Monday, September 12, 2011

நல்லகண்ணுவின் ஓர் அனுபவமும் நல்லகண்ணுவுடன் ஒருநாள் பயண அனுபவமும்



பத்து தலைமுறைக்குச் சொத்து வேண்டும்; அதைப்  பத்திரமாக வைத்துக் கொள்ள அதிகாரம் வேண்டும் என்று ஆலாய்ப் பறப்பவர்களைப் பார்க்கிறோம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதர் நல்லகண்ணு. பெயர் நடுவில் யாராவது க் சேர்க்கும்போது அய்யோ வலிக்குமே என்று எண்ணத் தூண்டும் எளிமையின் உருவகம். எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்த அந்த 86 வயதுப் போராளிக்கு வெள்ளிக்கிழமை நேர்ந்தது விசித்திர அனுபவம். 

ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு கட்சித் தோழரின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் வழி மறித்து, கடன் பாக்கிக்காகக் காரைப் பறிமுதல் செய்வதாகச்  சொல்லியிருக்கிறார்கள். உள்ளே இருப்பவர் யாரென்று எடுத்துச்  சொல்லியும் வங்கியின் சார்பில் வந்திருந்த அடியாட்களுக்கு உறைக்கவில்லை. போலீஸ் வருவதைப் பார்த்ததும் சாவியுடன் ஓடிவிட்டனர்.

ஒரு வங்கி இப்படி ஈட்டிக்காரன் போல நடுரோட்டில் அடிதடியில் இறங்குமா என்று நல்லகண்ணுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். வங்கிக் கடனிலும் அதன் கிரெடிட் கார்டு வலையிலும் சிக்கிய பல ஆயிரம் பேர் தினந்தோறும் இந்த ரவுடித்தனத்துக்கு இலக்காகின்றனர். தவணை கட்டாதவர்களின் வீடு, அலுவலகத்துக்குக்  குண்டர்களை அனுப்பி அசிங்கப்படுத்துவது, மிரட்டுவது, தாக்குவது தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகளுக்கு பழகிப்போன வழிமுறைகள். அவமானம் தாங்காமல் நிறைய பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு நிபந்தனைகள் விதித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.  போலீசை வங்கிகள் வசப்படுத்தி விடுவதால் புகார்கள் அமுக்கப்படுகின்றன. வழக்கு வந்தாலும் ‘வசூலுக்குச் செல்பவர்கள் ஏஜன்சி ஆட்கள்; எங்கள் ஊழியர்கள் அல்ல’ என சாக்கு சொல்லி வங்கிகள் தப்பிவிடுகின்றன.

சிக்கிக் கொள்ளும் அடியாள் ஏஜன்சி பெயரை மாற்றிக் கொண்டு அதே வங்கிக்குச்  சேவையைத்  தொடர்கிறது. பணபலத்தின் உதவியால் நாடறிய நடக்கும் இந்த அடாவடியை எவராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை.  தாமிரபரணியில் மணல் கொள்ளைக்கு முடிவுகட்டிய நல்லகண்ணு, வங்கிகளின் வசூல் கொடுமைக்கு எதிராகவும் உரிய மேடைகளில் குரல் கொடுத்தால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற ஆசைப்படும் நடுத்தர வர்க்கத்துக்கு நம்பிக்கை பிறக்கும்.

நல்லகண்ணுவுடன் ஓர்  நாள் அனுபவம்  காணொளிக்காட்சி

0 comments:

Post a Comment

Kindly post a comment.