Saturday, September 3, 2011

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பினை இலவசமாக்கு!

அரசு கேபிள் டிவி நிறுவனம் : முதல் ஒளிபரப்பு சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர் 

 


தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் முதல் ஒளிபரப்பு சேவையை நேற்று நண்பகல், வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். வேலூர் மையத்தில் ஒளிபரப்பாகிய இம்முதல் சேவை பின்னர் தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்ப தொடங்கப்பட்டது.
அரசு கேபிள் டிவி கார்பரேஷன் பற்றிய அறிமுக நிகழ்ச்சி 30 வினாடிகளுக்கு ஒளிபரப்பாகியதை தொடர்ந்து, தமிழக அரசு சாதனை பற்றிய செய்தி தொகுப்பு 30 நிமிடங்கள் ஒளிபரப்பட்டது.

பின்னர் இந்நிகழ்வில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் காரணமாக பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஒரு குடும்பத்தினரே இந்த தொழிலில் ஏகபோகம் அனுபவித்து அதிக லாபம் பெற்று வருகின்றனர்.

எனவே தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோகத்தை தடுத்து அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு கொடுக்கப்படும் என்றும் தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டு தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழக மக்களுக்கு குறைந்த செலவில்  நிறைந்த சேவையை வழங்கவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதரர்களிடமிருந்து மாதச்சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். எனவே கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்த சேவை மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான மாத சந்தாவான ரூ.70-ல் இருந்து, ஓர் இணைப்புக்கு ரூ.20 வீதம் கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்.கட்டண சேனல்கள் உள்பட மொத்தம் 90 சேனல்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இலவச சேனல்கள் மட்டும் ஒளிபரப்பாகும். அதனைத் தொடர்ந்து கட்டண சேனல்களும் அரசு கேபிள் சேவையில் கிடைக்கும்.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2007-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டது.

2008 ஜூலையில் ஒளிபரப்பு தொடங்கியது. எனினும், எதிர்பார்த்த அளவில் செயல்பாடு அமையவில்லை.இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கும் வகையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மீண்டும் தொடங்கப்படும் என்று தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தார்.முதல்வராகப் பொறுப்பேற்ற பின் அரசு கேபிள் டி.வி. சேவை மீண்டும் தொடங்குவது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ஏற்கெனவே தஞ்சாவூர், நெல்லை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எஸ்.ஓ. மையங்கள் உள்ளன. மற்ற 27 மாவட்டங்களில் தனியார் எம்.எஸ்.ஓ.க்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக அனலாக் தொழில்நுட்பத்தில் கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் இணைந்துள்ளனர். இந்த ஆபரேட்டர்கள் மூலம் 1 கோடியே 45 லட்சம் வீடுகளுக்கு கேபிள் டி.வி. சேவையை அரசு வழங்கும் என தெரிவித்தார்.

டிவிஐக்  கற்றறிந்தோர்  அனைவரும்  டெலிவிஷம்  என்றே  அழைக்கின்றனர். காசு  கொடுத்துத் தலைவலியையும்,  மன உளச்சலையும், புத்திக்  கோளாறுகளையும்  வீட்டுக்குள்  கொண்டுவந்து  சேர்ப்பதுதான்  டெலிவிஷங்கள் என்று அழைக்கப்பட வேண்டிய டெலிவிஷன்பெட்டிகள்.  டெலிவிஷன்கள் வைத்துக் கொள்வதற்கு லைசென்ஸ்  தேவை  இல்லை  என்பது போல், டெலிவிஷன்  பார்ப்பதற்கு முற்றிலுமாகக்  கட்டணம்  எதுவுமே இருக்கக்  கூடாது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.