Monday, September 12, 2011

மகாத்மா-மார்க்ஸ்-கம்பர்-அரசு உதிர்கிறது-

                                       
மகாத்மாவும்  மார்க்ஸும்  கம்பரும்   வார்த்தைகளில்தான்  வேறுபடுகிறார்கள்-அர்த்தத்தில் அல்ல

எந்த தேசத்தில் ஓர்  இளம் பெண்,  நடு இரவில்  பூரண  அலங்காரத்துடன்  நகைகளை  அணிந்து  நடமாடுகிறாளோ  அதுதான்  ராம  ராஜ்யம் என்றார்  மகாத்மா  காந்தி. இதில்  பல  அர்த்தங்கள்  அடங்கியுள்ளன.

சாதரணப் பெண்ணுக்குக்கூட  நகைகள்  உள்ள அளவுக்கு,  சமூக வளம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவள் நகைகளுடன்  நடமாடும்போது  களவாடிப் பறிப்பது  ஒரு புறம்  இருக்கட்டும்,  யாசகமாகவோ  இரவலாகவோ கூட  யாரும்  அந்த  நகைகளை அடைய முற்பட  மாட்டார்கள்

”வன்மை இல்லை; ஓர்  வறுமை  இன்மையால்” என்பார் கம்பர். இதனால்  கொள்வாரும்  இல்லை; கொடுப்பாரும் இல்லை. (ஜீவா  மேடைதோறும்  முழங்கிய  கம்பரின்  பாடல்.)

இப்படிப்பட்ட சூழலில்  அவைகளைக்  கண்காணிக்கவோ-  காபந்து  பண்ணவோ ஓர் அரசு  அங்கே  தேவைப்படவில்லை.

மார்க்ஸ்  வழியில் சிந்திக்கலாம்.  எல்லோரும்  எல்லாமும்  பெற்று  விட்டனர்.  சமூகத்தின்  அனைத்து  வளங்களும்  சமூகமயம்  ஆக்கப்பட்டுவிட்டன. வீட்டை  விட்டு  வெளியே செல்லும்பொழுது  பூட்டுப்  போட வேண்டிய  அவசியமே  இல்லை. காவல்  துறைக்கும்,  நீதித்  துறைக்கும்,  சிறைச்சாலைக்கும்  என்ன  வேலை?

சமூகத்தின்  நிதி ஆதாரத்தைத்  திரட்டி சமூக  மேம்பாட்டுத் திட்டங்களுக்குப். பயன்படுத்துவதே  அரசின் செயல்பாடாக  அமையும்.

அங்கங்கே சிறிய  சிறிய  கம்யூன்கள்  அமையும்.  அந்தந்தப்  பகுதி மக்கள்  தங்கள்  தேவைகளைத்  தாங்களே  பூர்த்தி  செய்து கொள்வார்கள். பசி, பஞம்,  பட்டினி,  வேலை  இன்மை  எதுவுமே  இருக்காது.  இது ஓர்  உச்சக்  கட்ட  சமுதாயம்.  இங்கே  அரசு  என்ற  நிர்வாக  அமைப்புக்கே  வேலை  இருக்காது.

எளிய  நடைமுறை  உதாரணம். வசிக்கும்  பகுதியில்  திருடர்கள்  நடமாட்டம் அதிகரிக்கும்பொழுது,  அப்பகுதிவாழ்  மக்களே  இரவுப்  பாதுகாப்புப்  பணியில்  ஈடுபட்டு  திருட்டைத்  தவிர்த்துக்  கொள்வது.  அப்பொழுது  காவல்துறையின்  தேவை இல்லாமற்  போகின்றது..

சகலத்தையும்  மக்களின் பொது  அமைப்பான  கம்யூன்களே  நிர்வகித்துக் கொள்ளும்.  இதைத்தான்  அரசு  என்பது  தானாகவே உதிரும்  என்றார், கார்ல் மார்க்ஸ்.

ஆனால்,  இதற்கு  நீண்ட  காலம்  ஆகலாம். பொதுவுடைமைத்  தலைவர்களே  நீண்டகாலம்  ஆகத்தான்  செய்யும்  என்று பேட்டி  கொடுக்கும்போது  சாமன்யன்  நான் என்ன  செய்ய  முடியும்?

(எஸ்.முரளி 12-09-2011  ஜனசக்தியில்  எழுதியுள்ள  வினோதமான  முரண்பாடு என்ற  கட்டுரையின்  உதவியோடு  எழுதியது.) 

0 comments:

Post a Comment

Kindly post a comment.