Sunday, September 4, 2011

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளும், தகுதியின்மைகளும்

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாகி உள்ளன. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. சுயேச்சையாகப் போட்டியிடவும் பலர் தயாராகி வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை கட்சிகளின் பலம் ஒரு புறம் இருப்பினும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பலமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும்.இதனாலேயே பொதுத் தேர்தலைவிட உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சைகள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். 
 
வேட்பாளருக்கான தகுதிகள்: போட்டியிட விரும்புபவரின் பெயர் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.* மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களாக அல்லாது இருக்க வேண்டும்.
 
வேட்பாளர்களின் தகுதியின்மை:ஓர் அரசு ஊழியர் கையூட்டு (அ) அரசுக்கு எதிரான செயல்கள் போன்ற காரணங்களினால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு எந்த ஓர் உள்ளாட்சி அமைப்பிலும் பதவி வகிக்கவும் பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் உடையவராவார்.
 
குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தால் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டவர், தீர்ப்பு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு ஆண்டு கால அளவிற்கு போட்டியிட தகுதியற்றவர். 
 
 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37-ன் உட்பிரிவு (1)-ல் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தால் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின், அந்தத் தண்டனை அபராதமாக மட்டுமிருப்பின் - குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்துக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். 
 
 
அதைப்போல அந்தத் தண்டனை தீர்ப்பு சிறைவாசமாக இருப்பின் - தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத்தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்தும் ஆறு ஆண்டு காலங்களுக்கும் போட்டியிடத் தகுதியற்றவராவார்.
 
ஒரு நபர் ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை அடைந்திருந்தாலோ அல்லது ஊராட்சிகளைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றிருந்தாலோ மற்றும் நகராட்சியைப் பொறுத்தவரை ஆறு மாத காலங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை பெற்றிருந்தாலோ அந்த நபர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்ட நாளிலிருந்து உறுப்பினர் தேர்தலுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு அந்த நபர் விடுவிப்பு அடைந்த நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டு காலத்துக்கு தகுதி நீக்கம் உடையவராவார். 
 
பிற தகுதி நீக்கங்கள் ஆரோக்கியக் குறைவான மனநிலை, காதுகேளாத, பேசாத நிலை கொண்டவராயிருப்பவர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 
திவாலானவரெனத் தீர்மானிக்கப்பட்டவர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 
நிறுவனமொன்றின் (இயக்குநர் அல்லாத பிற) பங்குதாரர் நீங்கலாக, ஊராட்சி எதற்காகவும் அதனுடன் செய்யப்பட்டு இப்போது இருந்து வருகிற ஒப்பந்தம் எதிலும் அல்லது அதற்காகச் செய்யப்பட்டு வருகின்ற பணி எதிலும் உரிமை நலன் கொண்டவராக இருப்பாராயின் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
 
இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்தவராக இல்லாதிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 
உள்ளாட்சி அமைப்பிற்கு எந்த வகையேனும் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியவராயிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 
அந்த ஊராட்சியின் சார்பிலான ஊதியம் பெறும் சட்டத் தொழிலாற்றுபவராகவோ, அல்லது எந்த ஒரு ஊராட்சிக்கு, உள்ளாட்சிக்கு எதிரான சட்டத் தொழிலாற்றுபவராகவோ பணியமர்த்தப்பட்டிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
 
வாக்காளர்கள் தகுதியின்மை:ஆரோக்கியக் குறைவான மனநிலை உள்ளவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.* நீதிமன்றத்தால் தேர்தல் குற்றங்களில் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.
 
ஆரோக்கியக் குறைவான  மனநிலை உள்ளவருக்கு தேர்தலில் நிற்கவும் , வக்களிக்கவும்  உரிமை  கிடையாது.
 
அதேபோன்று  மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் தெர்தலில்  நிற்கவும்,  வாக்களிக்கவும் அனுமதி கிடையாது  என்று சட்டம்  கொண்டு வரவேண்டும்
.
மேலும் ஒரு பதவியில் இரண்டு தடவைகளுக்குமேல்  தேர்தலில்  போட்டியிடக்  கூடாது என்றும்  சட்டம்  கொண்டுவரப்பட வேண்டும்.
 
ஊழலைத் தடுத்திட  இயக்கம்  நடத்துவோர் மற்றும்  சமூக நல ஆர்வலர்கள் ,தேர்தலில் நிற்போர்  மேற்கண்ட அரசின்  விதிமுறைகளை ஏதேனும் ஒரு வகையில் மீறியிருப்பாரே  ஆயின்,  தேர்தலின்  போதே நடவடிக்கை எடுத்து தேர்தலில்  போட்டி இடுவதைத் தடுக்க  வேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.