Saturday, September 3, 2011

திருக்கோவிலூரில் கொடி கட்டிப் பறக்கும் திருட்டு மணல் குவாரிகள்


திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் அரசு மணல் குவாரிகளை விட, திருட்டு மணல் குவாரிகள் கொடிகட்டி பறக்கின்றன.மணல் குவாரி என்ற பெயரில் பாலைவனமாக மாறி கட்டாந்தரையாகக் காணப்படும் தென்பெண்ணை ஆற்றை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலூர் நகரத்தையொட்டிச் செல்லும் தென்பெண்ணையாற்றின் பல பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாலும், அரசு குவாரிகள் விதிமுறைகளுக்கு மாறாகவும், முறைகேடாகவும் இயங்குவதாலும், மணல் வளம் குன்றி தென்பெண்ணையாறு பொட்டல் காடாக காட்சியளிக்க ஆரம்பித்து விட்டது. திருக்கோவிலூரை அடுத்த மாரங்கியூர், அன்ராயநல்லூர், டி.புதுப்பாளையம், சு.அந்திலி உள்பட பல்வேறு பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மணல் எடுத்துச் செல்ல வரும் லாரிகளால் குவாரிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. மேற்கண்ட குவாரிகளில் ஒருநாள் மட்டுமில்லாமல் இரண்டு நாள்கள் கூட காத்திருந்து மணல் எடுத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது. இதனால் சிலர் அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் எடுத்து வந்து அருகில் உள்ள கிராமங்களில் தெருக்களிலும், பொது இடங்களிலும், விவசாய நிலங்களிலும் கொட்டி வைத்து பல மடங்கு விலை வைத்து விற்கின்றனர். 

அரசு குவாரிகளில் நாள்கணக்கில் காத்திருப்பதைவிட இதுபோன்ற இடங்களில் வாங்கச் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால் சில லாரிகள் அங்கு சென்று கூடுதல் விலை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர்.மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. இவர்கள் திருக்கோவிலூர் மேம்பாலத்துக்கு கீழ் தொடர்ந்து அதிகளவில் மணல் எடுத்து வருவதால் மிக விரைவில் மேம்பாலத்துக்கு ஆபத்து நேரிட அதிகம் வாய்ப்புள்ளது.
இயற்கை வளத்தைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை தொடர்ந்து தவறி வருகிறது. வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸôர் தங்கள் கடமையை சரிவர செய்வது கிடையாது. இதனால் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்துகின்றனர்
அள்ளுவதற்கு இனியும் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு கட்டாந்தரையாக மாறி காணப்படுகின்ற தென்பெண்ணை ஆற்றை பாதுக்காக்க, விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படும் அரசு மணல் குவாரி மற்றும் கொடிகட்டி பறக்கும் திருட்டு மணல் குவாரிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்கு இனியாவது தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். 
மேம்பாலத்தின் கீழ் விதிமுறைகளுக்கு மாறாக மணல் எடுக்கும் மாட்டு வண்டித் தொழிலாளி. (உள்படம்) மணல் கொள்ளையால் ஆபத்தை எதிர்நோக்கும் மேம்பாலம்.

தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
எழுதியவர்:முனைவர்.பழ.கோமதி நாயகம் 

 தமிழ்க்குலம்,33நரசிம்மபுரம்.மயிலை
சென்னை600 004
2008-ல் வெளியிட்ட புத்தகத்தினை இன்றையத் தினமணி நினைவூட்டியது.ஒவொரு சனிக்கிழமையும் ஆறாம் பக்கம் சுற்றுச்  சூழல்  ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய பக்கம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.