Thursday, September 1, 2011

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியோரை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு தடை




http://www.virakesari.lk/
ஆஸ்திரேலியாவுக்கு புகலிடங்கோரி வந்தவர்களை மலேசியாவிலுள்ள தடுப்பு நிலையங்களுக்கு மாற்றும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என அந்த நாட்டு உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவுடன் அவுஸ்திரேலியா செய்து கொண்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையானது அவுஸ்திரேலியா தனது 800 புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து அதற்குப் பதிலாக மலேசியாவிலிருந்து 4 வருட காலத்திற்கு 4000 அகதிகளை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது.

ஆனால், அவுஸ்திரேலிய நீதிமன்றம் மலேசியா, அகதிகளுக்கு சட்டப் பிரகாரம் சரியான பாதுகாப்பை வழங்கக் கூடிய நாடல்ல எனத் தெரிவித்து மேற்படி உடன்படிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பானது அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பாரிய அடியொன்றாக அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது.

இத்தீர்ப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் விபரிக்கையில், தாம் இத்தீர்ப்பால் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினார்.

இன்று உயர்நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட தீர்மானம் முழுமையாக ஏமாற்றம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆட்கடத்தலை ஒரு வாணிபமாக மேற்கொள்பவர்களின் நடவடிக்கைகளை முறியடிக்கும் எமது முயற்சிகளுக்கு இந்தத் தீர்ப்பு பாரிய அடியாக உள்ளது என கிறிஸ் போவன் கூறினார்.இத்தீர்ப்பு குறித்து அகதிகளுக்காக வாதாடிய சட்டத்தரணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இந்து சமுத்திரதீவான கிறிஸ்மஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள், மேற்படி தீர்ப்பு தொடர்பில் கேள்விப்பட்டதும் கைதட்டி ஆரவாரம் கைது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் ஜூலியா கில்லார்ட்டின் தொழிற்கட்சி அரசாங்கம் புகலிடம் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக நாட்டு மக்கள் மத்தியில் கண்ணோட்டம் ஏற்படுவதை தவிர்ப்பதையும் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடங்கோரி வருபவர்களையும் ஆட்கடத்தலில் ஈடுபடுவர்களையும் தடுப்பதையும் மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு முறையற்ற விதத்தில் வந்த 800 புகலிடக்கோரிக்கையாளர்களை, அவர்களது அகதிகள் தகுதி நிலை பரிசீலிக்கப்படும் வரை மலேசியாவுக்கு இடமாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அவர்கள் மலேசியாவில் ஏற்கனவே அகதிகள் அந்தஸ்து பரிசீலிக்கப்படும் வரை காத்திருக்கும் பெருந்தொகையானோர்களுடன் இணைத்துக் கொள்ளப்படவிருந்தனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.