Saturday, September 17, 2011

மலாய்-தமிழ்-சீனம் ஏனிந்த வேறுபாடு மலேசியாவில் ?


கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய இந்திய வணிகர் மன்றம் (மீபா) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அரசுக் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மாணவர்களை கரையேற்றுவதில் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை விவரித்தார்.

தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பற்றிய பல்வேறு புள்ளிவிபரங்களை அவர் அளித்தார்.

மாணவர்களின் ஒவ்வொரு தேவைக்கும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. தொடக்கப்பள்ளியில் சேரும் 35,000 மாணவர்களில் 5,000 பேர் மட்டுமே ஐந்தாம் படிவத்தை அடைகின்றனர். அதில் 1,500 மாணவர்கள்தான் பல்கலைக்கழகத்தை எட்டுகின்றனர் என்றாரவர். இவர்களுக்குத் தேவைப்படும் நிதி உதவிக்கும் போராட வேண்டியுள்ளது.

இந்நிலை மாற வேண்டும் என்ற அவர், தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் பெருத்த பாகுபாடு இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் அது பற்றிய புள்ளிவிபரத்தை வழங்கினார்:

இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.55 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாகுபாடு என்று அவர் வினவினார்.

புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசாங்கம் 10 புதிய சீனமொழிப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதைப் பட்டியலிட்டிருக்கும் குறிப்பேட்டை காட்டி ஏன் இந்த நிலை என்று கேட்டார்.

இந்த நிலை மாற வேண்டும். இதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அம்னோ மாறவே மாறாது என்று கூறி அம்னோவுடனான தமது 32 ஆண்டுகால அனுபவத்தை தஸ்லிம் இப்ராகிம் விவரித்தார்.

அவரது அனுபவங்களில் ஒன்று: ஒரு வகுப்பறையை நாமே கட்டினால் ரிம 50,000தான் ஆகும். அதே வகுப்பறையை அரசாங்கம் கட்டினால் ரிம1 இலட்சத்திற்கு மேலாகும் என்றாரவர்.

http://tamilfoundation.org/tamil/?p=213


0 comments:

Post a Comment

Kindly post a comment.