளி 2.14%.

7 ஆவது திட்டம் (1996-2000)-மலாய்ப்பள்ளி 96.54%; சீனப்பள்ளி 2.44%; தமிழ்ப்பள்ளி 1.02%.

8 ஆவது திட்டம் (2001-2005)-மலாய்ப்பள்ளி 96.10%; சீனப்பள்ளி 2.73%; தமிழ்ப்பள்ளி 1.17%.

9 ஆவது திட்டம் (2006-2010)-மலாய்ப்பள்ளி 95.06%; சீனப்பள்ளி 3.60%; தமிழ்ப்பள்ளி 1.34%.

இத்தகவலை அளித்த அவர், ஏன் இந்தப் பாகுபாடு என்று வினவினார்.

இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இந்நாட்டு குடிமக்கள். இந்நாட்டை தங்களுடைய உயிரைக் கொடுத்து காக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் கட்டத்தில் இவர்கள் அனைவருக்கும் ஆயுதப் படைகளில் இணைந்து, தேவைப்பட்டால், நாட்டிற்காக மடிய வேண்டிய கடப்பாடு உண்டு. இதிலிருந்து எவருக்கும் விதி விலக்கு கிடையாது.

”கடமையை ஆற்றுவதற்கு, மடிவதற்குப் பாகுபாடு இல்லை. 100 விழுக்காடு. வாழ்வதற்கு, உரிமைக்குப் பாகுபாடு. 7 விழுக்காடு! ஏன்?”, என்றரவர் வினவினார்.

பணம் பூமிபுத்ராக்களுக்குத்தான்

அடுத்து, இந்திய சமூகமும் வாணிப தொடர்பு என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதிப் குமார் “அரசியல்” என்ற சொல்லுக்கு தத்துவ ரீதியில் விளக்கம் அளித்து வாணிப சமூகத்திற்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து விளக்கம் அளித்ததோடு வாணிப சமூகத்தினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதற்கான நெஞ்சுரம் வேண்டும் என்றார்.

அத்துடன், இந்நாட்டில் இன அடிப்படையிலான அரசியல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்காற்றிய மீபா தலைவர் பி. சிவகுமார் 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார்.

ஒரு சுற்றுப்பயண வழிகாட்டி உரிமம் பெறுவதற்கு செய்து கொண்ட மனுவுக்கு அரசாங்கத்திடமிருந்து ஓராண்டிற்குப் பின்னர் எவ்விதக் காரணமும் கூறாமல் “டூக்காசித்தா” என்ற பதில் கிடைத்தது என்றாரவர்.

“எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டோம். எல்லாம் நெகட்டிவ்தான்”, என்று வேதனை நிறைந்த குரலில் கூறினார்.

டெனிசனின் தலைமையில் சிறப்பு இந்திய செயல் குழு இயங்குகிறது. இறுதியில் அங்கும் நெகட்டிவ்தான் என்று அவர் மேலும் கூறினார்.

கொள்கை அளவில் டெண்டர் கொள்கை அனைத்து இனங்களுக்கும் இடம் அளிக்கிறது. ஆனால், பணம் பூமிபுத்ராகளுக்கு மட்டுமே என்றாரவர்.

சிலாங்கூர் மாநில நடவடிக்கைகள், குறிப்பாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கோயில்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அளித்து வரும் உதவிகள் பற்றி மனநிறைவு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்கு அளிக்கும் பல்வித பயிற்சிகள் தொடர்வதை சேவியர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியர்களுக்கு விவசாய நிலங்கள் வழங்குவதற்கு சேவியர் ஆவன செய்வார் என தாம் நம்புவதாக மீபா தலைவர் சிவகுமார் கூறினார்.

அடுத்து பேசிய இந்திய கட்டட நிர்மாணிப்பாளர்கள் மன்றத்தின் தலைவர் வி.குமரேசன் கடந்த 54 ஆண்டுகளில் இந்தியர்கள் எவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் பின்தள்ளப்பட்டனர் என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் மீது தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலை மாற வேண்டும் என்றார்.

அவர் சார்ந்த தொழில் பற்றிய கருத்துரைத்த குமரேசன், “வாய்ப்புகள் மோசமாகிக் கொண்டே போகின்றன என்றார்.

எங்களிடம் திறமை வாய்ந்த, பயிற்சி பெற்ற, தொழிலியனர் (professionals) நிறைய இருக்கின்றனர். ஆனால், வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்திய “எ” பிரிவு குத்தகையாளர்களுக்கு வாய்ப்பு இல்லை. வேறு வழியில்லாமல் துணைக் குத்தகையாளர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி தேவைப்படுகிறது”, என்றும் குமரேசன் கூறினார்.

ஐந்து இலட்சம் ஐந்து கோடியாக உயர்ந்தது

இந்திய சமூகமும் மாநில அரசும் என்ற தலைப்பில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் சிலாங்கூர் மாநில பக்கத்தான் கூட்டணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் ஒரு கோடியே இருபது இலட்சம் ரிங்கிட்டை மானியமாக வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 54 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக எதுவும் செய்யாமல் இருந்து வந்த பாரிசான் மாநில அரசு இப்போது போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். முன்பு சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரிமஐந்து இலட்சமே அளித்த வந்த மத்திய அரசு இப்போது ஐந்து கோடியாக உயர்த்தியுள்ளது என்று புன்னகையுடன் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களுக்கும் மாநில அரசு அளித்த நிதியைப் பட்டியலிட்ட அவர், கடந்த 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்து கோயில்களுக்கு மொத்தம் 54 இலட்சம் ரிங்கிட்டுக்கு மேலாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதுவரையில் 60 இந்து கோயில்களுக்கும், 40 சீன கோயில்களுக்கும், 12 கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும், 4 சீக்கிய ஆலயங்களுக்கும் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த ஈராண்டுகளில் 15 தமிழ்ப்பள்ளிகளில் கணினிக் கூடங்கள் அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு இலவசத் தண்ணீர் விநியோகம், சிறு தொழில்களுக்கு நிதி உதவி, முதியோர்களுக்கு நிதி உதவி, பிறந்த குழைந்தகளின் பெயரில் வங்கியில் வைப்புத் தொகை கணக்கு வைத்தல் போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அமலாக்கப்பட்டிருப்பதை அவர் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓர் அறநிதி வாரியம் அமைக்கப்பட வேண்டும் கருத்தரங்கில் பலர் கூறிய ஆலோசனையைக் கவனத்தில் கொள்வதாகவும் அவர் கூறினார்.

அன்பளிப்புக் கூடைகள் வழங்குவது பற்றி கருத்துரைத்த சேவியர், மக்கள் அதனை எதிர்பார்க்கின்றனர் என்றார். மிகச் சிறிய தொகையை, ரிம2 ஐக்கூட அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

இந்தியர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவதாகவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் பங்கு

இந்திய சமூகமும் சிவில் சமுதாயம் என்ற தலைப்பில் பேசிய சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்,சிலாங்கூர் மாநில வாழ் மக்கள் பற்றிய முழு விபரத்தையும் துல்லியமாக தெரிவித்தார்.

எந்த ஒரு சட்ட மற்றும் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மலாய்க்காரர்களின் வாக்குகள் இன்றியமையாதவை என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், வேட்பாளர்களின் இறுதி வெற்றியை நிர்ணயிப்பதில் இந்திய வாக்காளர்கள் முக்கியமானவர்களாக பல தொகுதிகளில் இருக்கின்றனர் என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் 80 விழுக்காட்டு இந்தியர்கள் பக்கத்தானுக்கு வாக்களித்ததாக கூறப்படுவது சரியானதல்ல என்றார். 55 விழுக்காட்டினர்தான் பக்கத்தானுக்கு வாக்களித்தனர் என்று அவர் விளக்கம் அளித்தார். ஆகவே, இந்திய வாக்காளர்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று ஆறுமுகம் எச்சரிக்கை விடுத்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஊராட்சி மன்ற அளவில் சில திட்டங்களை நிறைவேற்றுவதில் தாம் எதிர்கொண்ட சிரமங்களை அவர் விவரித்தார். அவர் கற்றுக்கொண்ட பாடம்: விடாப்பிடியாக நின்றால், வெற்றி கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் போராட வேண்டுமா?

அடுத்து உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அரசுக் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மாணவர்களை கரையேற்றுவதில் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை விவரித்தார்.

தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பற்றிய பல்வேறு புள்ளிவிபரங்களை அவர் அளித்தார்.

மாணவர்களின் ஒவ்வொரு தேவைக்கும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. தொடக்கப்பள்ளியில் சேரும் 35,000 மாணவர்களில் 5,000 பேர் மட்டுமே ஐந்தாம் படிவத்தை அடைகின்றனர். அதில் 1,500 மாணவர்கள்தான் பல்கலைக்கழகத்தை எட்டுகின்றனர் என்றாரவர். இவர்களுக்குத் தேவைப்படும் நிதி உதவிக்கும் போராட வேண்டியுள்ளது.

இந்நிலை மாற வேண்டும் என்ற அவர், தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் பெருத்த பாகுபாடு இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் அது பற்றிய புள்ளிவிபரத்தை வழங்கினார்:

இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.55 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாகுபாடு என்று அவர் வினவினார்.

புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசாங்கம் 10 புதிய சீனமொழிப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதைப் பட்டியலிட்டிருக்கும் குறிப்பேட்டை காட்டி ஏன் இந்த நிலை என்று கேட்டார்.

இந்த நிலை மாற வேண்டும். இதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அம்னோ மாறவே மாறாது என்று கூறி அம்னோவுடனான தமது 32 ஆண்டுகால அனுபவத்தை தஸ்லிம் இப்ராகிம் விவரித்தார்.

அவரது அனுபவங்களில் ஒன்று: ஒரு வகுப்பறையை நாமே கட்டினால் ரிம50,000தான் ஆகும். அதே வகுப்பறையை அரசாங்கம் கட்டினால் ரிம1 இலட்சத்திற்கு மேலாகும் என்றாரவர்.

பேசாமடந்தை இந்திய பிரதிநிதிகள்!

அடுத்து இந்திய சமூகமும் மத்திய அரசும் என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பேசிய அமைச்சரவை சிறப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என். சிவ சுப்ரமணியம் இந்திய பிரதிநிதிகளின் திறன் குறித்து கேள்வி எழுப்பினார். சமூகத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்திடம் இந்தியர்கள் பிரச்னைகள் குறித்து எதுவுமே பேசுவது இல்லை என்று அடித்துக் கூறினார்.

இந்தியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பதிவுப் பத்திரங்களிலிருந்து மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை பற்றி நாம் பேச வேண்டும். படித்தவர்கள் மற்றும் பேசத் தெரிந்தவர்களைத் தேர்வு செய்யப்படுவதற்கான காலம் வந்து விட்டது என்றாரவர்.

நமது மாணவர்களில் பலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுவதற்கு காரணம் சமசீரான வசதிகள் கொண்ட பள்ளிகள் இல்லாததுதான் என்று 1973 ஆம் ஆண்டில் அரசாங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது சிவசுப்ரமணியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், பிரதமர் இலாகாவில் இயங்கும் குடியியல் பயிற்சி பிரிவினர் (BTN) நடத்தும் இனவாதப் பயிற்சிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் இந்திய மாணவர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் சுற்றித் திரிகின்றனர் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் இலாக அமைச்சர் கோ சூ கூனின் செயலாளர் இவான்பால் சிங் அரசாங்கம் இந்தியர்களுக்காக ஒதுக்கியுள்ள நிதிகள் பற்றியும், இதர வசதிகள் பற்றியும் பேசினார். பாரிசான் கூட்டணி பங்காளிக் கட்சிகளில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் கட்சி மஇகாதான் என்று அவர் மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

“ஆம். இந்தியர்களை ஓரங்கட்டியது சிறந்த சேவைதான்”, என்று இவான்பாலிடம் தெரிவிக்கப்பட்டது.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில அரசு நிலம் வழங்கி மூன்று ஆண்டுகளாகி விட்டது. கட்டடம் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரி இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு அவரால் தீர்வு காண முடியுமா என்று இவான்பாலிடம் பசுபதி வினவினார்.

இக்கேள்வியையும் இதர கோரிக்கைகளையும் சம்பந்தப்பட இலாகாகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இவான்பால் பதில் அளித்தார்.

தொகுதி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு எங்கே?

இந்திய சமூகமும் 13 ஆவது பொதுத் தேர்தலுக்கான செயல்திட்டங்களும் என்ற தலைப்பில் பேராசியர் டெரன்ஸ் கோமஸும், சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஜெயகுமாரும் அவர்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மைக்கல் விளக்கினார். எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் அவரது தொகுதியின் மேம்பாட்டிற்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்கினார். அது குறித்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது ஆதரவாளர்களின் உதவியில் ஆற்றைக் கடப்பதற்காக ஒரு பாலம் கட்டியிருப்பதை அவர் தெரிவித்தார்.

மக்கள் சக்தி எதையும் நகர்த்தும் என்றாரவர்.

மலேசிய சோசலிசக் கட்சி உறுப்பினரான மைக்கல் ஜெயக்குமார் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தாங்கள் அளித்த வாக்குறுதிப்படி தங்களுடைய சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவித்து வருவதாக கூறினார்.

பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை பிரதமரிடம் அளிப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் தமது சொத்து விபரங்களை யாரிடம் தெரிவிக்கிறார் என்று கேட்டதற்கு, மைக்கல் புன்னகையைப் பதிலாக அளித்தார்.

இறுதியில், ஜோகூர் மாநில பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவரான சுப்ரமணியம் அம்மாநில அரசுத் துறையில் இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அசோகனிடம் கடந்த ஆண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் புகார் செய்யப்பட்டதாகவும், ஆனால் இன்றுவரையில் பதில் ஏதும் இல்லை என்றார். இதனையும் சம்பந்தப்பட்ட இலாகாவின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக இவான்பால் சிங் கூறினார்.

இத்துடன் முடிவுற்ற இக்கருத்தரங்கு மீதான அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தயார் செய்யப்பட்டு பாரிசான் மற்றும் இதர கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்று டென்னிசன் ஜெயசூரியா அறிவித்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.