Thursday, September 1, 2011

தமிழகம்...தண்ணீர்...தாகம் தீருமா?

பிரபாகரனுக்கு நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை நேரிற் சென்று வழங்கிவிட்டுவந்தவர், பழ.கோமதிநாயகம். அவர் எழுதிய தமிழகம்...தண்ணீர்...தாகம் தீருமா? என்ற புத்தகம் குறித்துச் சிறிது பார்ப்போம். இவர் பொறியாளரா? தமிழ்ப் பேராசிரியரா? என்ற ஐயப்பாடு புத்தகத்தைப் படிக்கும் பொழுது எல்லோருக்கும் முதலில் ஏற்படும்.

ஏனெனில், திருக்குறள், தொல்காப்பியம், மதுரைக் காஞ்சி, புறநானூறு, ஆகியவற்றிலிருந்தெல்லாம் பாடல்களை மேற்கோள்காட்டி விளக்குகின்றார். பாரதி இன்றிருந்திருந்தால், “ நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால், தண்ணீர் குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்று பாடியிருப்பார் என்று இன்றைய சமூகத்தில் தண்ணீர் மீது நிலவும் அக்கறையின்மையையும் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆந்திராவில் உள்ளது இராஜமகேந்திரவரம் (ராஜமுந்திரி) . அங்கு சென்றவர்களுக்கு சர்.ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியியல் வல்லுநரைத் தெரியாமலிருக்காது. அவர் மக்களின் நலனுக்காகத் தவளேஸ்வரம் என்ற இடத்தில் கோதாவரி நீரைத் தேக்கி அப்பகுதியைச் செழுமைப்படுத்தினார். அவரைத் தெய்வமாகவே அப்பகுதி மக்கள் போற்றுகின்றனர். அவரது பேரன் கூட வந்து சென்றது வரலாறு.

அவர், சொல்கின்றார். “இந்தியாவில் உள்ள ஏராளமான பாசன அமைப்புகளை உருவாக்கியவர்களைவிட ஆங்கிலேயர்கள் தாழ்ந்தவர்கள். சண்டை இடுவதில் மட்டுமே ஆங்கிலேயர்கள் தேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள பாசன அமைப்புகளைப் போல புதிதாக உருவாக்கவும் தெரியாது; அவற்றைப் பராமரிக்கவும் தெரியாது. இது உண்மை.” இது ஒன்று போதாதா நமது முன்னோர் நீர் மேலாண்மையில் தேர்ச்சிபெற்றவர்கள் என்பதை நிரூபிக்க.

இலஞ்சி, கயம், கண்ணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம் என்று பல்வேறு நீர்நிலைகளின் பெயர்களை உரிச்சொல் நிகண்டு என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி முன்னோர் நீர்வளம் பேணிய மாண்பினைச் சுட்டுகின்றார், ஆசிரியர்..

தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டபோதும், பல்லவர்கள் வாதாபியை எரித்தபோதும், முகலாயர் படையெடுப்பிலும், பிரிட்டிஷ், டச்சு, போர்களிலும் , யாரும் எந்தச் சூழலிலும் பாசனக் கட்டுமானங்களோ, ஏரிகளோ சேதப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆனால், சுதந்திரத் தமிழ்நாட்டில் நாகர்கோவில், தேவாரம், மதுரை, திருச்சி, தஞ்சை, பெரியகுளம், சென்னை முதலிய இடங்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பல்வேறு வகையில் அபகரிக்கப்பட்டு கட்டிடங்களாகியுள்ளதைச் சுட்டுகின்றார். வரம்பு மீறி நடக்கும் மணல் கொள்ளயை இவரைவிட இனி ஒருவர் எழுதிவிட முடியாது.

ஏரிகளைச் செப்பனிடும் முயற்சிகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.நமது தமிழ் நாட்டில் உள்ள ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு6000 மி.க.மீட்டர் ஏரிகளை உயிரோட்டம் உள்ளதாகச் செய்தாலே நமது தண்ணீர் பிரச்சினை தீஈர்ந்துவிடும் என்று வழியும் சொல்லுகின்றார்.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு பள்ளிகளிலேயே கற்பிக்கப்படல் வேண்டும். ஆறுகளும் குளஙகளும் மக்கள் சொத்து. மக்களால்தான் அவற்றைக் காப்பாற்ற முடியும்.

15000கனமீட்டர் நீர் இருந்தால்100நாடோடிகளுக்கும்400கால்நடைகளுக்கும்மூன்று ஆண்டுகளுக்குப் போதும் அதுவே100நகர்ப்புறக் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத்தான் வரும்.ஆனால், இந்தத் தண்ணீரை100நட்சத்திர விடுதிகள்55நாட்களில் காலி செய்துவிடும்.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் கூட குடிநீர் வசதியை மக்களுக்கு வழங்கவேண்டுமென்ற கரிசனம் கொண்ட ஆட்சியாளர்கள்: இருந்தனர். சுதந்திர இந்தியாவில், காவிரி நதி நீர்ப் பங்கீடு , முல்லை பெரியார் அணைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.

பாவை பப்ளிகேஷன்ஸ்,சென்னை600014. 28482441 28482973
pavai123@yahoo.com0 comments:

Post a Comment

Kindly post a comment.